அகமதாபாத்துச் சோதனைகள்
akamatāpāttuc cōtaṉaikaḷ
தொழிலாளர்களிடையே மன நிறைவை ஏற்படுத்தக்கூடிய காரணிகளைத் திட்டமிட்ட சோதனைகளின் மூலம் 1953—ஆம் ஆண்டு அகமதாபாத்து காலிமகா நெசவாலையில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகள் அகமதாபாத்துச் சோதனைகள் (Ahamedabad Experiments) எனப்படுகின்றன.
தொழிலாளர்களிடையே மன நிறைவை ஏற்படுத்தக்கூடிய காரணிகளைத் திட்டமிட்ட சோதனைகளின் மூலம் 1953—ஆம் ஆண்டு அகமதாபாத்து காலிமகா நெசவாலையில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகள் அகமதாபாத்துச் சோதனைகள் (Ahamedabad Experiments) எனப்படுகின்றன. இலண்டன் நகரத்தில் உள்ள தாவிசுதாக்டு மனித உறவு நிறுவனத்தைச் (Tavistock Institute of Human Relations) சேர்ந்த ஏ.கே. இரைசு (A.K. Rice) என்பவரால் இச்சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
அகமதாபாத்து நெசவாலையில் 1952–ஆம் ஆண்டில் புதிய எந்திரங்கள் புகுத்தப்பட்டதன் விளைவாகத் தொழிலாளிகளிடையே அமைதியின்மை தோன்றியிருந்தது.
தொழிலாளர்களின் தொல்லைகளுக்குக் காரணங்களைக் கண்டுபிடிப்பதற்காகவும் உற்பத்தித் திறன் பெருக்கத்திற்கான வழிகளை ஆராய்வதற்காகவும் 1953–ஆம் ஆண்டு முதல் 1955-ஆம் ஆண்டு வரையில் இச்சோதனைகள் நிகழ்த்தப்பட்டன.
இங்கிலாந்தில் ஈ.எல். திரிசுது (E.L. Trist) என்பவரால் விளக்கப்பட்ட சமூகத் தொழில்நுட்ப உற்பத்தி முறை என்னும் கருத்தை இரைசு அகமதாபாத்துச் சோதனைகளில் பயன்படுத்தினார். தொழிலாளர்களிடையே குழு ஒழுங்குணர்வு நல்ல முறையில் காணப்பட்ட போதிலும் உற்பத்தித்திறன் குறைந்து காணப்பட்டது. நெசவாலைத் தொழிலாளர்கள் வேலைசெய்த தொழிற் கூடத்தில் 224 தறிகள் இருந்தன. 24 முதல் 32 தறிகள் வரையில் ஒரு தொழிலாளர் வேலை செய்து வந்தார், மற்றத் தொழிலாளர், தத்தம் திறன், அனுபவம் இவற்றிற்கு ஏற்ப வேறு பணிகளைச் செய்து வந்தனர். இவ்வாறு 224 தறிகள் ஒவ்வொரு வேலை நேரத்திலும் 29 தொழிலாளிகளால் கவனிக்கப்பட்டு வந்தன. தொழிலாளர்களுக்கு அவரவர் பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களும், மேற்பார்வையாளர்களின் பொறுப்புகளும், மேலாண்மைக்கும் தொழிலாளர்களுக்கும் இடையே நிலவி வந்த மனப்பான்மைகளும் மேலெழுந்தவாரியாக அமைதியான போக்கைக் காட்டுவதாக இருந்தாலும் நெசவாலையில் உள்ளார்ந்த தொல்லைகள் இருந்தன என்பதை எல்லோரும் உணர்ந்தனர். தொழிலாளர்களுக்கு வேலைப் பங்கீடு செய்து கொடுக்கப்பட்டிருந்த முறையும் அவர்களைப் பொருட்படுத்தாதவாறு அமைந்திருந்தது. தொழிலாளர்களைச் சிறு சிறு பணிக் குழுக்களாகப் பிரித்து அக்குழுக்களுக்குக் குறிப்பிட்ட பொறுப்புகளையும் பணிகளையும் வரையறை செய்து கொடுத்தனர். குறிப்பிட்ட சில தறிகளுக்குக் குறிப்பிட்ட ஒரு பணியாளர் குழு பொறுப்பு என்ற அடிப்படையில் இந்த மாற்றம் ஏற்படுத்தப்பட்டது.
தறிகள் கீழ்க்கண்ட முறையில் வரிசைப்படுத்தப்பட்டன. ஒரு வரிசையிலிருந்த தறிகள் அடுத்த வரிசைத்தறிகளைப் பார்த்த வண்ணம் வைக்கப்பட்டிருந்தன, முன் பக்கத்து நெசவாளி இரு தறிகளையும் எளிதாகக் கவனித்துக் கொள்ள முடிந்தது. நுட்பமில்லாத தொழிலாளர் இதற்குப் பின்வரிசையில் அமர்ந்து தம் பணிகளில் ஈடுபடவும் முடிந்தது. ஒவ்வொரு குழுவிலும் 11 தொழிலாளர் ஒருங்கிணைந்து வேலை செய்தனர். இதற்கு முன் இந்த வேலையை 20 தொழிலாளர்கள் ஒருங்கிணைவின்றிச் செய்து வந்தனர். தொழிலாளர்கள் தம் இடங்களைவிட்டு எழுந்து சென்று மற்றவர்களுடன் பேசவும் வசதி இருந்தது. சோதனைகள் 9 காலப்பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுச் சோதனையின் முடிவுகள் கண்டறியப்பட்டன. இச்சோதனைக் காலத்தில் உற்பத்தித் திறன் மிகுந்தது. தொழிலாளர்களின் மனநிறைவுடன், குழு ஒழுங்கும் குறையாமல் நிலைத்து நின்றது. தொழில் திறன் மிகுந்தது. இதன் காரணமாக உற்பத்தி செய்த துணிகளின் தரமும் உயர்ந்தது.
இத்தகைய மாற்றங்களைச் சமூகத் தொழில் நுட்ப விதி என்று இரைசு குறிப்பிட்டார். தொழிற் குழுக்களில் அதிகார வரையறை துல்லியமாகக் காணப்படவில்லை, அதாவது, குழுக்களில் உயர்ந்தோர் தாழ்ந்தோர் வேறுபாடு இன்றி, எல்லோரும் ஒரு குடும்பத்தினர்போல் பழகி வேலையில் ஈடுபட்டனர். இது அவர்களிடையே சமூக உறவு மனப்பான்மையை வளர்த்தது. இந்திய ஊரகச் சமுதாய அமைப்பில் காணப்படும் சமூக இடைத்தொடர்புகள் தொழிற்சாலைகளில் மங்கிவிடுவதால், தொழிலாளர்கள் தாம் எந்திரங்களினிடையே இருக்கும் ஒரு சிறு மரை தான் என்ற மனப்பான்மை வளர்கிறது. இத்தகைய மனப்பான்மை தொழில் உறவுகளைப் பாதிப்பதாக உள்ளது. இவற்றை நீக்கித் தொழிலாளர்களிடையே அவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்ற மனப்பான்மை வளரும் முறையில் தொழிற் பங்கீடு, தொழிற் சூழமைவு ஆகியவை மாற்றியமைக்கப்பட வேண்டும். இதுவே உற்பத்தித்திறன், தொழில் ஊக்கம் இவைகளுக்கு அடிப்படையாகும் என்று அகமதாபாத்துச் சோதனைகள் மெய்ப்பித்தன.
துணை நூல்
Pascual Gisbert S.J., “Fundamentals of Industrial Sociology”, Tata McGraw Hill publishing Company, New Delhi, 1972.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 97)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ewq2d639/
தமிழ்“அகமதாபாத்துச் சோதனைகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/ewq2d639/APA
Oliyon Research. (2026). அகமதாபாத்துச் சோதனைகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ewq2d639/MLA
"அகமதாபாத்துச் சோதனைகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/ewq2d639/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment