இராமசாமிக் கவிராயர்
irāmacāmik kavirāyar
அழகிய சிற்றம்பலக் கவிராயரின் மகன்.
அழகிய சிற்றம்பலக் கவிராயரின் மகன். இவர் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள மிதிலைப்பட்டி என்னும் ஊரைச் சேர்ந்தவர். தமிழ்ப் புலமை மிக்க மரபுவழிப் பிறந்த இவர் தம் தந்தையாரிடம் கல்வி பயின்றார். கருப்பண்ணசாமி சதகம் என்னும் நூலை இவர் இயற்றியுள்ளார். இந்நூல் பூங்குன்றை வேலங்குடிக் கருப்பண்ணசாமிமீது பாடப்பட்டதாகும். தனிச்செய்யுட் சிந்தாமணியில் பதினொரு பாடல்கள் காணப்படுகின்றன.
இப்பெயரில் வேறு சில கவிராயர்களும் இக்காலப் பகுதியில் வாழ்ந்து வந்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள முகவூர் என்னும் ஊரில் இராமசாமிக் கவிராயர் என்றொரு புலவர் வாழ்ந்துள்ளார். இவர் மு.ரா. அருணாசலக் கவிராயர், சே. (மு) ரா. சுப்பிரமணியக் கவிராயர், மு.ரா. கந்தசாமிக் கவிராயர் ஆகியோரின் தந்தையாராவார். மேலுமிவர் முகவூர்க் கந்தசாமிக் கவிராயருக்குத் தமையனாரும் சேற்றூர்ப் பெருநிலக் கிழார் சுந்தரதாகத் தேவரின் ஆசிரியரும் இவரும் கந்தசாமிக் கவிராயரும் இணைந்து சேற்றூர்ப் பெருநிலக்கிழார் முத்துசாமித் துரையின் மீது ‘குறவஞ்சி’ பாடியுள்ளனர்.
இப்பெயரில் மதுரையில் வாழ்ந்த ஒருவர் ‘கம்பர் குல திலகர்’ என்னும் சிறப்புப் பெயர் பெற்று விளங்கினார். இவர் தெய்வசிகாமணிமாலை, கண்மணிமாலை ஆகிய இரு நூல்களை இயற்றியுள்ளார். ‘தெய்வசிகாமணிமாலை’ மதுரைச் சோமசுந்தரக் கடவுள் மீதும் ‘கண்மணிமாலை’ அங்கயற்கண்ணம்மை மீதும் பாடப்பட்டனவாகும்.
இதே பெயரொடு வேறொரு புலவர் தொண்டை நாட்டில் வாழ்ந்துள்ளார். இவர் இயற்றியனவாகத் தனிச்செய்யுட் சிந்தாமணியில் பதினொரு பாடல்கள் காணப்படுகின்றன.
இப்பெயரில் வாழ்ந்த கவிராயர் ஒருவர் அழகர் வர்ணிப்பு, மகாபாரதக்கும்மி, மார்க்கண்டமாலை, மதுரைக்காதல், திருப்போரூர்ச் சுப்பிரமணியர் பேரில் இரட்டையாசிரிய விருத்தம் ஆகிய நூல்களை இயற்றியுள்ளார்.
இருபதாம் நூற்றாண்டிலும் இப்பெயரில் சில கவிராயர்கள் இருந்துள்ளனர். பாண்டி நாட்டு மழவாபுரியில் ஓர் இராமசாமிக் கவிராயர் வாழ்ந்தார். இவர் தந்தை சிதம்பர பாரதியாவார். இவர் குஞ்சரமாலை ஆனந்தக்களிப்பு ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.
இந்நூற்றாண்டில் உடுமலைப்பேட்டையில் இப்பெயரொடு வாழ்ந்த கவிராயர் திருப்பேரூர்ச் சிகையறுத்தான் வண்ணம் என்னும் நூலினை இயற்றியுள்ளார்.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 112)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/esupzmat/
தமிழ்“இராமசாமிக் கவிராயர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/esupzmat/APA
Oliyon Research. (2026). இராமசாமிக் கவிராயர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/esupzmat/MLA
"இராமசாமிக் கவிராயர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/esupzmat/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment