இலக்குமொழி
ilakkumoḻi
மொழி கற்றல் – கற்பித்தல் துறையிலும், மொழிபெயர்ப்புத் துறையிலும் பயன்படுகின்ற சொற்றொடரே, இலக்குமொழி ஆகும்.
மொழி கற்றல் – கற்பித்தல் துறையிலும், மொழிபெயர்ப்புத் துறையிலும் பயன்படுகின்ற சொற்றொடரே, இலக்குமொழி ஆகும்.
குழந்தைப் பருவத்தைக் கடப்பதன் மூலமே குழந்தை தனது முதன்மொழியைத் தாய்மொழியாகக் கற்றுக் கொள்கிறது. மொழியைத் தாய்மொழியாகக் கற்றுக் கொள்ளுதலும் கற்பித்தலும் ஒருவகை. தாய்மொழி அல்லாத பிறமொழியைச் கற்றுக் கொள்ளுதலும் கற்பித்தலும் மற்றொரு வகை.
தாய்மொழி அல்லாதவர்களுக்காக வகுப்பறை போன்ற திட்டமிடப்பட்ட சூழல்களில் (Formal Situations) கற்றுக் கொடுக்கின்ற – கற்றுக் கொள்கின்ற தாய்மொழி அல்லாத எந்த ஒரு மொழியுமே இலக்கு மொழிதான் (Target Language). எடுத்துக்காட்டாக, தமிழைத் தாய்மொழியாகப் பேசு, எழுதக் கற்றுக் கொண்டவர்கள் இந்திமொழி கற்கிறார்கள் என்றால் இந்தி இலக்குமொழியாகிறது; தாய்மொழி தமிழ் மூலமொழி (Source Language) ஆகிறது.
இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர்களுக்குத் தமிழ் கற்பிக்கப்படும்போது தமிழ் இலக்கு மொழியாகிறது; தாய்மொழி இந்தி மூலமொழியாகிறது. வேறுவிதமாகச் சொன்னால், குழந்தைப் பருவத்தில் கற்ற அந்த முதன் மொழி – தாய்மொழி மூலமொழியாகிறது; அதன் பின்னர்க் கற்சிற ஒவ்வொரு மொழியுமே இலக்குமொழியாகிறது.
இலக்குமொழி என்பதனையே பிறமொழி என்றும், இரண்டாம் மொழி என்றும், அயல் மொழி என்றும் வெவ்வேறு பெயர்களால் குறிப்பிடுகின்றனர்.
பிறமொழி கற்பிக்கும்போது மூலமொழிக் கூறுகளையும் (அதாவது கற்பவரது தாய்மொழிக் கூறுகளையும்) இலக்குமொழிக் கூறுகளையும் (அதாவது புதிதாகக் கற்பிக்கப்படப்போகும் பிறமொழிக் கூறுகளையும்) ஒப்பிட்டு, இரண்டு மொழிகளுக்கும் இடையே மொழி அமைப்பில் காணப்படும் ஒற்றுமை வேற்றுமைகளை இனங்கண்டு கொள்வர். இச்செயல்முறை ஒப்பு மொழியியலின் பாற்படும்.
பிதமொழி கற்கும்போது, முன்பே கற்றுத் தெளிந்திருக்கும் முதன்மொழியின் (மூலமொழி) மொழிக் கூறுகள் குறுக்கிட்டு, பிறமொழி கற்றலில் தொல்லை விளைவிக்கலாம். இலக்கு மொழியில் மூலமொழியின் மொழிக்கூறுகள் குறுக்கீடுகளாகத் தோன்றலாம். எடுத்துக்காட்டாக, இந்திமொழியில் குறில்–நெடில் வேறுபாடு எகரத்திலும் ஒகரத்திலும் கிடையாது. இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் தமிழ் கற்கும்போது, தொடக்க நிலையில் தமது தாய்மொழியில் இயல்பாக அமைந்துள்ள இம்மொழிக் கூறுகளின் குறுக்கீட்டால், தமிழ்ச் சொற்களான எலி, பெட்டி என்பவற்றைத் தவறாக *ஏலி, *பேட்டி எனவும், தமிழ்ச் சொற்களான ஒன்று. தொங்கு என்பவற்றை தவறாக *ஓன்று, *தோங்கு எனவும் ஒலிக்கலாம்; எழுதலாம்.
இந்தி மொழியில் இரண்டாம் வேற்றுமைக்கும் நான்காம் வேற்றுமைக்கும் பொதுவாக உள்ள வேற்றுமை உருபு ‘கோ’ என்பதாகும். இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் தமிழ் கற்கும் தொடக்க நாள்களில் இலக்குமொழியான தமிழைப் பேசும்போதும் எழுதும்போதும் மூலமொழியான இந்தி மொழியின் இம் மொழிக் குறுக்கீட்டால் எந்தத் தமிழ் வாக்கியங்களில் நான்காம் வேற்றுமை உருபான ‘கு’வைப் பயன்படுத்துவது, எந்தத் தமிழ் வாக்கியங்களில் இரண்டாம் வேற்றுமை உருபான ‘ஐ’யைப் பயன்படுத்துவது என்பது புரியாமல் தடு மாறிப் பின்வரும் இலக்கணப் பிழையான வாக்கியங்களைப் பேசவும் எழுதவும் நேரிடலாம்.
:: நான் அவனுக்குப் பார்த்தேன்
:: நான் அப்பாவைக் கொடுத்தேன்
பிறமொழி கற்பிக்கும்போது அம்மொழியில், அதாவது இலக்கு மொழியில், நேரிடுகின்ற இவை போன்ற குறுக்கீடுகள் நடைமுறைச் சிக்கல்கள் ஆகும். இந்நடைமுறைச் சிக்கல்களைத் தீர்ப்பதற்குக் கற்பவரது தாய்மொழி (மூலமொழி) உதவுகிறது. மொழி கற்பவர் தம் பிழைகள் இலக்குமொழியில் காணப்படும் போது அப்பிழைகளுக்கான காரணத்தை, மூலத்தையும் மூலமொழிக் கூறுகளையும் ஒப்பிட்டு நோக்குவதால் எளிதில் கண்டுபிடிக்க முடிகிறது. காரணம் கண்டுபிடிக்கப்படும்போது பிழை நீக்க ஒலிப்பு முறைப் பயிற்சி (Remedial Pronounciation Drill), பிழை நீக்க வாக்கியப் பயிற்சி (Remedial Structural Drill) போன்றவற்றைக் கொடுக்கவும்; இப்படிப்பட்ட பிழைநீக்கப் பயிற்சிகள் கொடுப்பதன் மூலம் இலக்குமொழியைச் செவ்வையாகக் கற்பிக்கவும் முடிகிறது.
மூலமொழியில் உள்ள நூல்களை எந்த மொழியில் மொழி பெயர்க்கிறோமோ அந்த மொழியையும், ஒரு மொழியில் உள்ள சொற்களைக் கடன் வாங்கி எந்த மொழியில் பயன்படுத்துகிறோமோ அந்த மொழியையும் இலக்குமொழி என்பர். வி.ஞா.
துணை நூல்கள்
Lado, Robert, Language Teaching: A Scientific Approach, Tata McGraw – Hill Publishing Co., Ltd, New Delhi, 1964.
Thirumalai, M.S., Learning Theories and Linguistics: An Introduction, Tamil Nuulagam, Madras, 1977.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 296)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/f3cs84hf/
தமிழ்“இலக்குமொழி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/f3cs84hf/APA
Oliyon Research. (2026). இலக்குமொழி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/f3cs84hf/MLA
"இலக்குமொழி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/f3cs84hf/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment