இருத்தல் கொள்கையும் கல்வியும்
iruttal koḷkaiyum kalviyum
இருத்தல் கொள்கை என்பது ‘மனிதனின் நிலையை அதன் முழுமையில் நேருக்குநேர் சந்தித்து, மனிதனுடைய இருத்தலின் அடிப்படைத் தன்மைகள் யாவை?
இருத்தல் கொள்கை என்பது ‘மனிதனின் நிலையை அதன் முழுமையில் நேருக்குநேர் சந்தித்து, மனிதனுடைய இருத்தலின் அடிப்படைத் தன்மைகள் யாவை? அவன் அதனை எவ்வாறு அத்தன்மைகளிலிருந்து தானாகப் பொருள் கொள்ள முடிகிறது? என்று கேட்கும் ஒரு மெய்ம்மையியல் ஆகும்’ என்று வில்லியம் பிரட்டு (William Breet – 1969) கூறுகிறார். ‘இருத்தல் சாரத்திற்கு முந்தியது’ (Existence is prior to Essence) என்பதே இச்சிந்தனையின் மையக் கொள்கையாகும், மனிதன் முதலில் இருக்கிறான்; பின்பு அவன் சுதந்திரமாக இருப்பதால், தனது சாரத்தை அவனே படைக்கிறான் என்னும் கருத்தை இச்சிந்தனை வலியுறுத்துகிறது. தனிமனிதனின் சிறப்பு, இக்கொள்கையில் பெரிதும் பேசப்படுகிறது. மேக்சு விங்கோ (Max Wingo) கூறுவது போல இருத்தல் கொள்கை, தனி மனிதனின் சிறப்பிடம் குறைக்கப்படுதற்குக் காரணமான மக்கள் சமுதாயம் (Mass Society), மக்கள் சமயம் (Mass Religion), மக்கள் கல்வி (Mass Education), மக்கள் தொடர்பு (Mass Communication) ஆகியவற்றை எதிர்த்தெழும் ஒரு சிந்தனையாகும். இச்சிந்தனையில் சமுதாயத்தைக் காட்டிலும் தனி மனிதனின் சிறப்பு மிகவும் உயர்வுபடுத்தப்படுகிறது. இந்த மெய்ம்மையியல், மனிதனுக்கு, மனித உணர்வுகளுக்கு, மனித வாழ்விற்குச் சொந்தமானது. இவ்வகையில் இக்கொள்கை அறிவு சார்ந்தது என்பதை விட மிக்க நடைமுறை அல்லது வாழ்வு சார்ந்தது என்பதே பொருந்தும்.
இருத்தல் தொள்கையாளர்களும் குறிப்பிடத்தகுந்தோர், கீர்க்கிகார்டு (Kierkegaard}, மார்சல் (Marcel), சாசுபர்சு (Jaspers) போன்ற இறை ஏற்பாளர்களும் (Theists) சார்த்துரே (Sartre) நீட்சே (Nietzche), எய்டகர் (Heidegger) போன்ற இறை எதிர்ப்பாளர்களும் (Atheists) ஆவர். இவர்களுள் கீர்க்கிகார்டு (1817–1855) என்ற தென்மார்க்குச் (Denmark) சிந்தனையாளர்தாம் இக்கொள்கையின் தந்தையாகக் கருதப்படுபவர். சார்த்துரே (1905–1980) என்ற பிரெஞ்சுச் சிந்தனையாளர் இருபதாம் நூற்றாண்டு இருத்தல் கொள்கை மறுமலர்ச்சியின் தலை சிறந்தவராகக் கருதப்படுகிறார்.
இக்கொள்கையாளர்கள் கல்வியின் சிக்கல்களை முறைப்படி அணுகவில்லை என்பதும் இருந்தக் கொள்கையானது நிறுவனப்படுத்தப்பட்ட கல்வி முறையை எதிர்க்கிறது என்பதும் ஏற்கப்பட்ட உண்மைகள். இருப்பினும் விரிந்த நோக்கில் அணுகும் போது மனிதனின் இருத்தல் நிலை, அதன் தன்மை, பொருள் ஆகியவை கல்வியின் சிக்கல்களாக அமைகின்றன. இச்சிக்கல்களைப் பற்றி இருத்தல் கொள்கையாளர்களும் மிகுந்த ஆர்வம் செலுத்தியுள்ளனர். இந்த முறையில் கல்வியுடனான இருத்தல் கொள்கையின் தொடர்பை ஒருவரும் மறுக்க இயலாது. ஆனால், இக்கொள்கை, கல்வியின் சிக்கல்- களுக்கு ஏற்கனவே உருவாக்கப்பட்ட தீர்வுகளைத் தருவதில்லை.
இருத்தல் கொள்கைச் சிந்தனை, சமுதாயத்தில் இருக்கும் வாழ்க்கை முறை, கல்வி ஆகியவற்றை எதிர்த்துப் போராட்டம் செய்வதாக அமைகிறது. இக்கொள்கை வரைமுறைப்படுத்தப்பட்ட எந்தப் பயிற்சியையும் எதிர்க்கிறது. இப்போக்கில் இருத்தல் கொள்கை, முறை சாராக்கல்வி (Non–formal), முறையில்லாக் (In–formal) கல்வி ஆகியவற்றை வரவேற்கும் இக்காலச் சிந்தனைக்கு உகந்ததாக அமைகிறது. இருத்தல் கொள்கையின்படி சுதந்திரத் தனிமனிதன் தன்வளர்ச்சியை இலக்காகக் கொள்வதன் மூலம் மட்டும்தான், பள்ளியின் இருத்தலைத் தேவை என்று காட்ட இயலும். இதன் பொருள்: அ) கூட்டத்தைப் தொடர்வதிலிருந்து தனிமனிதனை விடுவிப்பது ஆ) மனிதனை இவ்வுலகில் தனிமை, பாதுகாப்பற்ற தன்மை ஆகியவற்றைப் புரிந்து கொள்வதற்குச் சுதந்திரமாக்குவது, இ) தன் சுதந்தரத்தை விருப்பப்படி பயன்படுத்துவதும், அதன் விளைவுகளை ஏற்பதும் பற்றி, அவனைச் சுதந்திரமாக உணர வைப்பது, ஈ) எல்லாச் செயல்களுக்கும் மனிதன்தான் அடிப்படை என்ற சுதந்திர உணர்வு கொள்ள வைப்பது என்பனவாம்.
நெல்லரின் (Kneller) எருத்துப்படி, பள்ளியின் சிறப்பான குறிக்கோள், ஒழுக்கம், சுதந்திரம் ஆகியவற்றை இருத்தல் கொள்கை வளர்க்கிறது. பள்ளியின் நோக்கம், இளம் குடிமக்களிடம் தற்சார்பையும் தன்மானத்தையும் கூட்டுவது என்பார் கீர்க்கார்டு. இருத்தல் கொள்கைக் கல்வித்திட்டம் மனித உணர்வுகளுக்கான கல்வியாகும். பொதுவாக இச்சிந்தனையாளர்கள் கல்வித்திட்டத்தில் அறிவியலைக் காட்டிலும் வாழ்வியலுக்கு முதலிடம் தருகிறார்கள். மனிதனின் உள்ளுறையும் குற்றம், பாவம், துன்பம், வருத்தம், இறப்பு, வெறுப்பு, காதல் முதலானவற்றை வெளிப்படுத்துவதில் வாழ்வியல் சிறந்து விளங்குகிறது. எனவே சார்த்துரே, எய்டகர் போன்றோரின் கருத்துப்படி மனிதனின் இருத்தல் நிலை, அவனுடைய எல்லாப் பரிதாப குணங்கள் மூலமாகவும் மிகத் தெளிவாக வாழ்வியலில்தான் விளக்கப்படுகிறது. இயற்கை மற்றும் மனிதனுடனான தொடர்பு முறையில், அறிவியலை உணர்வற்ற, தனித்த, பொருள் சார்ந்ததாகவும், நுண்ணறிவு சார்ந்த முயற்சியில் இதனை வெறும் புரியாச் சிந்தனையாகவும் காண்பதே இருத்தல் கொள்கையாளரின் அறிவியல் எதிர்ப்பாக அமைவதாக விங்கோ (Wingo) என்பவர் கூறுகிறார்.
இன்று, கணிப்பான் பொறிகள் பெருகிவிட்ட உலகில், மனிதன் உணர்வு குன்றிய நிலையில் வாழ்கிறான். ஆகவே, இக்கால மனிதனுக்கு மனித உணர்வுகளைக் கற்பிக்கும் இருத்தல் கொள்கைக் கல்வியணுகுமுறை மிகவும் பொருத்தமுடையதாக அமைகிறது. கீர்க்கார்டு குறிப்பிடுவது போல, மனிதன் புறப்பொருள் தன்மை (Objectivity) என்ற மாயையில் இருக்கிறான். தன்னிலைத் தன்மை (Subjectivity) என்ற நிலையை அவனுக்கு மீட்டுத் தருவதே கல்வியின் பணியாகும். கல்வித் திட்டம் மனிதனின் அக நிலையை (Inwardness) வெளிக் கொணர்வதாய் இருக்க வேண்டும். இருத்தற் கொள்கைக் கல்வித் திட்டத்தின்படி, உண்மையான அறிவு என்பது, தன்னிலை (Subjective) சார்ந்ததாகும். தனி மாணவர் கற்பித்தல் (Individualised instruction) என்ற கற்பித்தலணுகு முறை இருத்தல் கொள்கைக்கு ஏற்புடையதாகிறது. இருத்தல் கொள்கையில், மாணவர்கள் இவ்வுலகில் தங்களின் சொந்தத் தெரிவுகளைச் செய்யத் தனித்துச் சுதந்திரமாக விடப்பட்டிருக்கின்றனர். ஆகவே, இப்படிப்பட்ட தனிமனிதனின் தெரிவு செய்யும் சக்தியை வளர்ப்பதே இருத்தற் கொள்கைபேசும் ஆசிரியர்களின் பணியாகும். இதனை அடைவதற்குச் ‘சாக்ரடீசுமுறை’க் (Socratic method) கற்பித்தல் விரும்பப்படுகிறது. இதன்படி கற்றல், கற்பித்தல் முறையில் ஆசிரியர், மாணவரிடையேயான உரையாடல் முறை (Dialogue method) வலியுறுத்தப்படுகிறது. கருத்துத் திணிப்பு (Indoctrination) என்பது இருத்தல் கொள்கைக்கு எதிரானது. இச்சிந்தனைப்படி ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களுக்கு எதனையும் ஊட்டுதல் முடியாது. ஆனால் ஆசிரியர்கள், மாணவர்கள் அவர்களாகவே கற்பதற்கு அடித்தளம் அமைக்கின்றனர். இன்றைய கல்வி அறிஞர்கள், இம்முறையைப் பரிந்துரைக்கின்றனர். இருத்தல் கொள்கைப்படி, ஆசிரியர் மாணவனுக்குப் பல சிக்கலான நிலைகளை வெளிக்காட்டி, அவற்றிக்கு அவனாகவே தீர்வு காணுமாறு விடுதல் வேண்டும். ஆசிரியர் தம்மால் முடிந்தவரை வகுப்பறைச் செய்கைகளைக் கற்பவரின் சொந்த அனுபவமாகச் செய்ய விடுதல் வேண்டும். ஆசிரியர்-மாணவர் உறவு “நான்–நீர்” (I–thou) என்ற முறையில், நெருக்கமானதாகவும் ஈடுபாடுள்ளதாயும் அமைய வேண்டும்.
இக்கல்வி முறையில் ஆசிரியர், மாணவர்களின் இருத்தற் காரணம் பற்றிப் புரிந்து கொள்ளும்படி செய்வதற்குத் தளம் அமைக்கவே முடியும். ஆனால், உண்மையில் மாணவர்கள் தாங்களாகவே இதனைப் புரிந்து கொள்ளல் வேண்டும். இதைத்தான் கீர்க்கார்டு, மனிதன் தானாகவே தனது இருத்தலைப் புரிந்து கொள்ள வேண்டும் என்கிறார். மாணவன் தானாகக் கற்றுக் கொள்ளும்போது மட்டுமே, அவன் தான் ஒன்றைச் சாதித்த உணர்வு கொள்ள முடியும். இருந்தற் கொள்கையின்படி மாணவர் தீய நம்பிக்கை நிலையில் இருக்கக் கூடாது. சார்த்துரே விளக்கப்படி தீய நம்பிக்கை என்பது ஒருவன், தான் கட்டாயத் தேவைகளினால் கட்டுண்டிருப்பதாகவும், தனக்குத் தெரிவு செய்ய வழியேயில்லை என்பதாகவும் பாசாங்கு செய்வதில் அடங்கியிருக்கிறது.
மாணவன் தான் எதுவாக இல்லையோ, அதுவாக இருக்கக் கூடாது. அவன் தன்னை அறிந்து தன் இருத்தல், கூட்டத்தில் தன் தனி நிலைமை, சுதந்தரம், பொறுப்புகள் போன்ற மற்றவற்றையும் அறிதல் வேண்டும். இக்கொள்கைப்படி மாணவர் தம் சமுதாயம், பெற்றோர் வேறேதாவது காரணிகள் ஆகியவற்றை விரும்புவதால் தங்கள் செய்கைகளைத் தெரிவு செய்யக் கூடாது. மாறாகத் தங்களது விருப்பப்படி தெரிவு செய்யும் சுதந்திரம் அவர்களுக்கு உண்டு. இச்சூழலில் இதனைப் பற்றிப் பிருபேக்கர் (Brubacher – 1962) கருத்துத் தெரிவிக்கும் போது, இப்படியாக இளைய தலைமுறையின் சில அமைதியற்ற ஆற்றல்கள், குறிப்பாகக் கல்லூரிகளில், தங்களின் முரட்டுத்தனமான நடவடிக்கைகளை இருத்தற் கொள்கையின்படி நேர்மைப்படுத்திக் காட்டுகின்றன என்கிறார். ஆனால், எதையும் செய்வதற்கான இவ்வகைச் சுதந்திரம், கட்டுப்பாடும் பொறுப்பும் கொண்டதாக அமைகிறது.
இருந்தல் கொள்கையாளர் சுதந்திரத்தைய் பற்றி வேறு முறையில் விளக்கந் தருகின்றனர். சார்த்துரே மனிதன் தானாகவே தன்னைச் செய்து கொள்கிறான் என்றும், அவன் சுதந்திரமாக இருப்பதற்கு விடப்பட்டிருக்கிறான் என்றும் குறிப்பிடுகிறார். அதாவது, மனிதன் சுதந்திரத்தையும் அதே காலத்தில் அதனைப் பயன்படுத்துவதில் பொறுப்புணர்வையும் கொண்டுள்ளான். மனிதன் சுதந்திரக் கனியைத் தனது கருத்தின்படி, கசப்பானாலும் இனிப்பானாலும் தானே தன்னந்தனியாகச் சுவைக்க வேண்டும். இருத்தல் கொள்கைச் சுதந்திரம், கட்டுப்படுத்தப்பட்டதாய் அமைகிறது. இச்சிந்தனைப்படி புற ஆற்றல் எதுவும் மனிதன் மீது கட்டுப்பாட்டைத் திணிக்க முடியாது. மனிதன் தன் உள்ளிருந்தே கட்டுப்படுத்தப்படுகிறான். தனது தெரிவுச் சுதந்திரத்தின் அடிப்படையிலான தன் செய்கை விளைவுகளின் எண்ணமே, அவனது சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துகிறது. இருத்தல் கொள்கையின்படி மாணவரின் சுதந்திரம், பொறுப்புள்ள சுதந்திரமாயிருக்கிறது. தங்களின் பாடங்கள், செயல்திட்டங்கள் ஆகியவற்றைத் தெரிவு செய்வதிலும் மாணவர்களுக்குச் சுதந்திரம் தரப்பட வேண்டும். மேலும் மாணவர்களின் படைப்பாற்றல் வெளிப்பாடுகளுக்கு எல்லையற்ற சுதந்திரம் வழங்கப்பட வேண்டும். ஆனால், ஒரு மாணவனின் இத்தகைய சுதந்திரம் அடுத்த மாணவரின் சுதந்திரத்தைக் கெடுத்தல் கூடாது. கற்பித்தல் முறையில் கல்வியாளர்கள் தனிமனிதனை அடிப்படையாகக் கொண்டால் மட்டுமே பள்ளியில் சுதந்திரத்தையும் கட்டுப்பாட்டையும் பேணிக் காக்க முடியும். பா.சோ.ச.
துணை நூல்கள்
Erubacher S. John, Modern Philosophies of Education Tata – Macra – Hill Publishing Co., Pvt. Ltd, Bombay, 1962.
Gurber C. Fredrick, Historicai and Contemporary Philosophies of Education, Thomas Y. Crowell Company, N.C. New York, 1973.
Kneller F. George, Existentiliasm and Education, John Wileys Sons, N.C. New York, 1958.
Wingo Max. G., Philosophies of Education–An Introduction, D.C. Heath and Company, London, 1974.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 193)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ezkms875/
தமிழ்“இருத்தல் கொள்கையும் கல்வியும்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/ezkms875/APA
Oliyon Research. (2026). இருத்தல் கொள்கையும் கல்வியும். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ezkms875/MLA
"இருத்தல் கொள்கையும் கல்வியும்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/ezkms875/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment