இச்சிறுமரம் யூஃபோர்பியேசிக் குடும்பத்தைச் சேர்ந்தது. இதன் தாவரவியல் பெயர் ஆண்டிடெஸ்மா பியூனியஸ் (Antidesma bunius) ஆகும். இது பசுமை குன்றா மர வகையைச் சேர்ந்தது. இந்தியாவின் வெப்பம் மிகுந்த பகுதிகளிலும், இலங்கையிலும் இம்மரத்தைக் காணலாம். இதனைப் பழங்களுக்காக வளர்ப்பதுண்டு. பழங்கள் சிறியவையாக முட்டை வடிவிலும், கருஞ்சிவப்பு அல்லது கறுப்பு நிறத்திலும் இருக்கும். இதன் பட்டை நச்சுத் தன்மை வாய்ந்தது. இதில் ஆல்கலாய்டு உள்ளது. இம்மரத்தைப் பயன் படுத்திக் காகித அட்டைகள் செய்யலாம். இந்தியாவில் ஆண்டிடெஸ்மா அசிடம் (Antidesma acidum) என்னும் புதர்ச் செடியைக் கேரளா, மேற்கு வங்காளம், பீஹார், ஒரிஸ்ஸா ஆகிய மாநிலங்களில் காணலாம். இதன் பூக்கள் தனித் தனியாகவும் மிகச் சிறியவையாகவும் இருக்கும். கனி உள்ளோட்டுச் சதைக் கனி (drupe) ஆகும். இதன் வேரையும், இலைகளையும் இடித்துச் சாறு பிழிந்து, நீர் கலந்து, அருந்தச் சீதம் கலந்த வயிற்றுக் கடுப்பு நீங்கும். —கோ. அர்ச்சுனன்