உட்கட்சிக் கருத்துரிமை
uṭkaṭcik karutturimai
அரசியல் கட்சிகள் மக்களின் எண்ணங்களை அரசாங்கத்திற்கு ஏந்திச் செல்கிற செயலாண்மைகள் ஆகும்.
அரசியல் கட்சிகள் மக்களின் எண்ணங்களை அரசாங்கத்திற்கு ஏந்திச் செல்கிற செயலாண்மைகள் ஆகும். அரசாங்கம் மக்களின் எண்ணங்களைக் கொள்கைகளாக மாற்றிப் பின்னர் அவற்றைச் செயற்படுத்துகிறது. பெரும்பான்மை மக்களின் எண்ணங்கள் தாம் (Majority Opinion) மக்களாட்சி முறையிலான அரசாங்கத்தின் எண்ணங்கள். மக்களாட்சியில் பெரும்பான்மையோரின் நலன் காக்கப்படுவதோடு சிறுபான்மையோரின் நலன்களும் காக்கப்படவேண்டும். மக்கள் தங்கள் தேவைகள், குறைகள் ஆகியவற்றை அரசியல் கட்சிகளுக்குத் தெரிவிப்பர். பெரும்பான்மையோர் ஓர் அரசியல் கட்சிக்கு ஆதரவு அளித்தால் அது ஆளும் கட்சியாகிவிடும். ஏனைய கட்சிகள் எதிர்க்கட்சிகளாகச் செயற்படும்.
அரசியல் கட்சிகள் என்பவை குறிப்பிட்ட கொள்கைகளுக்காக உறுப்பினர்கள் ஒன்று கூடிக் கருத்து வேற்றுமைகளைக் கலந்துரையாடித் தீர்வுக்கு வருபவை. மேலும், அவை தம் தலைமை உறுதி செய்யும் முடிவுகளைப் பிறழாமல் பின்பற்றி, நடந்து மக்கள் ஆதரவைத் தேடுகிற முயற்சிகளில் ஈடுபடுவனவாகும். தவிர, அரசியல் கட்சிகள் மக்களுக்கு அரசியல் அறிவையும் ஊட்டுகின்றன. நாட்டின் பிரச்சினைகளை மக்களுக்குத் தெரியப்படுத்தி, மக்களிடம் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துகின்றன. இதனால், மக்கள் அரசியலைப் பற்றி அறிந்துகொள்ளவும் அரசியலில் பங்கேற்கவும் வழியேற்படுகிறது.
உட்கட்சிக் கருத்துரிமை (Inner Party Democracy) அடிப்படையில்தான் ஒரு கட்சியின் கோட்பாடு (Ideology) உருவாக்கப்படுகிறது. கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு குறிக்கோள்கள் உருவாக்கப்படுகின்றன. இங்ஙனம் உருவாக்கப்பட்ட குறிக்கோள்களைச் செயற்படுத்தத்தான் கட்சி, அரசாங்க அதிகாரத்தைக் கைப்பற்ற முயலுகிறது. மக்களை மையமாகக் (Clientele Oriented) கொண்டு அரசியல் கட்சி இயங்குவதால், அக்கட்சி அதனுடைய உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் ஆகியோர்களின் எண்ணிக்கையைப் பெருக்குவதிலும் அதிக அக்கறை எடுத்துக் கொள்கிறது. இதனால், பல்வேறு வகைப்பட்ட மக்கள் கட்சியில் இடம்பெற வாய்ப்பு ஏற்படுகிறது. எனவே, அக்கட்சியின் அமைப்பை (Composition) அல்லது அதன் உறுப்பினர்களின் பின்னணியை ஆய்ந்தால், வேறுபட்ட சமூக, பொருளாதார நலன்களைக் கட்சி தன் குறிக்கோளாகக் கொண்டுள்ளதன் காரணம் தெரியவரும். வேறுபட்ட சமூக, பொருளாதார நோக்கங்களை அடைவதில் அரசியல் கட்சிகளிடையே போட்டி காணப்படுகிறது. இவை எப்படித் தங்கள் கொள்கைகளைக் கட்டிக் காக்கின்றன, செயற்படுத்துகின்றன என்பதை அக்கட்சிகள் கொண்டிருக்கக்கூடிய கட்டுப்பாடுகள் மூலம் தெரிந்து கொள்ளலாம். அதிகார மையப்படுத்துதலை அடிப்படையாகக் கொண்டு கட்சியில் கட்டுப்பாடுகள் காணப்பட்டால், அக்கட்சி மக்களின் ஆதரவை முழுவதும் பெற்றது என்றுகூற இயலாது. தன் விருப்பத்தை (Spontaneous) அடிப்படையாகக் கொண்டு மக்களே விரும்பி ஏற்கக்கூடியதாக அரசியல் கட்சிகள் இருந்தால், அக்கட்சிகள் மக்களிடம் நிலையான ஆதரவைப் பெற்றவையாகக் காணப்படும். மக்களுக்கும் கட்சிக்குமிடையே இடைவெளி அதிகமிருக்காது.
ஒவ்வோர் அரசியல் கட்சியும் தான் அமைத்துக் கொள்கிற உட்கட்சிக் கருத்துரிமையின் மூவந்தான் தன் கொள்கைகளைச் செம்மையாகச் செயற்படுத்த முடியும். அரசியல் கட்சியின் உறுப்பினர்கள் மக்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தால்தான் மக்களுக்குகந்த கொள்கைகளை அவை உருவாக்க முடியும்; உட்கட்சிக் கருத்துரிமையும் மக்களுக்கேற்ப அமைய முடியும். மக்கள் எண்ணங்களின் மாற்றத்திற்கேற்ப உட்கட்சிக் கருத்துரிமையும் மாற்றத்திற்குள்ளாகும். அப்படி நிகழ்ந்தால் தான் மக்களின் ஆதரவைத் தொடர்ந்து பெறுவதற்கு முடியும். மாறுகிற எண்ணங்களை அவ்வப்பொழுது தெரிந்து கொள்வதற்காகக் கீழ்மட்டத்திலிருந்து மேல்மட்டம் வரையிலுமாகக் கட்சியின் எல்லாப் பகுதிகளிலும் எல்லாப் பிரிவினர்களும் இடம் பெறுமாறு கட்சியின் அமைப்பு அமைந்திருக்கும். அரசியல் கட்சியின் உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றாக, ஒத்துழைப்போடு பணியாற்ற வேண்டும். அரசியல் கட்சிப்பணி மக்கள்பணி என்று பொறுப்போடு பணியாற்றினால்தான் கட்சியின் கருத்துரிமை சீராக அமையும். கட்சி உறுப்பினர்கள் மட்டுமல்லாது கட்சியின் மேலாண்மை வகிப்போரும் பல்வேறு பிரச்சினைகளைப் பல்வேறு கோணங்களில் அணுகி ஆராய்ந்து, எளிமையான முறையில் மக்களுக்குப் பணியாற்ற முயற்சி செய்ய வேண்டும்.
உட்கட்சிக் கருத்துரிமை கட்சிகளைச் சார்ந்து பல்வேறு வகைகளில் அமைந்துள்ளது. அரசியற் கட்சிகள் அவை செயற்படும் விதத்தை வைத்து ஒரு கட்சி ஆதிக்கமுறை (Single Party System), இரு கட்சி முறை (Two Party System), பலகட்சிமுறை (Multi-Party System) என்று மூன்றாக வகைப்படுத்தப்படுகின்றன. ஒரு கட்சி ஆதிக்க முறையில் அக்கட்சியின் செயற்குழுவில் உட்கட்சிக் கருத்துரிமை உணரப்படும். எடுத்துக்காட்டாக, உருசியாவில் பொதுவுடைமைக் கட்சியின் பொலிட்பீரோ (Politbureau) என்ற உயர்நிலைக் கட்சிப்பிரிவு உட்கட்சிக் கருத்துரிமையை முடிவு செய்யும். இதற்காக அக்கட்சியின் உறுப்பினர்கள் தங்கள் கருத்தை வலியுறுத்தும் வகையில் முயற்சி செய்வர்.
இருகட்சிமுறைக்கு இங்கிலாந்தும் அமெரிக்க ஐக்கிய நாடுகளும் எடுத்துக்காட்டுகளாகும். தேசிய அவை (National Council), தலைமை அலுவலகம் என்று இரு பிரிவுகளை இங்கிலாந்துப் பழமையாளர் கட்சி கொண்டுள்ளது. தேசிய அவையில் உட்கட்சிக் கருத்துரிமை முடிவு செய்யப்படும். தொழிலாளர் கட்சியில் தேசிய செயற்குழு (National Executive Committee), மையப்பிரிவு (Central Bureau) ஆகிய பிரிவுகளில் செயற்குழு உட்கட்சிக் கருத்துரிமையை உருவாக்கும். அமெரிக்க ஐக்கிய நாடுகளில் உள்ள குடியரசு, மக்களாட்சிக் கட்சிகளில் தேசியக் குழுக்கள் (National Committees) உட்கட்சிக் கருத்துரிமையை ஏற்படுத்தும். அமெரிக்க ஐக்கிய நாட்டில் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடக் கூடிய வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க இரண்டு அரசியல் கட்சிகளும் தங்கள் கட்சி அமைப்புகளில் தேர்தலை (Primaries Election) நடத்தி முடிவு செய்கின்றன என்பது, வெளிப்படையாக இரண்டு கட்சிகளும் தங்கள் கட்சியின் கருத்துரிமையை முடிவு செய்யும் முறை எனலாம். பல கட்சி முறையில் உட்கட்சிக் கருத்துரிமை பிற கட்சிகளைச் சார்ந்து அமைக்கப்படுகிறது.
உட்கட்சிக் கருத்துரிமை கட்சிகளின் தலைமைகளால் உருவாக்கப்படுகிறதெனலாம். கட்சிகளின் தலைமையாளர்கள் உட்கட்சிக் கருத்துரிமைக்கேற்பச் செயற்படவேண்டுமென்பது கோட்பாடு. ஆனால், நடைமுறையில் ஒரு சிலரின் நன்மைகளுக்காகவும் வசதிக்காகவும் கௌரவத்திற்காகவுமே உட்கட்சிக் கருத்துரிமை உருவாக்கப்படுகிறது. கோட்பாட்டளவில் அனைவரும் சமமெனக் கட்சித் தலைவர் கூறுவார். ஆனால், நடைமுறையில் மிகுதியான அதிகாரம் தலைவரிடம் காணப்படும். அத்தகைய கட்சிகளில் கட்சித்தலைவரின் தனி மனிதர் செல்வாக்கின் மூலம் உட்கட்சிக் கருத்துரிமை உருவாக்கப்படுகிறது. தனி மனிதரால் கருத்துரிமை உருவாக்கப்படப் போதுமான ஆளுமை (Personality) இல்லையெனில், சிறு குழுவின் மூலம் அது உருவாக்கப்படுகிறது. இக்குழுவினர் தங்கள் சுயநலன்களுக்காகவே கருத்துரிமையை உருவாக்குவதால், இதனைத் தன்னலச் சிலராட்சி (Personal Oligarchy) என்று குறிப்பர்,
சில கட்சிகளில் இராணுவ முறையில் தங்களை ஒப்படைத்து இயங்கக்கூடிய அளவில் கட்சி உறுப்பினர்களை நியமித்துக் கருத்துரிமையை உருவாக்குவர். இதற்கு எடுத்துக்காட்டாக, இலெனினைக் கூறலாம். சில கட்சிகள் சிலரைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்குப் பயிற்சி கொடுத்து, பயிற்சி பெற்றவர்கள் உட்கட்சிக் கருத்துரிமையை உருவாக்குகின்றனர். இட்லருடைய (Hitler) இளைஞர் அணி இதற்குச் சான்று. இன்றைய நாளில் ஆசுத்திரிய சமநிலைச்சமூகக் கட்சி, கட்சியின் ஒத்துழைப்பாளர்கள் (Party Co–operators) என்பவர்களைத் தேர்வு செய்து, பயிற்சி கொடுத்து, அவர்கள் வாயிலாக உட்கட்சிக் கருத்துரிமையை உருவாக்குகிறது. உட்கட்சிக் கருத்துரிமையை உருவாக்குவது தலைமையைத் தக்க வைத்துக் கொள்வதற்கு மிகுதியாகப் பயன்படுகிறதென்றால் அது மிகையாகாது. எம்.ப.
துணை நூல்கள்
Alan Ware, The Logic of Party Democracy, Macmillan, 1979.
Maurice Duverger, Political Parties, Methuen & Co., Ltd, 1967.
William, E. Wright (ed), A Comparative Study of Party Organization, Charles E. Merrill Publishing Company, Ohio, 1971.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 751)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ezhs55sb/
தமிழ்“உட்கட்சிக் கருத்துரிமை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/ezhs55sb/APA
Oliyon Research. (2026). உட்கட்சிக் கருத்துரிமை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ezhs55sb/MLA
"உட்கட்சிக் கருத்துரிமை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/ezhs55sb/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment