இறைநிலைச் செயல்
iṟainilaic ceyal
குற்றவியல் சாராததும் ஒப்பந்த அடிப்படையில் ஏற்படாததுமான ஒருவனுக்கு இழைக்கப்படும் தவற்றைத் தீங்கு என்று சட்டம் கூறும்.
குற்றவியல் சாராததும் ஒப்பந்த அடிப்படையில் ஏற்படாததுமான ஒருவனுக்கு இழைக்கப்படும் தவற்றைத் தீங்கு என்று சட்டம் கூறும். இழப்பீடு (Damages) கேட்பதுதான் அவ்வாறான தீங்கிற்குப் பரிகாரமாகும். ஆங்கில நாட்டில் பொது நிலைச் சட்டத்தின் (Commen Law) கோட்பாட்டின்படி, தீங்கியல் சட்டம் (Law of Torts) செயற்பட்டு வருகிறது. இக்கோட்பாடு இந்தியாவிலும் செயல் முறையில் இருக்கிறது. தீங்கியல் சட்டம் இதுவரை இந்தியாவில் முழுமையாகத் தொகுக்கப்படவில்லை.
தீங்கியல் சட்டத்துக்குச் சில விதி விலக்குகள் உள்ளன. அவற்றுள் ஒன்று, இறை நிலைச் செயல் (Act of State) ஆகும். இதைச் சிலர் அரசின் தனிச் செயல் என்றும் கூறுவர். தீங்கிழைத்த செயல் உண்மையாகவே இறை நிலைச் செயலாக இருந்தால், அதற்காக அந்த அரசின் மீது வழக்குத் தொடர முடியாது. இறை நிலைச் செயல் என்ன என்று விளக்குவதற்குமுன், ஆங்கில நாட்டில் ஆதியிலிருந்த நிலையைக் குறிப்பிடுவது பொருத்தமாகும்.
அரசன் தவறு ஏதும் செய்ய முடியாது என்பது ஆங்கில நாட்டுக் கோட்பாடு. அவன் நேரடியாகச் செய்யும் செய்கைகள் தவறாக இருக்க முடியாது என்று சட்டம் அனுமானிக்கிறது. அவனது சட்டப் புறம்பான ஆணையின் அடிப்படையில் அவன் பணியாள் தீங்கிழைத்தால், அவனது ஆணையைச் சட்டப்படியான ஆணையாகக் கருதமுடியாது. எனவே, ஆங்கில நாட்டில் அரசன் தீங்கியல் சட்டத்துக்கு அப்பாற்பட்ட நிலையிலிருந்தான். இந்த நிலை பின்னர் மாற்றப்பட்டுவிட்டது. முடியரசு நடவடிக்கைகள் சட்டம் (Crown Proceedings Act, 1947) ஆங்கில நாட்டில் 1947–ஆம் ஆண்டில் இயற்றப்பட்டது. இச்சட்டத்தின்படி சில கட்டங்களில் அரசு ஊழியர்கள் இழைக்கும் தீங்குக்கு அரசன் மீது வழக்குத் தொடர வகை செய்யப்பட்டுள்ளது.
கிழக்கிந்திய வாணிகக் குழு (The East India Company) இந்தியாவை ஆட்சி செய்த போது. அதற்கு இரண்டுவிதத் தோற்றங்கள் இருந்தன. ஒன்று, வாணிகக் குழுவாக இயங்கிய செயல்; மற்றொன்று, இந்தியாவில் அது கைப்பற்றிய பகுதிகளை ஆங்கில அரசின் சார்பாளராக இருந்து ஆட்சி புரிந்த செய்கை. தீங்கியல் சட்டத்திலிருந்து ஆங்கில அரசனுக்கு அளிக்கப்பட்டிருந்த முழு விதிவிலக்கு கிழக்கிந்திய வாணிகக் குழுவிற்கு அளிக்கப்படவில்லை. கி.பி. 1858–ஆம் ஆண்டில் இந்திய ஆட்சி உரிமையை ஆங்கில அரசு கிழக்கிந்திய வாணிகக் குழுவிட- மிருந்து நேரடியாக ஏற்றபோது, அதன் மீது எந்த நிலையில் தீங்கியல் சட்டப்படி வழக்குத் தொடர முடியுமோ, அந்த நிலையில் இந்திய அரசு மீதும் வழக்குத் தொடரலாம் என்று வகை செய்யப்பட்டுள்ளது. இந்தியா குடியரசான பின்னும், இந்திய அரசியல் திட்டம் 300–ஆம் பிரிவில் அதே வகையில் இந்திய அரசு மீது வழக்குத் தொடர வகை செய்யப்பட்டுள்ளது. எனவே, தீங்கியல் சட்டத்திலிருந்து அரசனுக்கு அளிக்கப்பட்டிருந்த முழுமையான விதிவிலக்கு இந்திய அரசுக்குக் கிடையாது.
பொதுவாக, அரசின் ஊழியர்கள் தங்களது சொந்த முறையில் செய்யும் தீங்கிற்கு (Offence) அரசு பொறுப்பாகாது. அரசு ஊழியர்கள் தங்கள் கடமைகளை நிறைவேற்றும்போது ஏற்படும் தீங்கிற்கு மட்டில். குறிப்பிட்ட நிலையில் அரசு பொறுப்பாகும். தீங்குக்குக் காரணமான செய்கை அரசால் அனுமதிக்கப்பட்டிருக்க வேண்டும் அல்லது ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அச்செய்கை இறை நிலைச் செயல் என்ற பிரிவில் வருமானால், அதற்கு அரசு பொறுப்பாகாது.
அரசின் செய்கைகளை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். உள்நாட்டுச் சட்டத்துக்கு அப்பாற்பட்ட செயல்கள் முதல்வகை; உள்நாட்டுச் சட்டத்துக்கு உட்பட்ட செயல்கள் இரண்டாம் வகை. முதல் வகைச் செயல்கள்தாம் இறைநிலைச் செயல்களாகும். இரண்டாம் வகைச் செயல்கள் தீங்கியல் சட்டத்துக்கு உட்பட்டவை.
அரசு மற்றொரு நாட்டுடன் போர் தொடுப்பது, மற்றொரு நாட்டுடன் சமாதான உடன்படிக்கை செய்வது, மற்றொரு நாட்டின் எல்லையைத் தன்னுடைய எல்லையுடன் சேர்ப்பது ஆகியவை முதல் வகையைச் சேர்ந்தவை. அச்செய்கைகள் சம்பந்தமாக அந்த அரசு மீது தீங்கியல் சட்டப்படி வழக்குத் தொடர முடியாது. அயல்நாட்டு எதிரிக்கு எவ்விடத்திலும் இழைக்கப்படும் தீங்குச் செயல் முதல் வகையாகும். அதுபோல், அயல்நாட்டில் அயலவனுக்கு இழைக்கப்படும் தீங்குச் செயல் முதல் வகையாகும். உள்நாட்டில் வசிக்கும் அயல்நாட்டு நண்பனுக்கும் உள்நாட்டுக் குடிமகனுக்கும் இழைக்கப்படும் தீங்கு இரண்டாம் வகையில் சேரும். ஆனால், அச்செயல் போர்க்காலத்தில் செய்யப்பட்டிருந்தால், அது முதல் வகையைச் சேர்ந்துவிடும்.
அரசுச் செயல் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின்படி ஒரு செய்கை அரசு ஊழியனால் செய்யப்பட்டதா இல்லையா என்பதைக் கண்டுபிடிப்பதற்கு அதாவது, மேற்கூறிய முதல் வகையைச் சேர்ந்த செய்கையா இல்லையா என்பதைக் கண்டுபிடிப்பதற்கு ஒரு சோதனை முறை உள்ளது. குறிப்பிட்ட செய்கையை அரசு தனியாள் மூலம் அல்லாது, தன் ஊழியன் மூலம்தான் செய்ய வேண்டிய நிலை இருந்ததா என்பது தான் அச்சோதனை முறையாகும். தன் ஊழியனைத் தவிர்த்து வேறு யார் மூலமும் அச்செய்கையை நிறைவேற்ற முடியாது என்பதாயின், அச்செய்கை தீங்கியல் சட்டத்துக்கு அப்பாற்பட்டதாகும்.
சில வழக்குகளில் செய்யப்பட்ட முடிவுகள் இனிக் குறிப்பிடப்படும். இசுபெயின் (Spain) நாட்டைச் சார்ந்த குடிமகன் ஒருவன் ஆங்கில ஆட்சிக்குட்படாத ஆப்பிரிக்காக் கண்டப் பகுதியில் நடத்தி வந்த அடிமைகளின் குடியேற்றத்தை (Colony) ஆங்கிலக் கப்பற்படைத் தளபதி ஒருவன் அழித்து விட்டான். அச்செய்கையை ஆங்கிலத் தளபதியின் மேலிடம் ஏற்றுக் கொண்டது. ஆங்கில நாட்டில் அந்த ஆங்கிலத் தளபதி மீது இசுபெயின் நாட்டுக்காரன் தீங்கியல் சட்டப்படி வழக்குத் தொடர முடியாது என்றும், ஆங்கிலத் தளபதியின் செயல் இறைநிலைச் செயல் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. போர்ப் பயிற்சிக்காகக் குண்டு வீசிப் பழகிய செய்கை இறை நிலைச் செயல் என்று ஒரு வழக்கில் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு மாவட்ட ஆட்சித் தலைவரின் பயன்பாட்டிற்கு ஒதுக்கப்பட்ட சிற்றூர்தியை (Jeep) அரசால் பணியமர்த்தப்பட்ட ஓட்டுநர் பணிமனையிலிருந்து மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்துக்கு ஓட்டி வரும் வழியில், நடந்து சென்ற ஒருவர் மீது மோதிக் கொன்று விட்டார். மாநில அரசு மீது தீங்கியல் சட்டப்படி வழக்குத் தொடரப்பட்டது. ஓட்டுநரின் செய்கை இறை நிலைச் செயல் அன்று என்று முடிவு செய்யப்பட்டது.
இராணுவப் பயிற்சிப் பள்ளிக்குத் தேவைப்பட்ட இயந்திரத்தை இராணுவத்தைச் சேர்ந்த ஓட்டுநர் பணிமனையிலிருந்து, இராணுவப் பயிற்சிப் பள்ளிக்கு இராணுவப் பேரூர்தியில் (Lorry) கொண்டுவரும் வழியில் கவனக் குறைவால் ஒருவர் மீது மோதிக் கொன்று விட்டார். அச்செய்கை இறை நிலைச் செயல் அன்று என்று முடிவு செய்யப்பட்டது. இராணுவத்தில் இல்லாத ஒருவர் மூலம் கூட அவ்வியந்திரத்தை எடுத்து வர ஏற்பாடு செய்திருக்க முடியும் என்பதால், அது இறை நிலைச் செயல் அன்று என்று அவ்வழக்கில் முடிவு செய்யப்பட்டது.
ஓர் அரசாங்க மருத்துவமனையில் பிறந்த குழந்தை அம்மருத்துவமனையில் பணிபுரியும் ஊழி- யர்களின் கவனக் குறைவால் காணாமல் போய்விட்டது. அச்செய்கைக்கு இந்திய அரசு பொறுப்பாகாது என்று சென்னை உயர் நீதிமன்றம் முடிவு செய்தது. பொது மக்களின் வரிப்பணத்திலிருந்து பொது மக்களின் நலனுக்காக மருத்துவமனை நடத்தப்படுவதாகவும், வணிக நோக்கத்துடன் மருத்துவமனை நடத்தப்படவில்லை என்றும், எனவே, அவ்வாறான மருத்துவமனையை நடத்தும் செய்கை இறை நிலைச் செயல் என்றும், அவ்வாறான மருத்துவமனையில் ஏற்பட்ட தீங்கியலுக்கு அரசு பொறுப்பாகாது என்றும் முடிவு செய்யப்பட்டது. மருத்துவமனையைத் தனியாட்கள்கூட நடத்த முடியும் என்பதால் மட்டில் அம்முடிவை மாற்றுவதற்கில்லையென்றும் சென்னை உயர்நீதிமன்றம் அவ்வழக்கில் சுட்டிக்காட்டியுள்ளது.
துணை நூல்
Ratanlal, R. and Dhirajlal, K.T., The Law of Torts, Wadhwa Sales Corporation, Nagpur, 1973.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 531)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/f25w3dby/
தமிழ்“இறைநிலைச் செயல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/f25w3dby/APA
Oliyon Research. (2026). இறைநிலைச் செயல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/f25w3dby/MLA
"இறைநிலைச் செயல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/f25w3dby/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment