உப்பிலியர்
uppiliyar
தென் இந்தியாவின் பல பகுதிகளிலும் உப்பை உற்பத்தி செய்து, உப்புச் சார்ந்த பிற தொழில்களிலும் ஈடுபட்டுள்ள ஒரு வகுப்பினர்.
தென் இந்தியாவின் பல பகுதிகளிலும் உப்பை உற்பத்தி செய்து, உப்புச் சார்ந்த பிற தொழில்களிலும் ஈடுபட்டுள்ள ஒரு வகுப்பினர். தமிழ் நாட்டில் உள்ளவர்கள் உப்பிலியர் என்றும், ஆந்திரப் பிரதேசத்திலுள்ளவர்கள் உப்பரா (Uppara) என்றும், கருநாடக மாநிலத்திலுள்ளவர்கள் உப்பாரா (Uppara) என்றும் கூறப்படுவர். இவர்கள் முறையே தமிழ், தெலுங்கு, கன்னட மொழியைப் பேசுபவர்கள். கிணறு வெட்டுதல், கால்வாய் வெட்டுதல், வீடு கட்டுதல், கல் அறுத்தல், பிற மண் வேலைகள் முதலானவற்றைத் தொழிலாகக் கொண்ட சாதிக் குழுவினர் என உப்பலியர், உப்பராவினர் பற்றி எச்.ஏ. இசுட்டூவர்ட்டு (H.A. Stuart) குறிப்பிடுவார். தெலுங்கு உப்பராவினர் கி.பி. 19–ஆம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் அரசர்களின் கோட்டைகளுக்கு மண்சுவர் எழுப்பும் தொழிலை மேற்கொண்டிருந்தனர் எனப் புச்சானன் (Buchanan) குறிப்பிடுகிறார். இவர்கள் உப்புத் தொழில் மட்டுமன்றி வெடிமருந்துக்கு முதன்மையான பொருள்களுள் ஒன்றான வெடியுப்புப் (Saltpetre) பொருளையும் உற்பத்தி செய்தனர். எனினும் இவர்களது மரபுத் தொழில் உப்புத் தொழிலே.
உப்பிலியர், உப்பராவினர், உப்பாராவினர் ஆகிய மூவரும் முன்னாளில் ஓர் இனத்தவரே என்பர் மானிடவியலார். நாளடைவில் இவ்வினத்தவர் பல பகுதிகளுக்கும் இடம்பெயர்ந்து அந்தந்த வட்டார மொழியை ஏற்றுச் சூழ்நிலைக்கு ஏற்ப வாழ முற்பட்டனர். இன்று இவர்கள் ஒரிசா மாநிலக் கஞ்சம் (Ganjam) மாவட்டத்திலிருந்து தமிழ்நாட்டின் தென் பகுதி வரை பரவிக் காணப்படுகின்றனர்.
கடவுள் தமக்கு உப்பு வழங்கும் பொருட்டுப் படைத்துக்கொண்ட உப்பிலியனின் வழிவந்தவர்கள் என உப்பிலியர் தம்மைக் கருதுகின்றனர். உப்பிலியனின் மனைவி கண்ணாடி வளையல்கள் வாங்குவதற்கு உப்பைப் பண்டமாற்றம் செய்ததால் கடவுளின் நம்பிக்கையை இவ்வினத்தவர் இழந்தனர் என்றும், தவறு செய்த உப்பிலியன் மனைவியைக் கொல்ல முயன்றபோது, அவள் பின்பக்கத் துளை வழியே தப்பித்து விட்டாள் என்றும், இதனாலேயே தங்கள் சாதிப் பெண்கள் கண்ணாடி வளையல்களை அணிவதில்லை என்றும், இவர்கள் அடுப்புக் கட்டும் போது ஒரு துளையினை வைத்துக் கட்டுவர் என்றும் குறிப்பிடுவர். இவர்களது மரபினைக் குறிப்பிடும் போது விட்டுணு புராணத்தில் (Vishnu Purana) குறிப்பிடப்பட்டுள்ள சகாரா (Sagara) என்னும் தொன்மயனின் (Mythical Individual) வழிவந்தவர் என்றும் குறிப்பிடுவர். அத்தொன்மயன் வங்கக் கடலைத் தோண்டிய பெருங்கதையையும் குறிப்பிடுவர்.
உப்பங்கழியிலிருந்தும் கடல் நீரிலிருந்தும் பெறப்பட்ட உப்புகளை இலம்பாடிகளும், கொரச்சாவினரும் (Korachas) பெற்று வாணிகம் செய்தனர். அப்போதைய ஆங்கிலேய அரசும் சென்னை உப்பு ஆணையமும் (1876) நிசாம் (Nizam) அரசும் இவர்களின் தொழிலில் பல விதிகளைப் புகுத்தித் தொழில் முறையில் மாறுபாடுகளை ஏற்படுத்தின.
உப்பிலியர், உப்பரா, உப்பாரா ஆகியோர் இணக்கமாகப் பல இடங்களில் காணப்பட்டாலும் இவர்களின் குழுக்களிடையே திருமணம் நடைபெறுவதில்லை. இவர்களிடையே மணப்பெண் பூப்படைந்த பின்னரும் பூப்படைடயா முன்னரும் மணம் கொள்வர். மணமுறை பலபகுதிகளில் பலவாறாக நடைபெறுகிறது. தந்தைவழி அத்தையின் மகளை விரும்பி மணக்கின்றனர். இவர்களின் சமூகச் செயற்பாடுகளையும் சிக்கல்களையும் ‘பட்டக்காரன்’ என்னும் சாதித்தலைவன் கண்காணிக்கிறான். பஞ்சாயத்து அமைப்பு இவர்களிடையே இப்போது நிலவுகிறது. சமூகத்தில் குற்றம் இழைப்பவருக்கு எளிமையானது முதல் கடுமையானது வரை தண்டனை உண்டு. விதவை மணமும் மறுமணமும் இவர்களிடையே உண்டு.
உப்பிலியர்கள் சைவ சமயத்தையும் வைணவ சமயத்தையும் சார்ந்த இரு நிலையினரால் உள்ளனர். கிராமத் தெய்வங்களையே பெரிதும் வழிபடுகின்றனர். சங்கலம்மா (Sunkalamma), திம்மப்பா (Thimmappa), சம்புலம்மா (Jambulamma) போன்ற தெய்வங்கள் குறிப்பிடத்தக்கவை.
உப்பிலியர்கள் சமூக, பொருளாதார அமைப்பில் மாறுதல்களைப் பெற்று வருகின்றனர். இன்று இவர்களும் பலர் தங்களின் மரபுத் தொழிலை விடுத்து அரசுப் பணியிலும் தொழிற் கூடங்களிலும் பணியாற்றி வருகின்றனர்.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 912)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ekgrhc5n/
தமிழ்“உப்பிலியர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/ekgrhc5n/APA
Oliyon Research. (2026). உப்பிலியர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ekgrhc5n/MLA
"உப்பிலியர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/ekgrhc5n/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment