அர்க்கன்சா
arkkaṉcā
அமெரிக்க ஐக்கிய நாட்டின் ஐம்பது மாநிலங்களுள் ஒன்றாகும்.
அமெரிக்க ஐக்கிய நாட்டின் ஐம்பது மாநிலங்களுள் ஒன்றாகும். அர்க்கன்சா (Arkansas) வேளாண்மைக்கு உகந்த மண் வளத்தையும், மிகுதியான கனிமச் சுரங்கங்களையும், அடர்ந்த காடுகளையும் கொண்டிலங்குவதால் இதனை “நல் வாய்ப்பு மிக்க நிலம்” (Land of Opportunity) என்று குறிப்பிடுவர்.
அர்க்கன்சாவின் வடக்கே மிசௌரி ஆனும், தெற்கே இலூசியானாவும், தென்மேற்கே தெக்சாசும், கிழக்கே தென்னசி, மிசிசிபி ஆறுகளும், மேற்கே ஆக்கிலகாமா (Oklahoma)வும் எல்லைகளாக அமைந்துள்ளன.
அர்க்கன்சா
இம்மாநிலத்தின் பரப்பளவு 1,37,539 சதுர கி.மீ. கி.பி. 1980–ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்குப்படி இம்மாநிலத்தின் மக்கள் தொகை 22,86,435 ஆகும்.
இம்மாநிலம் இரு பிரிவுகளாக அமைந்துள்ளது. அவை வடமேற்கே அமைந்துள்ள மேட்டுநிலப்பகுதி (High Lands), தென்கிழக்கே அமைந்துள்ள தாழ்ந்த நிலப்பகுதி (Low Lands) ஆகும்.
மேட்டுநிலப்பகுதி ஒசார்க் (Ozark area) மலைப் பதியையும் ஒலசிதா மேட்டு நிலப் பகுதியையும் (Ovachita High Lands) கொண்டிலங்குகிறது. தாழ்ந்த நிலப்பகுதி மிசிசிபி ஆற்று வண்டல் சமவெளியையும் (Mississippi Aluvial Plain), வளைகுடா கடற்கரைச் சமவெளியையும் (Gulf Coastal plain) கொண்டமைந்துள்ளது.
இது நீர் வளம் மிக்க மாநிலமாகும். கிழக்கே பாயும் மிசிசிபி ஆறும் தென்கிழக்கில் பாயும் அர்க்கன்சா ஆறும் இம்மாநிலத்தின் சிறப்பான ஆறுகளாகும். இவ்விரு ஆறுகளில் அணைகளைக் கட்டி நீரைத் தேக்கி வைத்துள்ளனர். இவ்வணைகளே ஏரிகள் போன்று செயற்படுகின்றன. மேட்டு நிலப்பகுதிகளில் இவ்வேரிகள் பெரும் எண்ணிக்கையில் உள்ளன. இவ்வணைகளிலிருந்து நீர்மின்சக்தியினைப் பெறுகின்றனர். ஆறுகளின் வெள்ளப் பெருக்கினைத் தடுக்கக் கட்டப்பட்டிருக்கும் இவ்வணைகள் சுற்றுலாப் பகுதிகளாகவும் விளங்குகின்றன.
ஈரக் கசிவான வெப்ப மண்டலம் போன்று (Humid Subtropical Climate) அமைந்துள்ள தட்பவெப்பத்தை இம்மாநிலம் கொண்டுள்ளது. கோடைக் காலத்தில் மிகுதியான வெப்பமும், குளிர் காலத்தில் குறைந்த அளவு குளிரும் நிலவுகின்றன.
இயற்கைச் செல்வங்களால் இம்மாநிலம் பொருளாதார மேம்பாட்டினை எய்தியுள்ளது. இதனால் பல தொழிற்சாலைகள் இங்கு உருவாகியுள்ளன.
இம்மாநிலத்தின் ஆற்றுப் பகுதிகளில் வளம் மிகுந்த வண்டல் மண் நிறைந்து காணப்படுகிறது. வேளாண்மைக்கு உகந்த மண்வளம் நிரம்ப உள்ளது. பெருமளவில் சுண்ணாம்புக் கல் இம்மாநிலத்தின் வடக்குப் பகுதிகளில் கிடைக்கிறது.
அர்க்கன்சாவில் முதன்முதல் குடியேறியவர்கள் விரிந்து பரந்து கிடந்த காடுகளை அழித்துக் குடியேற்றத்தினை அமைத்தார்கள். இக்காலத்தில் இம்மாநிலத்திலுள்ள காடுகளில் ஓக், பைன், கிக்கோரி (Hickory) போன்ற மரவகைகள் மிகுந்து காணப்படுகின்றன. இக்காடுகள் மண் அரிப்பினைத் தடுக்கும் தடுப்புகளாவும், விலங்குகளின் இருப்பிடமாகவும், கால்நடைகளின் மேய்ச்சல் நிலங்களாகவும் விளங்குகின்றன. காடுகளிலிருந்து கிடைக்கும் பொருள்களும், மரம் அறுக்கும் தொழிலும் மாநிலத்தின் பொருளாதார நிலைமையைப் பெருமளவிற்கு உயர்த்தியுள்ளன.
கனிமங்கள் இம்மாநிலத்தின் வளைகுடாக் கடற்கரைச் சமவெளியிலும் சமவெளியிலும் அர்க்கன்சா வெளிப்பகுதிகளிலும் கிடைக்கின்றன. பெட்ரோலியம், இயற்கை வாயு, எரிவாயு எண்ணெய், நிலக்கரி, வைரங்கள், பாக்சைட்டு, மாங்கனீசு, ஈயம், துத்தநாகம் போன்றவை இங்குக் கிடைக்கும் கனிமங்களாகும். இங்குக் கிடைக்கும் களிமண் போன்றதொரு கனிமத்திலிருந்து அலுமினியம் உண்டாக்கப்படுகிறது.
இக்காலத்தில் இம்மாநிலத்தில் உள்ள மக்கள் ஐரோப்பிய நாடுகளில் இருந்து குடியேறியவர்களின் வழித்தோன்றல்களாவர். இப்பகுதிகளில் பழங்குடிகள் பெருமளவில் வாழ்கின்றனர். தாழ்நிலப் பகுதிகளில் உள்ள பருத்தித் தோட்டங்களில் அவர்கள் அடிமைகளாக வேலை செய்கிறார்கள். இம்மாநிலத்தின் மக்கள் தொகையில் 50 விழுக்காட்டினர் நகரங்களில் வாழ்கின்றனர். மேட்டுநிலப் பகுதியை விடத் தாழ்நிலப் பகுதிகளில் மக்கள் நெருக்கம் மிகுதியாக உள்ளது.
மாநில அளவில் பொருள்கள் உற்பத்தியில் முதலிடம் பெறும் அர்க்கன்சா, வேளாண்மைத் துறையில் இரண்டாவது இடத்தினைப் பெறுகிறது. சுரங்கத் தொழிலில் மூன்றாவது இடத்தினைப் பெற்றுள்ளது.
பருத்தி உற்பத்தியில் அமெரிக்க ஐக்கிய நாடுகளிலேயே இம்மாநிலம் சிறந்த இடத்தினைப் பெற்றுள்ளது. சோயாபீன்சும் இங்கு மிகுதியாக விளைகிறது. இம்மாநிலத்தில் விளைகிற வேளாண்மைப் பொருள்களுள் நெல் மூன்றாம் இடத்தைப் பெறுகிறது. வேளாண்மைத் தொழிலுடன் மீன் வளர்த்தல், கோழி வளர்த்தல், கால்நடைகள் வளர்த்தல் போன்ற பிற தொழில்களிலும் இம்மாநில மக்கள் ஈடுபட்டுள்ளனர். இங்குள்ள பழத் தோட்டங்களில் கிடைக்கும் பழங்களால் மாநிலத்தின் வருவாய் சீரான முறையில் பெருகியுள்ளது.
காடுகளிலிருந்து கிடைக்கும் மரவகைகளால் காகிதம் செய்தல், மரம் அறுத்தல், இருப்புப் பாதைக்குரிய குறுக்குக் கட்டைகள் செய்தல், மரப் பொருள்கள் செய்தல் போன்ற தொழில்கள் வளர்ந்துள்ளன.
சுரங்கத் தொழில் சிறந்து விளங்கும் இம்மாநிலத்தில் பெட்ரோல் எடுத்தல் முதலிடம் பெறுகிறது. பாரைட் (Barite) எனப்படும் ஒருவகைக் கனிமம் காகிதம் செய்வதற்குப் பயன்படுகிறது. போர்ட் சுமித்து (Port smith) என்னும் இடத்தில் இயற்கை வாயு எடுக்கும் தொழிற்சாலை 1901–ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. கனிமங்கள் கிடைக்கும் இடங்களிலேயே அவற்றைப் பயன்படுத்தும் தொழிற்சாலைகளும் உருவாகியுள்ளன. மின் கருவிகள் தயாரித்தல், குளிர்பதனப் பெட்டிகள் செய்தல், காற்றுப் பதனப் பெட்டிகள் (Air Conditioner) செய்தல், மின் விளக்குகள் செய்தல் போன்ற பிற தொழில்களும் இங்கு நடைபெறுகின்றன. உலோகத் தொழிற் கூடங்களும் நெசவாலைகளும் இரசாயனத் தொழிற்சாலைகளும் நாட்டின் பெரு நகரங்களில் அமைந்துள்ளன.
இம்மாநிலத்தில் வானொலி நிலையங்களும் தொலைக்காட்சி நிலையங்களும் மாநகரங்களில் அமைக்கப்பட்டுள்ளன. இவை மக்களின் பொழுது போக்குச் சாதனங்களாகவும் செய்தி நிலையங்களாகவும் பயன்படுகின்றன. அர்க்கன்சா சுவடி (Arkansas Gazette) என்னும் செய்தித்தாள் இம்மாநிலத்தின் தொன்மையான செய்தித்தாள் ஆகும். இது கி.பி. 1819–ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. வேறு பல செய்தித்தாள்களும் இம்மாநிலத்திலிருந்து வெளி வருகின்றன.
பெருவழிச்சாலைகள் நகரங்களை இணைக்கின்றன. மாநிலத்தில் 1,20,000 கிலோமீட்டர் நீளமுள்ள சாலைகள் போடப்பட்டுள்ளன. இம்மாநிலத்தில் பாயும் ஆறுகளில் கப்பல் போக்குவரத்தும் நடைபெறுகிறது. மிசிசிபி ஆறு சிறந்த போக்குவரத்து ஆறாகப் பயன்படுகிறது. மாநிலத்தில் ஏறத்தாழ 244 விமானத் தளங்கள் உள்ளன. வானவூர்திகள் வாயிலாகப் பிற இடங்களுக்குச் செல்ல வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
அர்க்கன்சா மாநிலச் சட்டமன்றம்
தனியார் நிறுவனங்களின் உதவி பெற்றும் மாநில அரசின் உதவி பெற்றும் கல்விக் கூடங்கள் செயலாற்று- கின்றன. இம்மாநிலத்தில் 31 உயர் கல்விக்கூடங்களும், ஒன்பது பல்கலைக் கழகங்களும், ஒரு மருத்துவக் கல்லூரியும், பன்னிரண்டு தனியார் கல்லூரிகளும், ஒன்பது இளநிலைக் கல்லூரிகளும், எண்ணற்ற தொழிற் கல்விக் கூடங்களும் உள்ளன. அர்க்கன்சா பல்கலைக் கழகமே இம்மாநிலத்தின் பெரிய கலைக் கழகமாகும். நூல் நிலையங்கள் பல மாநிலத்தின் பல்வேறு இடங்களில் மக்கள் நலங்கருதி அமைக்கப்பட்டுள்ளன.
இலிட்டில் ராக் (Little Rock)
இம்மாநிலத் தலைநகரம் ஆகும். இந்நகரம் கி.பி. 1820–ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. அர்க்கன்சா ஆற்றின் கரையிலுள்ள இந்நகரம் இம்மாநிலத்தின் மையமாகும். இது இம்மாநிலத்திலுள்ள பிற நகரங்களை விடச் சிறந்த மாநகரமும், மக்கள் நெருக்கம் மிகுந்த நகரமுமாகும். பிற நகரங்களுடன் இது சாலைகளால் இணைக்கப்பட்டுள்ளது.
ஆட் இசுபிரிங்சு (Hot Springs)
என்னும் நகரம் சுற்றுலாப் பயணிகளின் கருத்தைக் கவரும் அழகிய நகரம். இந்நகரத்தில் இயற்கையாக அமைந்துள்ள வெந்நீர் ஊற்றுகளில் நீராடச் சுற்றுலாப் பயணிகள் திரளாக வருகை புரிகின்றனர். இவ்வூற்றுகளில் நீராடுவதால் உடல்நோயாளர் தம் பிணி நீங்கும் என்று நம்புகின்றனர். இந்நகரத்தில் ‘ஆட் இசுபிரிங்சு தேசியப் பூங்கா’ ஒன்றினை 1921–ஆம் ஆண்டு நிறுவியுள்ளனர். இப்பூங்காவிற்கு அருகில் உடல்நலப் பொழுது போக்கிடமும் உள்ளது. இது சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்ற இடமாக விளங்குகிறது. இந்நகரத்தில் 47 எரிவாயு ஊற்றுகள் உள்ளன. பெயிட்டிவிலி (Fayetteville) வளர்ந்து வரும் நகரமாகும். அர்க்கன்சா பல்கலைக் கழகம் இந்நகரத்தில் உள்ளது. பல மரவேலைத் தொழிற்சாலைகள் இந்நகரத்திலுள்ளன.
நார்த் லிட்டில் ராக் (North Little Rock), போர்ட் இசுமித் (Fort Smith), பைன் பிளப் (Pine Bluff), எல்டோர்டோ (Eldorado), சோன்சுபரோ (Jonesboro), பிளய்தவிலி (Blytheville) போன்றவை இம்மாநிலத்தின் பிற நகரங்களாகும்.
அர்க்கன்சாவின் பழங்குடிகள் செவ்விந்தியர்களாவர். இவர்கள் ஓரிடத்தில் நிலையான வாழ்க்கையினை அமைத்திடாமல் ஊர் ஊராகச் சுற்றித் திரிந்து வந்தார்கள். இவர்கள் வேட்டையாடியும் மீன்பிடித்தும் தம் வாழ்க்கையை நடத்தினார்கள். இப்பகுதிக்கு முதன் முதல் வந்த ஐரோப்பியர் இசுபானியர்களாவர். பிரெஞ்சுக்காரர்கள் அவர்களை அடுத்து வந்தார்கள். இப்பகுதியில் நாளடைவில் பல குடியேற்றங்கள் ஏற்படலாயின. அமெரிக்க ஐக்கிய நாடு இப்பகுதியினை இலூசியானாவின் ஒரு பகுதியாகக் கி.பி. 1803–ஆம் ஆண்டு இணைத்தது. கி.பி. 1819–ஆம் ஆண்டு அர்க்கன்சா தனிப்பகுதியாகப் பிரிக்கப்பட்டு, கி.பி. 1836–ஆம் ஆண்டு அமெரிக்க ஐக்கிய நாட்டின் 25–வது மாநிலமாக உருவாக்கப்பட்டது.
கி.பி. 1861–இல் நடந்த அமெரிக்க ஐக்கிய நாட்டு உள்நாட்டுப் போரின் பொழுது, அர்க்கன்சா மக்கள் தமக்குள் கருத்து வேறுபாடு கொண்டு செயற்பட்டனர். உள்நாட்டுப் போரின்போது இம்மாநிலத்தின் பல்வேறு இடங்களில் போர்கள் நிகழ்ந்தன. இச்சமயத்தில் அமெரிக்க ஐக்கிய நாட்டுடன் இருந்து பிரிந்து செயற்பட்ட அரிக்கன்சா மீண்டும் கி.பி. 1868–ஆம் ஆண்டு அமெரிக்க ஐக்கிய நாட்டுடன் இணைக்கப்பட்டது.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 598)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ewcnwa7f/
தமிழ்“அர்க்கன்சா”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/ewcnwa7f/APA
Oliyon Research. (2026). அர்க்கன்சா. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ewcnwa7f/MLA
"அர்க்கன்சா." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/ewcnwa7f/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment