வீர சைவ சமயத்தைச் சார்ந்தவர்கள் இலிங்காயத்துகள் எனச் சொல்லப்படுவர். இவர்கள் கருநாடகத்தில் வாழ்கின்றனர். இவர்கள் இலிங்க வழிபாட்டை மேற்கொண்டவர்கள். சிவன் கோயில்களில் இலிங்கம் மூன்று பகுதிகள் கொண்ட வடிவமாக அமைக்கப்பட்டிருக்கும். இலிங்கத்தில் பீடம் என்ற அடிப்பகுதி உண்டு. அதற்கு மேல் கோமுகம் என்ற அமைப்புள்ள பகுதி நடுப்பகுதி ஆகும். குழவி என்ற அமைப்புடைய பகுதி மேலே அமைக்கப்பட்டிருக்கும். இம்மூன்று பகுதிகளும் ஒரு சேர அமைந்துள்ள வடிவந் தான் சிவலிங்கம் எனச் சொல்லப்படுகிறது. குடமுழுக்கு விழாவின் போது எண்வகை மருந்துகளால் செய்யப்பட்ட ‘அட்ட பந்தனம்’ என்ற மருந்துப் பொருளை இலிங்கத்தின் அடிப்பகுதியில் பதியப் பூசுவார்கள். வீர சைவர்கள் அட்டபந்தனம் என்பது எண்வகை முறைகளில் இணையும் அட்டசயிலம் என்ற இணைப்பு முறை என்றும், அது உயிரும் இலிங்கமும் இணைக்கப்பட்டு மறைக்கப்பட வேண்டும் என்ற தத்துவத்தை விளக்குகிறதென்றும் கூறுவர். மேலும் வீரசைவர்கள் கோயிலிலுள்ள சிவலிங்கத்தை வழிபடமாட்டார்கள். அவர்கள் வழிபடும் இலிங்கம் அட்டபந்தனத்தால் எல்லாப் பகுதியையும் மூடிக் கொண்டிருக்கும், குழவி வேறு பீடம் வேறு என்று தெரிந்து கொள்ள முடியாத வகையில் அட்ட பந்தனத்தை நிறைவு செய்திருப்பார்கள். பார்த்தவுடன் அதை இலிங்கம் என்று தெரிந்து கொள்ள முடியாது. இதனையே வீரசைவர்கள் வழிபடுவார்கள். இலிங்கத்தின் எல்லாப் பகுதியையும் முழுமையாக மூடிக்கொண்டிருக்கும் ஒரு கட்டை போன்ற குண்டலத்தைக் கழுத்தில் அணிந்திருப்பார்கள். கோயில்களில் விசேட காலங்களில் எண்வகையான மருந்துகளால் செய்யப்பட்ட அட்டபந்தனம் என்ற கலவையை இரண்டு இடங்களில் இணைப்புக்காக வைப்பார்கள். அவ்விடங்களுள் ஒன்று குழவியும் பீடமும் பொருந்தும் இடம்; மற்றொன்று இலிங்கமும் தரையும் இணைகின்ற இடம். பழங்காலத்தில் அரப்பா, மொகஞ்சதாரோ ஆகிய இடங்களில் அகழாய்வு செய்ததின் விளைவாக மிகச் சிறிய இலிங்கங்கள் கிடைத்தன. அந்த இலிங்- கங்களில் அட்டபந்தனம் முழுவதுமாக வைத்து நிறைவு செய்யப் பெற்றிருந்தது. எனவே, வீர சைவர்கள் கழுத்தில் அணிந்து கொள்ளும் இலிங்கங்கள் போலவே அவை உள்ளன. அகழாய்வு அறிஞர்கள் அதை உறுதி செய்துள்ளனர். வீரசைவர்கள் சிவலிங்கத்தை ஞானமாகவும் தெய்வமாகவும் நினைந்து வணங்குவார்கள். இவர்கள் சாதி, சமய வேறுபாட்டை எதிர்ப்பவர்கள். மாற்றான் மனைவி, செல்வம் ஆகியவற்றின் மீது ஆசை கொள்ளாதவர்கள்; பிற உயிருக்குத் தீங்கு செய்யக் கூடாது என நினைப்பவர்கள்; மற்றவர்களுடன் உடன் பிறப்பு நேயத்துடன் பழகுந் தன்மை உடையவர்கள். திருடுவதையும் உயிர்ப்பலியிடுவதையும் அறவே வெறுப்பவர்கள். உலகில் வாழும் எல்லா மக்களிடத்திலும் இரக்க உணர்ச்சி கொண்டவர்களாக ஒழுகுபவர்கள். அரப்பா, மொகஞ்சதாரோ அகழாய்வுகளில் கிடைத்த இலிங்கங்கள் வீரசைவ சமயத்தினர் அணியும் இலிங்கங்களோடு தொடர்புடையன என்பது தெரிய வருகிறது. மு.மு.