இக்காலத்தில் அரசு அல்லது நாடு (State) என்னும் சமுதாய அமைப்புக்குக் கொடுக்கப்படும் அரசியல் இலக்கணம் அதன் நான்கு இயல்புகளைக் குறிப்பிடுகிறது. அது குறிப்பிடும் நான்கு இயல்புகளான நிலம் (Territory), மக்கள் (Population), அரசாங்கம் (Government), இறையாண்மை அல்லது இறைமை (Sovereignty) ஆகியவற்றுளெல்லாம் இறைமை என்பதுதான் மிகவும் இன்றியமையாத இயல்பு ஆகும். ஒவ்வொரு முழு வளர்ச்சிபெற்ற அல்லது தன்னாட்சி பெற்ற (Independent) நாட்டிலும் ஒரு தலைமையான அதிகாரி (Supreme Authority) இருக்கிறாரென்பதும், அவருடைய ஆணைக்கு எதிராக மேல்முறையீடு (Appeal) செய்து கொள்ளுதற்குரிய அதிகாரி எவரும் இல்லை என்பதும் இறையாண்மை என்பதன் பொருளாகும். ஆகையால் ஒரு குறிப்பிட்ட அரசியல் சமுதாயத்துக்கு (Political Community) அரசு எனக் கூறப்படுவதற்குரிய தகுதி அல்லது நிலை இருத்தல் வேண்டுமானால், அது மற்றெந்த நாட்டினாலும் ஆளப்படாமல் தன்னைத் தானே ஆண்டுகொள்ளக்கூடிய தன்னுரிமையைப் பெற்றிருத்தல் வேண்டுமென்பதும், அவ்வாறன்றி, அது மற்றொரு நாட்டினுடைய ஆட்சிக்கு உட்பட்டிருக்குமானால் அதற்கு நிலப்பரப்பும், மக்களும், அரசாங்க அமைப்பும் இருந்தாலும், அது அரசு என்று சொல்லப்படும் தகுதி உடையது அன்று என்பதும் இறையாண்மை என்ற சொல்லினால் உணர்த்தப்படுகின்றன. தலைமையான அதிகாரம் இருந்தால்தான் தன்னாட்சி உரிமையும் அதாவது அதிகாரமும் இருத்தல் இயலும். இத்தகைய தலைமை அதிகாரத்தின் விளைவான அரசு, தன்னிடத்தில் உள்ள எந்த ஒருவரும் எந்த ஒரு கழகமும் தனதாணையை மீறாதவாறு செயற்படுத்தவும், மற்ற எந்த நாட்டின் அல்லது நாடுகளின் கட்டுப்பாட்டிற்கும் உட்படாமல் அது செயவாற்றவும் சட்ட வகையான அதிகாரம் (Legal Authority) பெற்றுள்ளது. ஆகையால் பன்னாட்டு ஒப்பந்தங்களும், பன்னாட்டு வழக்கங்களும் (International Agreements and International Conventions) சட்ட வகையாகப் பார்க்குமிடத்து இறைமை அரசுகளைக் கட்டுப்படுத்தமாட்டா. பன்னாட்டு ஒப்பந்தங்களையும் பன்னாட்டு வழக்கங்களையும் இறைமையுடைய அரசுகள் (Sovereign States) தங்களுடைய நலன்கருதியே மதித்துச் செயற்படுகின்றன. இன்றைய ஐக்கிய நாடுகள் கழகத்தில் (United Nations Organisation) உறுப்பு நாடுகளாக உள்ள 150க்கும் மேற்பட்ட இறைமை அரசுகளின் நிலையும் சட்டவகையாகப் பார்க்குமிடத்து (Legally) இவ்வாறாகவே உள்ளது; இவ்வுறுப்பு நாடுகள் கழகத்தில் உறுப்பினராய் இருபதும் அதன் தீர்மானங்களுக்குக் கட்டுப்பாட்டு நடப்பதும் தங்களுடைய விருப்பத்தின் பேரிலேதான் இருக்கிறதே தவிர, சட்டவகையான அதிகாரம் எதுவும் அவற்றைக் கட்டுப்படுத்தவில்லை என்பது தெளிவு. மற்ற நாடுகளின் உரிமைகளை ஒவ்வொரு நாடும் மதித்துப் பாதுகாத்தால்தான், அதனுடைய உரிமைகளுக்கு மதிப்பும் பாதுகாப்பும் கிடைக்குமென்ற உணர்வின் காரணமாகவே அவை ஒப்பந்தங்களின் வாயிலாகவும் கழக உறுப்பினர் பதவி வாயிலாகவும் மற்ற நாடுகளின் உரிமைகளுக்கு மதிப்புக் கொடுக்கின்றன. இறைமையின் வரலாறு பண்டைய கிரேக்க நாட்டில் இப்பொழுது காணப்படுவதுபோல் நிலப்பரப்பிலும், மக்கள் தொகையிலும் பெரிய அரசுகள் இல்லை; ஒவ்வொரு மக்கட்கூட்டத்தாரும் ஒரு நகரத்தில் (Polis) தன்னாட்சி உரிமையோடியிருந்ததனால் இறைமையுடைய நகரரசுகள் (City States) தோன்றின. இவற்றைக் கண்டு அரிசுடாட்டில் (Aristotle, கி.மு. 384–கி.மு. 322) ஒவ்வோர் அரசும் தன்னாட்சி உரிமை பெற்றிருத்தல் வேண்டுமென்றும், அத்தனி உரிமையைக் காக்கவல்ல முழு அதிகாரம் அதற்கு இருத்தல் வேண்டுமென்றும் கூறுகிறார். அரசாங்கம் என்ற கருவியின் வாயிலாகப் பொது மக்களின் நலனுக்காக இறைமை அதிகாரம் கையாளப்படுமாயின் அவ் வாட்சி முடியாட்சி என்றும் (Monarchy), உயர்குடிமக்களாட்சியாயின் உயர் குடியாட்சி என்றும் (Aristocracy), பொது மக்களுடைய ஆட்சியாயின் பொது மக்களாட்சி என்றும் (Polity) சொல்லப்படும். இவை தூய ஆட்சி எனப்படும். மேற்கூறிய ஆட்சிகள் பொதுமக்களுடைய நலனுக்காக அல்லாமல் ஆளுவோர் நலனுக்காகக் கையாளப்படுமாயின், அவை முறையே கொடுங்கோலாட்சி (Tyranny) என்றும், செல்வச் சிறுகுடியாட்சி என்றும் (Oligarchy) கும்பலாட்சி (Mobocracy) என்றும் சொல்லப்படுமென அரிசுடாட்டில் கூறினார். கிரேக்கரைப் பின்பற்றி உரோமானியர்கள் அரசின் இறைமை அதன் மக்களிடத்தில் இருப்பதாகக் கருதி, மக்களாட்சிக் குடியரசை (Republican Democracy) நிறுவினர். உரோமானிய நகரரசு பேரரசாக வளர்ந்தபின் உரோமானியப் பேரரசரிடமே இறைமை அதிகாரம் இருப்பதாகக் கருதப்பட்டது. உரோமானியப் பேராசு மறைந்தபின் இடைக்காலத்தில் (Middle Ages, அதாவது கி.பி. 6–ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 15–ஆம் நூற்றாண்டு வரை) இக்காலச் சமுதாய அமைப்பாகிய அரசு என்பது உருவாகவில்லை. கிறித்தவத் திருச்- சபையின் தலைவராகிய போப்பு (Pope) திருச்சபையின் மீது மட்டுமல்லாமல், கிறித்தவ நாடுகளின் மீதும் தலைமை அதிகாரம் செலுத்தும் உரிமையைக் கோரினார். அதனால், அவரை எதிர்த்த புனித உரோமானியப் பேரரசருக்கும் அவருக்குமிடையே பூசல்கள் விளைந்தன. மேலும் நிலங்களை அரசரிடமிருந்து மானியங்களாகப் பெற்ற பிரபுக்களும் நிலங்களோடு அரசியலதிகாரங்களையும் பொறுப்புகளையும் (அதாவது படைகளை வைத்திருத்தல், நீதி வழங்குதல் முதலிய ஆட்சிப் பொறுப்புகளையும்) பெற்று ஆட்சி செய்ததனால். தலைமையான முழு அதிகாரமுடைய அரசருடைய ஆட்சியின்கீழ் இறைமையுடைய அரசு உருவாவது சிறிது காலத்துக்குக் கடினமாக இருந்தது. ஆனால் கி.பி. 15–ஆம் நூற்றாண்டளவில் நிலமானியமுறை சிறிதுசிறிதாக மறையத் தொடங்கியதால், வரம்பற்ற அதிகாரங்கொண்ட அரசர்களுடைய ஆட்சியின்கீழ் இங்கிலாந்து, பிரான்சு, இசுபெயின், போர்ச்சுகல் முதலியவை இறைமை அரசுகளாக ஆயின; கி.பி. 18,19,20–ஆம் நூற்றாண்டுகளில் பல இறைமை அரசுகள் உலகமெங்கணும் தோன்றின. ஆங்கில அரசியல் சிந்தனையாளர் ஆப்சு (Hobbes) என்பவர் ஆளுபவருடைய (அரசருடைய) அதிகாரம் முழுமையானதும் வரம்பற்றதுமாகுமென்று ஒரு கொள்கையை வகுத்தார். இதைப்போலவே இங்கிலாந்தை ஆட்சி செய்த இசுடூவர்ட்டு குடும்பத்தைச் சேர்ந்த அரசர்கள் (Stuart Dynasty), அரசர்கள் கடவுளால் அமர்த்தப்பட்டவராகையினால் அவர்கள் தம் குடி மக்களுக்குப் பொறுப்புடையவரல்லரென்றும், அவர்களை மக்களோ பாராளுமன்றமோ தட்டிக்கேட்கக் கூடாதென்றும், அரசர்களுடைய அதிகாரம் முழுமையான, வரம்பற்ற அதிகாரமாகுமென்றும் கூறி, தெய்விக அரசுரிமைக் கொள்கையை (The Divine Right Theory) வகுத்தனர். இதனை மறுத்து சான் லாக்கு (John Locke) என்ற ஆங்கிலச் சிந்தனையாளர் மக்களுடைய உயிர், உரிமை, உடைமை முதலியவற்றைப் பாதுகாக்க அவர்களால் ஓர் ஒப்பந்தத்தின் வாயிலாக நிறுவப்பட்டவர் தாம் அரசர் அல்லது அரசாங்கம் ஆகும் என்றும், ஆகையால் அரசருடைய அதிகாரம் வரம்புக்குட்பட்டதென்றும், அவர் மக்களுக்குப் பொறுப்பை நிறைவேற்றத் தவறினால் அவரை நீக்கிவிட்டு வேறொருவரை அமர்த்த மக்களுக்கு உரிமை உண்டென்றும் கூறினார். இதே கருத்தை வலியுறுத்தி மக்களே இறைமை உடையவர்களென்றும், அவர்கள் செய்யும் சட்டங்களை நிறைவேற்றுதல் ஒன்றுதான் அரசாங்கத்தின் பணி ஆகுமென்றும் பிரெஞ்சு நாட்டுச் சிந்தனையாளர் உரூசோ (Rousseau) என்பவர் கூறினார் இவர் வகுத்த மக்கள் இறைமைக் கொள்கையே (Theory of Popular Sovereignty) 1789–ஆம் ஆண்டுப் பிரெஞ்சுப் புரட்சிக்கும் இக்காலத்திய குடியாட்சி அரசாங்க முறைக்கும் வித்திட்டது. இந்த மக்கள் இறைமைக் கொள்கையின் அடிப்படையில் தான் சுவிட்சர்லாந்து நாட்டில் சட்டமன்றம் செய்யும் சட்டங்களை ஒப்புக் கொள்ளவும் தள்ளுபடி செய்யவும் கூடிய அதிகாரத்தையும் (Referendum), தாங்களே சட்டமுன் வரைவுகளை வரைந்து சட்ட மன்றத்துக்கு அளிக்கும் அதிகாரத்தையும் (Initiative) வாக்காளக் குடிமக்கள் கையாளுகின்றனர். இறைமைக்குக் கொடுக்கப்படும் இலக்கணங்கள் (Definitions): ‘குடிமக்கள் மீது செலுத்தப்படுவதும் சட்டவரம்புக்கு உட்படாததுமாகிய தலைமை அதிகாரமே இறைமை எனப்படும்’ என்று போதின் (Bodin) என்ற கி.பி. 16–ஆம் நூற்றாண்டைய பிரெஞ்சு அரசியல் சிந்தனையாளர் இறைமை அதிகாரத்துக்கு இலக்கணம் வகுக்கிறார். குரோசியசு (Grotius) என்ற தச்சுச் (Dutch) சிந்தனையாளர், ‘எவருடைய செயல்கள் மற்றொருவருடைய கட்டுப்பாட்டுக்கு உட்படாமலும் மற்றொருவரால் மீறப்படாமலும் இருக்கின்றனவோ, அவரிடத்தில் இருக்கின்ற தலைமையான அரசியலதிகாரமே இறைமை அதிகாரம் ஆகு’மென்று குறிப்பிடுகிறார். துகுயி (Duguit) என்ற இக்காலப் பிரெஞ்சு ஆசிரியர், ‘இறைமை என்பது அரசின் ஆணைவிடுக்கும் அதிகாரம் ஆகும்; அது ஓர் அரசில் முறையாக அமைக்கப்பட்டுள்ள ஒரு தேசிய இனத்தாருடைய விருப்பம் ஆகும். அரசின் நிலப்பகுதியிலுள்ள எல்லோருக்கும் கட்டுப்பாடுகளில்லாமல் ஆணைகளை வழங்குவதற்கு உள்ள உரிமையும் இறைமை ஆகும்’ என்று கூறுகிறார். பர்கசு (Burgess) என்ற அமெரிக்க ஆசிரியர் இறைமையை, ‘குடிகள் மீதும் குடிகளை உடைய எல்லாக் கழகங்களின் மீதும் செலுத்தப்படுகின்ற முதன்மையான (Original), முழுமையான, வரம்பற்ற அதிகாரம்’ என்று குறிப்பிடுகிறார். ‘தன்னை மாற்ற இயலும் விதிகளுக்கு உட்படாததும், பிறரிடம் ஒப்படைக்கப்படாததும், சிறிதுகாலத்துக்கு மட்டுமன்றி நிலையாக இருப்பதுமாகிய அதிகாரமே இறைமை எனப்படும்’ என்று ஆசிரியர் போலக்கு (Pollock) என்பவர் இலக்கணம் வகுக்கிறார். ‘இறைமை என்பது அரசினுடைய தலைமையான விருப்பமே (Supreme Will) ஆகு’மென்று ஆசிரியர் வில்லோபி (Willoughby) என்பவர் குறிப்படுகிறார். ‘ஒரு குறிப்பிட்ட மனித உயர் அதிகாரியானவர் தம்மை ஒத்த வேறொரு உயர் அதிகாரிக்குக் கீழ்ப்படியும் நிலையில் இல்லா- மல், ஒரு குறிப்பிட்ட சமூக மக்கள் வழக்கமாகத் தன் தாணைகளுக்குக் கீழ்ப்படிகின்ற (அல்லது கட்டுப்படுகின்ற) நிலையைப் பெறுவாராயின், அந்தக் குறிப்பிட்ட உயர் அதிகாரி அந்தச் சமூகத்தில் இறைமை அதிகாரி ஆவார்; மேலும் (அவ்வுயர் அதிகாரியோடு கூடிய) அந்தச் சமூகமும் அரசியல் தன்மையும் தன்னாட்சி உரிமை உடையதாகும் என்று சான் ஆசுட்டின் (John–Austin) என்ற ஆங்கிலச் சட்ட இயலறிஞர் சட்ட இயல் வாயிலாக இறைமையின் பண்புகளை விளக்கமாகவும் சுருக்கமாகவும் கூறுகிறார். இதுவே அரசியல் நூலில் இறைமை என்பதற்கு ஒரு சிறந்த இலக்கணமாகக் கொள்ளப்படுகிறது. இறைமையின் பண்புகள் ஐவகைப்படும். அவை யாவன: இறைமை அல்லது உயர் அதிகாரமானது. அ) வரம்பற்றது, முழுமையானது (Absolute); ஆ) எல்லாவற்றையும் உட்படுத்தும் தன்மையுடையது (Universality); இ) மாற்ற இயலாத தன்மை உடையது (Inalienability); ஈ) நிலையான தன்மையுடையது (Permanence); உ) பகுக்கப்பட இயலாத தன்மையுடையது (Indivisibility), இறைமை அதிகாரமானது நாட்டிற்கு உள்ளும் புறமும் வேறெந்த அதிகாரத்தாலும் வரம்புபடுத்தப்பட இயலாதது. நாட்டினுள்ளே இருக்கும் எல்லா மக்களும் கழகங்களும் அதற்குப் கட்டுப்பட்டவர்களே ஆவர். நாட்டினுள்ளே இருக்கும் வரம்புகளெல்லாம் அது தனது விருப்பத்தின் பேரில் தானே ஏற்றுக் கொண்டவைகளாகையினால், அவற்றை அரசு சட்டவாயிலாக நீக்குதலும் இயலும். அயல்நாடுகளைப் பொறுத்த வரையிலும் அரசினுடைய இறைமை அதிகாரமானது மற்ற அரசுகளின் கட்டாயத்துக்கு உட்படாமலும் அவற்றின் தலையீடுதலுக்கு உட்படாமலும் தனித்து இருக்கிறது. அரசு மற்ற நாடுகளோடு செய்து கொண்டுள்ள ஒப்பந்தங்கள், பன்னாட்டு வழக்கங்கள் முதலியவை எல்லாம் அரசின் இறைமை அதிகாரத்தை அழிப்பதில்லை; எவ்வாறெனில், இவ்வொப்பந்தங்களுக்கும் பன்னாட்டு வழக்கங்களுக்கும் சட்டவகையான செயற்படுத்தும் அதிகாரம் (Legal Sanction) கிடையாது; இவ்வொப்பந்தங்களையும் பன்னாட்டு வழக்கங்களையும் இறைமை அரசு மதித்து நடக்கும் வரையில்தான் அவை செல்லுபடி ஆகும். பன்னாட்டு நீதிமன்றங்களால் பன்னாட்டுச் சட்டத்துக்கு விளக்கமளிக்க இயலுமே தவிர அதனைச் செயற்படுத்த இயலாது. இறைமை அதிகாரத்தின் மற்றப்பண்புகள் அதனுடைய வரம்பற்ற தன்மையிலிருந்தே பெறப்படுகின்றன. அரசினுடைய இறைமை அதிகாரமானது அரசினுள்ளே இருக்கும் எல்லா மக்களையும் மக்களால் அமைக்கப்பட்ட கழகங்களையும் கட்டுப்படுத்த வல்லது. அரசு சில பொருளின்மீது தனது அதிகார எல்லையைக் கையாளாமல் நிறுத்தி வைக்கலாம்; ஆசிரியர் கில்கிரைசுட்டு (Gilchrist) இதற்கு ஒரு நாட்டில் தங்கும் வேற்றுநாட்டுத் தூதுவரையும் அவருடைய அலுவலர்களையும் குறிப்பிடுகிறார். வேற்றுநாட்டுத் தூதுவரும் உடன் அலுவலரும் தமது நாட்டுச் சட்டங்களுக்கே கட்டுப்பட்டிருப்பவராவர். எந்த நாட்டில் பணி செய்கிறாரோ அந்த நாட்டில் சட்டங்களுக்கு அவர்கள் கட்டுப்படாமலிருக்கும் உரிமையை, அவர் பணி செய்யும் நாடு அவர்களுக்குப் பன்னாட்டு இணக்கம் அல்லது நடத்தை நயத்தின் (International Courtesy) காரணமாக வழங்குகிறது; அந்நாடு இவ்வுரிமையை மறுக்கவும் அதிகாரம் பெற்றுள்ளது. ஒரு நாடு தனது இறைமை அதிகாரத்தைத் தன்னிடமிருந்து பிரித்து எடுத்து வேறொரு நாட்டிற்குக் கொடுத்துவிட இயலாது; அவ்வாறு செய்தால் அது ஒரு தன்னாட்சி நாடு என்ற தகுதியையே இழந்துவிடும். ஆகையால் அரசு என்ற ஒரு சமூக அமைப்பு இறைமை என்ற பண்பை அல்லது இயல்பை நிலையாகப் பெற்றுள்ளது என்று தெளிவாகத் தெரிகிறது. நாட்டை ஆளும் அரசரோ ஆட்சியாளரோ இறந்தாலும் அல்லது பதவி துறந்தாலும் அவரோடு இறைமையும் மறைந்துவிடாது. இறைமை அதிகாரம் வேறொருவரால் கையாளப்படுகிறது என்பதுதான் பொருள். அரசாங்கம் மாறும் போது இறைமை அதிகாரம் கைமாறுகிறதே தவிர, அது அழிந்து விடுவதில்லை. அரசாங்கம் மாறினாலும் இறைமை அரசு நிலையாக இருக்கிறது. இறைமை முழுமையாக இருக்கின்ற காரணத்தினால், அது பகுக்கப்பட இயலாததாகும். ஆர்.சி. கெட்டல் என்பவர் (R.G. Ghettell), ‘இறைமை அதிகாரம் முழுமையாக (வரம்பற்றதாக) இல்லாவிட்டால் எந்த ஓர் அரசும் இருத்தல் இயலாது; இறைமை அதிகாரமானது பகுக்கப்படுமானால் ஒன்றுக்கு மேற்பட்ட அரசுகள் தோன்றும்’ என்று கூறுகிறார். பன்மைக் கோட்பாட்டாளர்கள் (Pluralists) இறைமை அதிகாரமானது வரம்பற்றது, பகுக்கப்பட இயலாதது என்ற கருத்துகளை வன்மையாக மறுத்து, இறைமை அதிகாரத்துக்கு நாட்டினுள்ளே சமூக, ஒழுக்க இயல் கருத்துகளும், நாட்டிற்கு வெளியே மற்றநாடுகளின் இறைமை அதிகாரங்களும் வரம்புகளாக அமைந்துள்ளன என்றும், இறைமை அதிகாரமானது, அரசுக்கும் அதனுள்ளே இருக்கும் குடும்பங்கள், திருச்சபை முதலிய சமய நிறுவனங்கள், தொழிலாளர் சங்கங்கள் ஆகிய அமைப்புகளுக்குமிடையே பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளதென்றும், இந்த அமைப்புகளே அரசினால் நிறைவேற்ற இயலாத மனித வாழ்வுத் தேவைகளை நிறைவேற்றுகின்றன என்றும் கூறுகின்றனர். மேற்கூறப்பட்ட வரம்புகளெல்லாம் அரசினால் தனது இசைவின் வாயிலாக ஒப்புக் கொள்ளப்பட்டவையே தவிர, வேறெந்த அதிகாரியாலும் ஏற்படுத்தப்படவில்லை. சமூக நிறுவனங்களின் நிலையும் இத்தகையதே, ஐக்கிய அமெரிக்க நாடு போன்ற கூட்டாட்சி நாடுகளில் நடுவண, மாநில அரசாங்கங்களுக்கிடையே அதிகாரப்பகிர்வு அரசியலமைப்புச் சட்டத்தின் வாயிலாகச் செய்யப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டி, ஏ.எல். உலோவல், (A.L. Lowell), பிரைசு பிரபு (Lord Bryce) முதலிய ஆசிரியர்கள் சட்டவகையான இறைமை அதிகாரமானது கூட்டாட்சி நாடுகளில் நடுவண அரசாங்கத்துக்கும் மாநில அரசாங்கங்களுக்குமிடையே பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறுகின்றனர். ஆனால் ஆசிரியர் கால்கன் (Calhoun) என்பவர் இதனை மறுத்து, பகுக்கப்பட இயலாத ஒரே கூறாக உள்ள இறைமை என்பது கூட்டாட்சி நாட்டில் ஒரு சில பொருள்களைப் பொறுத்த வரையில் நடுவண் அரசாங்கத்தின் வாயிலாகவும், வேறுசில பொருள்களைப் பொறுத்த வரையில் மாநில அரசாங்கங்களின் வாயிலாகவும் வெளிப்படுகிறது என்பதுதான் அதிகாரப் பகிர்வு என்பதன் பொருளே தவிர, இறைமை பகிர்ந்து கொள்ளப்படுகிறது என்பது அதன் பொருளன்று என்றும், இறைமை என்பது முழுமையான ஒன்று என்றும் அதைப் பகுப்பது அல்லது பிரிப்பது என்பது அதை அழிப்பதே ஆகும் என்றும் கூறுகிறார். இறைமையின் வகைகள் இறைமை அதிகாரம் கையாளப்படுபவருடைய நிலையைப் பொறுத்து, 1. பெயரளவிலான இறைமை அதிகாரம் (Titular or National Sovereignty), 2. சட்டப்படியான இறைமை (Legal Sovereignty), 3. அரசியல்வகை இறைமை (Political Sovereignty), 4. மக்கள் இறைமை (Popular Sovereignty), 5. சட்டஇயல் இறைமை, நடைமுறை இறைமை (De Jure Sovereignty De Facto Sovereignty) எனப் பாகுபாடு செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் ஒருகாலத்தில் இறைமை அதிகாரமனைத்தையும் அரசர் அல்லது அரசியார் செலுத்தி வந்தனர். ஆனால், நெடுநாட்களுக்கு முன்னரே இறைமை அதிகாரத்தை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களுக்குப் பொறுப்புள்ள அமைச்சரவையே செலுத்தத் தொடங்கிற்று; அரசியார் பெயரால் அமைச்சர்கள் ஆளுகின்றனர்; ஆகையால் அரசியார் பெயரளவிலான இறைமை அதிகாரி ஆவர். அரசில் தலைமையான சட்டம் இயற்றும் அதிகாரத்தை எவர் கையாளுகிறாரோ, அவரே சட்டப்படியான இறைமை அதிகாரி ஆவார். இங்கிலாந்தின் அரசியலமைப்பின்படி, அந்நாட்டின் உயர்தரச் சட்டமியற்றும் அதிகாரி பாராளுமன்றத்தில் அரசர் (அல்லது அரசியார்) ஆவர். ஆகையால் அந்நாட்டின் சட்டப்படியான இறைமை அதிகாரம் பாராளுமன்றத்திலுள்ள அரசரிடம் (King–in–Parliament) இருக்கிறது. சான் ஆசுட்டின் என்ற ஆசிரியரின் கருத்துப்படி, சட்ட வகையான இறைமை அதிகாரமானது முழுமையானது, வரம்பற்றது, திட்டவட்டமானது; அது ஒருவரிடத்திலோ பலரிடத்திலோ இருப்பது; அது சட்டத்தினால் ஒப்புக்கொள்ளப்படுவது; அது ஒன்றே அரசினுடைய விருப்பத்தைச் சட்டவடிவத்தில் வெளிப்படுத்துவது. அதன் ஆணைகளை மீறுதல் சட்டங்களை மீறிய செயலாகக் கருதப்பட்டுத் தண்டிக்கப்படும். உரிமைகள் அதனிடமிருந்தே தோன்றுகின்றன. சட்டப்படியான இறைமைக்கு மாறாகக் காணப்படுவது அரசியல் வகை இறைமை ஆகும். ஒரு குடியாட்சி நாட்டில், சட்டங்களை இயற்றும் உயர்தர அதிகாரம் நாட்டின் சட்ட மன்றத்திலிருந்தாலும், அத்தகைய உயரிய சட்டமியற்றும் அதிகாரத்துக்குத் தோற்றுவாயாக இருப்பது மக்களுடைய விருப்பமே ஆகும். மக்களுடைய விருப்பமே தலைமையானதாகவும் அதற்கெதிராக வேறெவருக்கும் மேல் முறையீடு எதுவும் செய்ய இயலாததாகவும் இருப்பதால், மக்களுடைய விருப்பமே (Will of the People) குடியாட்சி நாட்டில் அரசியல்வகை இறைமை ஆகும். ‘எவருடைய (அல்லது எந்தக் குழுவின்) விருப்பத்துக்கு அரசின் மக்களெல்லாரும் இறுதியாகக் கட்டுப்படுகிறார்கனோ, அவரே (அல்லது அந்தக் குழுவே) அரசியல்வகை இறைமை ஆவர்’ என்று ஆசிரியர் தைசியும், ‘நாட்டில் சட்டத்திற்குப் பின்னால் காணப்படுகின்ற ஆதிக்கங்களின் தொகுப்பே அரசியல்வகை இறைமையாகு’மென்று ஆசிரியர் கில்கிரைசுட்டும் விளக்கம் தருகின்றனர். அரசியல் வகை இறைமையோடு நெருங்கிய தொடர்புடையதே மக்கள் இறைமை ஆகும். இவ்வகை இறைமைக்கு வடிவம் கொடுத்து உயர்த்தியவர் பிரான்சின் உரூசோ என்னும் கி.பி. 18–ஆம் நூற்றாண்டு அரசியல் சிந்தனையாளராவர். குடியாட்சி நடைபெறும் எல்லா நாடுகளிலும் மக்களே தலைமையான அரசியல் அதிகாரம் உடையவர்களென்றும், அவர்களுடைய விருப்பங்களுக்கு மாறாகச் சட்டப்படியான இறைமை அதிகாரி நீடித்து ஆட்சியில் இருத்தல் இயலாது என்றும் கோட்பாடுகள் நிலவுகின்றன. மக்களுடைய விருப்பத்துக்கு மாறாகச் சட்டப்படியான இறைமை அதிகாரி பதவியில் நீடித்து இருந்தால், மக்கள் வேறு வழியின்றி வன்செயல் புரட்சி வாயிலாக அவரை நீக்கிவிட்டு, வேறொரு புதிய அரசாங்கத்தை நிறுவுவதற்கு உரிமை உடையவராவர். மக்களுடைய இறைமை அதிகாரமென்னும் கருத்து மிகவும் கிளர்ச்சி தருகின்ற, கவர்ச்சியான கருத்தேயாயினும் நுணுகி அதனை ஆராயுமிடத்து, திட்டவட்ட வடிவமான அமைப்பில் இல்லாத மக்கள் திரளை (Unorganised Indeterminate Mass) இறைமை அல்லது தலைமை அதிகாரமுடையவர்களென்று சொல்லுதல் பொருந்தாது என்பதும், ‘பொது மக்கள் கருத்தே’ (Public Opinion) மக்கள் இறைமை எனப்படுமானால், பொதுமக்கள் கருத்து என்பது எத்தகைய ஆற்றலுடையதாயினும் அது சட்டவடிவம் கொடுக்கப்படாத வரையிலும் அதனை மக்கள் இறைமை என்று குறிப்பிடுதல் பொருந்தாது என்பதும் தெரியவருகின்றன. இவ்வாறு மக்கள் இறைமை என்ற கருத்துக்கு இலக்கணம் வகுப்பதில் பல இடர்ப்பாடுகள் இருந்தாலும், அக்கருத்து பல பயனுள்ள முடிவுகளை அளிக்கிறது; 1) அரசாங்கம் என்பது மக்களுடைய நலனுக்காக இருக்கிறதே தவிர, ஆட்சி செய்பவர் நலனுக்காக இருப்பதன்று; 2) மக்களுடைய கருத்துகள் அல்லது விருப்பங்கள் அரசாங்கத்தால் புறக்கணிக்கப்படுமானால் வன்முறைப் புரட்சி தோன்றுதல் கூடும்; 3) பொது மக்கள் கருத்து வெளிப்படுத்தப்படுவதற்கான சட்டவடிவான வழிகள் இருத்தல் வேண்டும்; 4) அடிக்கடி பொதுத் தேர்தல்கள் நடத்துதல், குடியொப்பம் (Referendum), மக்கள் தொடக்கம் (Initiative), திரும்ப அழைத்தல் (Recall – அதாவது வாக்காளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பொறுப்புத் தவறும் போது அவர்களைப் பதவி நீக்கம் செய்தற்கு வாக்காளர்களுக்கு இருக்கும் உரிமை) முதலிய முறைகளையும் கையாளுதல் ஆகியவற்றின் வாயிலாக அரசாங்கமானது மக்களுக்கு நேரடிப் பொறுப்புடையதாக இருத்தல் வேண்டும்; 5) அரசாங்கமானது நாட்டின் சட்டங்களுக்கு இணங்கவே அதிகாரத்தைக் கையாளுதல் வேண்டுமேயன்றி, அது தன் விருப்பம்போல் அதிகாரத்தைக் கையாளுதல் கூடாது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முன்னுரை (Preamble) ‘இந்தியா ஓர் இறைமையுள்ள குடியாட்சி அரசாங்கத்தையுடைய குடியரசு’ என்றும் அதன் பிரிவு 326, ‘நடுவண பாராளுமன்றத்தின் கீழ்ச் சபைக்கும் (House of the People), மாநிலச் சட்டமன்றத்தின் கீழ்ச்சபைக்கும் (Legislative Assembley) உறுப்பினர்கள் வயது வந்தோருக்கு வாக்குரிமை (Adult Suffrage) என்ற அடிப்படையில் இந்தியக் குடிமக்களுள் சில தகுதிகளை உடையவரால் தேர்ந்தெடுக்கப்படுதல் வேண்டும்’ என்றும் கூறுகின்றன. இந்திய அரசியலமைப்பின் இந்த இரு பகுதிகளும் (முன்னுரையும், பிரிவு 326–உம்) மக்கள் இறைமைக் கோட்பாட்டையே சுட்டிக் காட்டுகின்றன. வயது வந்தோருக்கு வாக்குரிமை என்ற கோட்பாடே மக்கள் இறைமைக் கோட்பாட்டின் செயல் வடிவமாகும். சட்ட இயல் இறைமையும் நடைமுறை இறைமையும் இரு வகையான இறைமை அதிகாரங்களைக் குறிப்பிடுகின்றன. சட்ட இயல் இறைமை என்பது சட்டத்தின் வாயிலாகத் தலைமை அதிகாரியாக ஒப்புக் கொள்ளப்பட்டவரையும், நடைமுறை இறைமை என்பது எந்த அதிகாரிக்கு மக்கள் இறுதியாக நடைமுறையில் கீழ்ப்படிந்து நடக்கிறார்களோ அந்த அதிகாரியையும் குறிக்கின்றன. நடைமுறை இறைமை அதிகாரி சட்டத்தினால் ஒப்புக்கொள்ளப்பட்டோ ஒப்புக்கொள்ளப்படாமலோ ஓர் இராணுவத் தளபதியாகவோ ஒரு சமயத் தலைவராகவோ இருத்தல் கூடும். இறைமை என்பது மற்றவர் தனக்குக் கீழ்ப்படியுமாறு கட்டாயப்படுத்தும் அதிகாரமா கையினால், அதனைச் சட்ட இயல்பு உடையது என்றும், சட்ட இயல்பு அற்றது என்றும் பிரிப்பது சரி அன்று; அது தவறு என்று சான் ஆசுட்டின் என்ற ஆரிசியர் குறிப்பிடுகிறார். சட்டத்தின் வாயிலாகத் தலைமை அதிகாரியாக ஒப்புக்கொள்ளப்பட்டவரே இறைமை அதிகாரமுடையவரென்றும், சட்டவகை இறைமையானது முழுமையானது, வரம்பற்றது, திட்டவட்டமாக அதன் இருப்பிடம் காணப்படக் கூடியது; அதனுடைய ஆணைகளே சட்டங்களாகுமென்றும் சான் ஆசுட்டின் என்ற ஆசிரியர் கூறுகிறார். இவருடைய கருத்துகளைப் பன்மைக் கோட்பாட்டாளர் (Pluralists) மறுக்கின்றனர். ஆயினும் நாட்டிலுள்ள பல்வேறு நோக்கங்களுக்காகச் செயற்படுகின்ற பல்வேறு கழகங்களும் ஒன்றோடொன்று மாறுபாடு கொள்ளாமல், ஒன்றோடொன்று இணைந்து செயற்படுமாறு செய்யும் பொருட்டு அவற்றையெல்லாம் கட்டுப்படுத்தவல்ல தலைமை அதிகாரம் அரசினிடம் இருக்கத்தான் வேண்டுமென்னும் கருத்தைப் பன்மைக் கோட்பாட்டாளரும் ஒப்புக்கொள்கின்றனர். ஆகையால், சான் ஆசுட்டின் இறைமைக் கோட்பாட்டுக்குச் சட்டவடிவத்தில் கொடுத்துள்ள இயல்புகளைப் பன்மைக்கோட்பாட்டாளரும் ஏனையோரும் எவ்வாறுதான் மறுத்தாலும் அவர் கூறும் இறைமைப் பண்புகளே அரசியல் அறிவாளரால் (Political Scientists) ஒப்புக் கொள்ளப்படத் தக்கவை என்பது நன்கு தெரிகிறது. கி.ர.அ. துணை நூல்கள் Austin, John, Lectures on Jurisprudence, Murray, 1832. Bryce, J., Studies in History and Jurisprudence Oxford, 1901. Green, T.H., Lectures on the Principles of Political Obligation, Longmans, 1921. Laski, H.J., A Grammar of Politics, Allen & Unwin, 1952.