உட்குழு
uṭkuḻu
மனிதர்கள் பலருடன் தொடர்புற்று வாழும் நிலையைக் கொண்டவர்கள்; தனித்து வாழ இயலாதவர்கள்.
மனிதர்கள் பலருடன் தொடர்புற்று வாழும் நிலையைக் கொண்டவர்கள்; தனித்து வாழ இயலாதவர்கள். வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் பலவகைப்பட்ட மக்களுடன் வாழவேண்டிப் பல பிணைப்புகளை ஏற்படுத்திக் கொள்வர். இப்பிணைப்புகளின்வழி உண்டாவதே குழு.
சமுதாயவியலில் குழு (Group) என்பது முதன்மையான கோட்பாடுகளுள் ஒன்று. இதனை விளக்குவதற்கு ஒரு குறிப்பிட்ட வரையறையை வகுப்பதில் சமுதாயவியலார் உடன்படாமல் போயினர். இத்துறையின் சொல்வழக்கில் குழு என்பதன் வரையறை பலவாறு விளக்கப்படும். குழு என்பது மக்க- ளின் தொகுப்பு என்றும் பொதுத் தன்மைகளைப் பெற்றுள்ள மக்களின் சேர்மம் என்றும், ஒரு குறிப்பிட்ட அமைப்புடைய முறையைக் (Organized Pattern) கொண்டு செயற்படும் மக்கள் கூட்டம் என்றும், அனைத்துச் செயல்களில் கூட்டுணர்வும் (We Feeling) தாம் ஓர் உறுப்பினர் என்னும் எண்ணமும் உடைய மக்கள் கூட்டம் என்றும் பல வகையாகப் பொருள் கொண்டு விளக்கப்படும்.
பலர் ஒன்றுபட்டு ஓரிடத்தில் காணப்படுவதை மட்டும் வைத்து அவர்களைக் குழுவென வரையறை செய்யவியலாது. பேருந்து நிலையத்தில் காணப்படும் மக்களையோ தெருவில் நடக்கும் பலரையோ குழு எனக் கூறுவதும் பொருந்தாது. ஒரு குழுவைச் சேர்ந்த அனைவரும் அருகருகில் இருக்க வேண்டும் என்பதும் அவசியமன்று. ஒரு சமூகக் குழுவினர் ஒரு செயலில் கூட்டாக இணைவர்; ஒவ்வொருவரின் பங்களிப்பும் இன்றியமையாதனவாய்க் காணப்படும். ஒரு குறிப்பிட்ட வழிபாட்டு மரபை (Cult) வணங்கும் சமயக் கூட்டத்தினர். பல உறுப்பினர்களைக் கொண்ட விளையாட்டு அணி, ஒரே பொருளை உற்பத்தி செய்யும் பலர் ஆகிய ஒவ்வொரு வகையினரும் ஒருவகைக் குழுவாவர். இது தவிர்த்து ஒருவரை ஒருவர் முன்பின் அறியாத, ஒரு குறிப்பிட்ட வட்டாரத்தைச் சாராத பலர் குழுவாகச் செயற்படுவதுமுண்டு. எடுத்துக்காட்டாக, போக்குவரத்து அல்லது வேறு துறைகளில் பயன்படுத்துவோர் கட்டணம் உயர்த்தப்படும்போது, அதனால் பாதிக்கப்படுபவர் அனைவரும் ஒன்று சேர்ந்து அதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பர். இது தேசிய அளவில் ஏற்படுமானால் தேசிய குழுவாக (National Group) மாறும். இவ்வாறு குழு என்பதன் வகையும் தன்மையும் பரந்த அளவில் வேறுபடுகின்றன.
குழுக்கள் அவற்றின் செயல், அளவு, உறவு, பிணைப்பு, நோக்கம், பண்பு முதலானவற்றின் அடிப்படையில் பல வகையாகப் பாகுபடும். இவற்றுள் ஒன்றே உட்குழு (Subgroup) ஆகும். உட்குழு என்பது அது அடங்கியுள்ள குழுவின் பொதுத் தன்மைகளிலிருந்து சற்று விலகி, சில குறிப்பிட்ட செயல்களுக்காகவும் நோக்கங்களுக்காகவும் தனிக்குழு நிலையில் செயற்படும் தன்மையைக் கொண்டது. இது ஒட்டு மொத்தப் பார்வையில் ஒரு குழுவின் தனிப் பிரிவாகும். உட்குழுவினர் உறுப்பினர் நிலையிலும் செயல்கள், நோக்கங்கள் ஆகியவற்றிலும் தம் பெருங்குழுவிலிருந்து மாறுபடுவர். எடுத்துக்காட்டாக பழங்குடிச் சமுதாயத்தில் இளையவர் கூடங்கள் (Dormitories) அமைப்புகள் உள்ளன. இந்த அமைப்பில் பெரும்பான்மையாக மணமாகாதவர்கள் பல செயற்பாடுகளுக்காக ஒன்றுபடுகின்றனர். இவர்கள் ஒரு குழுவாகும். இவர்களுள் பல வயதுப் பிரிவினர்கள் (Age–Sets) என்ற பாகுபாட்டை ஏற்படுத்தி, ஒவ்வொரு வயதுப் பிரிவினரையும் அந்தந்த வயதிற்கு ஏற்பச் சமய, சமூக, பொருளாதாரச் செயல்களில் பயிற்றுவிக்கின்றனர். இரவுக் காலங்களில் ஒரே குடிசையில் அனைவரும் ஒன்று கூடிக் காலம் கழிப்பர். இளையவர்கூட உறுப்பினர் என்ற குழு நிலையிலிருந்து வயதுப்பிரிவினர் என்ற உட்குழு நிலையில் பிரிகின்றனர்.
இது போன்றே வயது வந்த இளையோர் குழுவினருள் ஒருபாலார் இரகசியச் சங்க (Secret Society) உறுப்பினராகின்றனர். இச்சங்கத்தின் உறுப்பினர் தகுதி தனித்தன்மை வாய்ந்தது. நோக்கங்களும் செயல்களும் தனிப்பட்டவை. தம் சமூகத்தில் ஒத்த வயதுடைய ஆண், பெண் ஆகிய இருபாலரும் இளையவர்கூட அமைப்பில் ஒரு குழுவினராக இருப்பினும், இரகசியச் சங்க உறுப்பினர் நிலையில் உட்குழுவினராக மாறுகின்றனர். இன்பச் சுற்றுலாப் பயணம் செல்லும் குழுவில் அதைப் பொறுப்பேற்று நடத்தும் சிலர் உட்குழுவினராகச் செயற்படுவது போன்று உட்குழுவின் பல நிலைகளை விளக்கலாம்.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 754)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/emxm8crz/
தமிழ்“உட்குழு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/emxm8crz/APA
Oliyon Research. (2026). உட்குழு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/emxm8crz/MLA
"உட்குழு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/emxm8crz/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment