இராட்லர்
irāṭlar
கி.பி. 18–ஆம் நூற்றாண்டில் சமயத்தொண்டு புரிவதற்காகத் தமிழகம் வந்த மேலைநாட்டுக் கிறித்தவச் சமயச் சான்றோர்களுள் ஒருவர்.
கி.பி. 18–ஆம் நூற்றாண்டில் சமயத்தொண்டு புரிவதற்காகத் தமிழகம் வந்த மேலைநாட்டுக் கிறித்தவச் சமயச் சான்றோர்களுள் ஒருவர். இவரது முழுப் பெயர் இராட்லர் சான் பீட்டர் (Rottler, John Peter) என்பதாகும். இவர் கி.பி. 1749–ஆம் ஆண்டு பிரான்சு நாட்டு இசுடிராசுபர்கு (Strasburg) நகரில் பிறந்தார். இவர் இசுடிராசுபர்கு பல்கலைக் கழகத்தில் பயின்று எம்.ஏ. பட்டமும், எர்லாசன் பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டமும் பெற்றார். கோப்பன்கேகன் (Copenhagen) என்னும் நகரில் கிறித்தவச் சமயக் கல்வி பெற்றுக் கி.பி. 1775–ஆம் ஆண்டு குரு பட்டம் பெற்ற இவர் தேனிசு வேத போதக சங்கத்தைச் (Danish Mission) சார்ந்த சமயப் பரப்புநராக கி.பி. 1776–ஆம் ஆண்டு தமிழகம் வந்தார். தமிழகத்தில் தரங்கம்பாடி என்னுமிடத்தில் கி.பி. 1803–ஆம் ஆண்டு வரை சமயப்பணி ஆற்றிப் பின்னர்ச் சென்னை சென்று, அங்குக் கிறித்தவச் சமயப் பணிப் பொறுப்பினை ஏற்றார். சென்னையும் பழவேற்காடும் தரங்கம்பாடியும் இவர் சமயப் பணியாற்றிய இடங்களுள் குறிப்பிடத்தக்கனவாகும். இவர் திருநெல்வேலிப் பகுதிக்கும் சமயப்பணி குறித்துச் சென்று திரும்பினார்.
சென்னையில் சமயப்பணி ஆற்றியபோது, பெப்ரீசியசு (Fabricius) என்பார் மேற்கொண்ட புதிய ஏற்பாட்டின் மொழி பெயர்ப்புப் பணிக்குப் பெருந்துணையாக இருந்தார். கிறித்தவப் பொதுச் செப நூலினைத் தமிழில் மொழி பெயர்த்தார். சென்னையில் இருந்தபோது ஐரோப்பியச் சிறுமியர் அனாதை மடத்தின் செயலராகவும், விசாரணைக் குருவாகவும் பணியாற்றிய பெருமை இவருக்குண்டு.
தமிழகம் வந்த இராட்லர், தமிழ் மொழிப் பயிற்சியில் மிக்க ஆர்வத்துடன் ஈடுபட்டதுடன் இந்தியப் பயிரியல் வரலாற்றையும் விரும்பிப் பயின்றார். தென்னிந்தியத் தாவரங்களின் புதுவகைகளை ஐரோப்பாவிற்கு அனுப்பிப் பயிரியல் வரலாற்றாராய்ச்சிக்குப் பேருதவி புரிந்தார். ஓய்வு நேரங்களில் இவர் திரட்டி வைத்திருந்த பயிரினத் தொகுதிகள் இவரை எண்வகைக் கல்விக் குழுக்களில் உறுப்பினராக்கி, இவர் புகழ் பரவக் காரணமாக அமைந்தன என்பர்.
இராட்லர் தமிழுக்குச் செய்த சிறந்த தொண்டு இவர் தொகுத்த தமிழ்–ஆங்கில அகராதியாகும். அது, ‘இராட்லர் தமிழ்–ஆங்கில அகராதி’ எனப்படும். இவ்வகராதி 1425 பக்கங்களில் 37,000 சொற்களைக் கொண்டமைந்துள்ளது. பயிரியற் கலைத் தொடர்பான சொற்களுக்கு இவர் அளித்த பொருளையே இவருக்குப் பின்னர் வந்த வின்சுலோ போன்ற தமிழ் ஆங்கில அகராதித் தொகுப்பாளர்களும் மேற்கொண்டார்கள் என்பதிலிருந்து, இவரது அகராதியின் சிறப்பினை அறியலாம். அவ்வகராதி நான்கு தொகுதிகளாக அச்சிடப்பட்டது. முதல் தொகுதி, சென்னை வேப்பேரியில் கி.பி. 1834–ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. அந்நூலினை அப்போது இந்தியாவின் அரசப் பேராளராக (Governor General) விளங்கிய வில்லியம் பெண்டிங்குப்பிரபுவுக்குக் காணிக்கையாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இரண்டாம் தொகுதி அச்சில் இருக்கும்போது இவர் காலமானமையால் தெய்லர் (Taylor) என்பாரும், டி. வெங்கடாசல முதலியாரும் அப்பதிப்புப் பணியை மேற்கொண்டு, அத்தொகுதியினை கி.பி. 1836–37–ஆம் ஆண்டில் வெளியிட்டனர். அவ்வகராதியின் மூன்று, நான்கு ஆகிய தொகுதிகள் முறையே கி.பி. 1839, 1841 ஆகிய ஆண்டுகளில் வெளியிடப்பட்டன. அகராதியில் தொகுக்கப்பட்டுள்ள சொற்களும் அவற்றின் பொருள்களும் பெரும்பாலும் சதுரகராதியினைப் பின்பற்றி அமைந்துள்ளன.
மிக்க மதிப்புடையதாயினும், இவரது அகராதியில் புராணக் கருத்துகள், அறிவியல், வானநூல் தொடர்பான சொற்கள் பல சேர்க்கப்படவில்லை என்பதும் இலங்கைத் தமிழ் ஒதுக்கப்பட்டுத் தமிழகத் தமிழே பெரிதும் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதும் குறைகளாகச் சுட்டப்படுகின்றன. ‘ஆங்கிலத் தேவாலயங்களில் வழக்கமாக இருக்கும் பொதுச் செபங்களும், ஞானதிரவியங்களைப் பரிமாறும் ஒழுங்கும், தாவீதின் சங்கீதங்களும் அடங்கிய புத்தகம்’ என்னும் மொழி பெயர்ப்பு நூலினை இவர் கி.பி. 1819–ஆம் ஆண்டில் பதிப்பித்துள்ளார். ‘தேவாலயங்களில் ஓதும்படி குறிக்கப்பட்ட தாவீதின் சங்கீதங்களும், காலை மாலை செபிக்க வேண்டிய செப ஒழுங்கும்’ என்னும் மொழி பெயர்ப்பு நூலினை கி.பி. 1821–ஆம் ஆண்டில் பதிப்பித்து வெளியிட்டுள்ளார்.
அறுபது ஆண்டுகள் சமயப்பணியாற்றிய இராட்லர் கி.பி. 1836–ஆம் ஆண்டுத் தம் 86–ஆம், வயதில் காலமானார். இரா.செ.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 68)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/epx9zx7h/
தமிழ்“இராட்லர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/epx9zx7h/APA
Oliyon Research. (2026). இராட்லர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/epx9zx7h/MLA
"இராட்லர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/epx9zx7h/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment