செல்லுலோஸ் அசெட்டேட்
cellulōs aceṭṭēṭ
செல்லுலோஸ் என்ற இயற்கையில் கிடைக்கும் பல்லுறுப்பியை வேதி வினைகளின் மூலமாகத் திருத்திக் கிடைக்கும் நெகிழிப் பொருளே செல்லுலோஸ் நெகிழிகள் ஆகும்.
செல்லுலோஸ் என்ற இயற்கையில் கிடைக்கும் பல்லுறுப்பியை வேதி வினைகளின் மூலமாகத் திருத்திக் கிடைக்கும் நெகிழிப் பொருளே செல்லுலோஸ் நெகிழிகள் ஆகும். செல்லுலாய்டு, செல்லுலோஸ் அசெட்டேட், செல்லுலோஸ் நைட்ரேட் முதலியன செல்லுலோஸ் வகை நெகிழிகளே. இவ்வகை நெகிழிகள் தயாரிக்கத் தேவையான மூலப் பொருளான செல்லுலோஸ், பஞ்சின் குட்டை இழைகளிலிருந்து பெறப் படுகிறது. இவ்விழைகளில் 90% வரை செல்லுலோசும் எஞ்சிய சதவீதத்தில் மெழுகு, கொழுப்பு அமிலங்கள், சாயப் பொருள்கள் போன்றவையும் உள்ளன. பஞ்சு இழைகளை நீர்த்த சோடியம் ஹைட்ராக்சைடு கரைசலில் நன்கு கலக்கித் தூய்மை மிக்க செல்லுலோசைப் பிரித்தெடுக்க வேண்டும்.
செல்லுலோசின் விகித வாய்ப்பாடு (empirical formula) C₆H10O₅ : குளூக்கோஸ், டெக்ஸ்ட்ரின், ஸ்டார்ச் ஆகியவற்றின் விகித வாய்பாடு C₆H10O₅ ஆகும். இப்பொருள்கள், தாவரங்களில் சூரிய ஒளியில் கலந்துள்ள புற ஊதாக் கதிர்களின் முன்னிலையில் தொகுக்கப்பட்டுச் செல்லுலோசாக மாறுகின்றன.
இந்தப் பல்லுறுப்பி, குளூக்கோஸ் மூலக் கூறுகளை அடிப்படையாகக் கொண்டது. குளூக்கோஸ் ஒரு பாலிஹைட்ரிக் ஆல்கஹால் ஆகும். இதன் முக்கியமான பண்புகளில் ஒன்று, அசெட்டால் தோன்றும் வினையாகும். இவ்வினையின் உதவியால் ஆல்டிஹைடு தொகுதி மறைந்து, ஆல்கஹால் சேர்மமாகவே செல்லுலோஸ் காணப் படுகிறது.
<!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> செல்லுலோசில் உள்ள ஒவ்வொரு குளூக்கோஸ் மூலக் கூறிலும், மூன்று ஹைட்ராக்சில் தொகுதிகள் உள்ளன. கீழே கொடுக்கப்பட்ட அமைப்பு வாய்ப்- பாட்டில் இதனைத் தெளிவாக அறியலாம். ஆல்கஹால் தொகுதிகள் அமிலங்களுடன் வினைப் பட்டு, மூவகை எஸ்ட்டர்களைத் தரலாம். அவை மோனோ அசெட்டேட், டைஅசெட்டேட், டிரை அசெட்டேட் எனப்படும். இந்த அசெட்டேட் பல்லுறுப்பியே செல்லுலோஸ் அசெட்டேட் நெகிழி ஆகும்.
செல்லுலோஸ் அசெட்டேட் நெகிழி, குறுக்குப் பிணைப்புகளற்ற பல்லுறுப்பி என்பதை, அதன் அமைப்பிலிருந்து அறியலாம். குறுக்குப் பிணைப்புகள் இல்லை என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டு, வெப்பத்தால் இளகும் நெகிழிகளைத் (thermoplastics) தயாரிக்க, செல்லுலோசை நேரடியாகப் பயன் படுத்த இயலாது; ஏனெனில், செல்லுலோஸ் அமைப்பில், பல ஹைட்ராக்சைடு தொகுதிகள் உள்ளமையால், ஹைட்ரஜன் பிணைப்புகள் தோன்றுகின்றன. இப்பிணைப்புகள் இறுகும் நெகிழிகளில் காணப்படும் குறுக்குப் பிணைப்புகளாகவே செயல்படுகின்றன. எனவே, செல்லுலோஸ் நெகிழி, நெகிழ் தன்மையுடன் காணப்படுவதற்குப் பல்லுறுப்பியில் காணப் படும் எண்ணற்ற ஹைட்ரஜன் பிணைப்புகளிலிருந்து விடுபட வேண்டும். இதன் விளைவாக, மூலக் கூறுகள் ஒன்றின் மீது மற்றொன்று நகர முடியும். மேலும், செல்லுலோசை வெப்பப் படுத்தும் போது, ஹைட்ரஜன் பிணைப்பிலிருந்து அது விடுபடுவதற்கு முன்பே, நிலையிறக்கம் அடைகிறது. மேலும் ஹைட்ரஜன் பிணைப்புகள் காரணமாக, இதன் கரை திறனும் குறைவாகக் காணப் படுகிறது. செல்லுலோசைப் பயனுள்ள நெகிழியாக மாற்ற. அதில் உள்ள ஹைட்ரஜன் பிணைப்புகளின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும். ஹைட்ரஜன் பிணைப்புகளை ஏற்படுத்த வல்ல ஹைட்ராக்சில் தொகுதிகளை நீக்கி விட்டு, அந்த இடங்களில் ஹைட்ரஜன் பிணைப்புகளை ஏற்படுத்த இயலாத தொகுதிகளைத் தகுந்த வேதி வினைகள் மூலம் இணைக்க வேண்டும். இதனை எஸ்ட்டராக்குதல் மூலமாகவும், ஈதராக்குதல் மூலமாகவும் செயல்படுத்தலாம். செல்லுலோஸ் அசெட்டேட் என்பது எஸ்ட்டராக்கப்பட்ட செல்லுலோஸ் ஆகும்.
பஞ்சு, அசெட்டிக் நீரிலியுடன் சல்ஃப்யூரிக் அமிலம் உடனிருக்க, வினை புரிந்து செல்லுலோஸ் அசெட்டேட்டை உண்டாக்குகிறது. இந்த எஸ்ட்டர் தொழில் துறைக்கு ஏற்ற நெகிழியாக, நீண்ட நாளாகக் கருதப்படவில்லை. இதற்குக் காரணம் இது, பொதுவான கரிமக் கரைப்பான்களில் குறைந்த கரை திறனைப் பெற்றிருந்தமையே ஆகும். 1905ஆம் ஆண்டில்தான் செல்லுலோஸ் அசெடேட்டை வீரியமற்ற நீர்ச் சிதைவுக்கு உட்படுத்தி, அசெட்டோனில் கரைவது கண்டறியப் பட்டது. பின்னரே, செல்லுலோஸ் அசெட்டேட் நெகிழி பரவலாகப் பயன்பட்டது.
இந்நெகிழியின் சிறப்புப் பண்புகளில் ஒன்று, எளிதில் தீப்பிடிக்காது என்பதே ஆகும். எனவே, முதல் உலகப் போர் சமயத்தில் படலங்கள் (films) தயாரிக்கவும், விமானங்கள் எளிதில் தீப்பிடிக்காமல் தடுக்கப் பூச்சுப் பொருளாகவும் பயன் பட்டது. இதன் வார்ப்புத் தன்மை 1916ஆம் ஆண்டிற்குப் பின்பே அறியப் பட்டது. எனினும், பாலிஎத்திலீன் வகை நெகிழிகள் கண்டறியப் பட்ட பின், இதன் முக்கியத்துவம் குறைந்தது. கிளேசியல் அசெட்டிக் அமிலம், அசெட்டிக் நீரிலி, மெத்திலீன் குளோரைடு, செல்லுலோஸ் என்பவை செல்லுலோஸ் அசெட்டேட் தயாரிக்கத் தேவையான அடிப்படைப் பொருள்கள் ஆகும்.
அசெட்டோனை 650–800°C வெப்ப நிலை வரம்பிற்குள் பிளக்கும் போது, சீட்டீன் கிடைக்கிறது. இதனை அசெட்டிக் அமிலத்தில் உறிஞ்ச, அசெட்டிக் நீரிலி பெறப் படுகிறது. தூய செல்லுலோசின் வளைய அமைப்பை முதலில் உடைத்து, பின்பு அசெட்டிக் நீரிலியுடன் வினைப் படுத்தலாம். கரை திறனை மேம்படுத்த மெத்திலீன் குளோரைடு கலக்கப் படுகிறது. இத்தயாரிப்பில், சல்ஃப்யூரிக் அமிலம் 1 பங்கு, அசெட்டிக் நீரிலி 300 பங்கு, மெத்திலீன் குளோரைடு 400 பங்கு, செல்லுலோஸ் 100 பங்கு எனப் பல காரணிகளும் பயன் படுகின்றன.
ஏனைய குழைமங்கள் போல, இதனையும் தகடுகளாகவும், படலங்களாகவும் பெறலாம். பிழிந்து வார்த்தல், பீச்சி வார்த்தல் என்ற செயல் முறைகள் மூலம் செல்லுலோஸ் அசெட்டேட் நெகிழியைப் பெறலாம். டிரைஃபினைல் பாஸ்ஃபேட், டைமெத்தில் தாலேட் போன்ற மென்மையூட்டிகளும் பேரியம் சல்ஃபேட், வெள்ளைக் களிமண் போன்ற நிரப்பிகளும் உடன் பயன்படும் பொருளாகும்.
செல்லுலோஸ் அசெட்டேட்டிலிருந்து தயாரிக்கப் படும் ரேயான் இழை சிறப்பு மிகுந்தது. இது ஒளி புகும் தன்மை உடையது. இதன் படலங்கள் வழியே, நீராவி போன்ற வளிமங்கள் புகுந்து செல்லும்; ஆனால், நீர்மங்கள் புகா. எனவே, நீரில் அழுகக் கூடிய காய்கறிகளைக் கட்டி வைக்க, இப்படலங்கள் உதவுகின்றன. மேலும் திரைப் படம், எக்ஸ் கதிர் முதலிய துறைகளுக்குத் தேவைப்படும் படலங்கள் தயாரிக்கப் பயன் படுகின்றன. பிழிந்து வார்க்கும் முறையில் எழுது கோல். மிதி வண்டி, எக்கி (pump) குழாய் முதலியவை தயாரிக்கப் பயன் படுகின்றன. எனினும், இதன் பயன்பாடுகளை PVC நெகிழிகள் பெருமளவில் குறைத்து விட்டன. —பி.ஈ.எம். லியாகத் அலிகான் நூலோதி. மே.ரா. பாலசுப்பிரமணியம், நா. அய்யாசாமி, பிளாஸ்டிக்களுக்கு ஓர் அறிமுகம், தமிழ் நாட்டுப் பாடநூல் நிறுவனம், சென்னை, 1974.
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 867)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/egxmz4nt/
தமிழ்“செல்லுலோஸ் அசெட்டேட்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/egxmz4nt/APA
Oliyon Research. (2026). செல்லுலோஸ் அசெட்டேட். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/egxmz4nt/MLA
"செல்லுலோஸ் அசெட்டேட்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/egxmz4nt/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment