செல்லுலோசிலிருந்து விஸ்கோஸ் முறையால் ரேயான் தயாரிக்கும் போது கிடைக்கும் ஒளி ஊடுருவும் பல் படிகப் படலமே செல்லோஃபேன் (cellophane) ஆகும். மரக் கூழ், பருத்தி இழை, ஏனைய செல்லுலோஸ் மூலப் பொருள்களுடன் நீரிய சோடியம் ஹைட்ராக்சைடைச் சேர்த்துப் பல மணி நேரம் வைத்திருக்கும் போது, சோடா செல்லுலோஸ் உண்டாகிறது. இதனுடன், கார்பன் டைசல்ஃபைடுக் கரைசலைச் சேர்த்தால், விளையும் சோடியம் செல்லுலோஸ் சாந்தேட்டை நீர்த்த சோடியம் ஹைட்ராக்சைடில் பிரிகையுறச் செய்தால், விஸ்கோஸ் உண்டாகிறது. இம்முறையில், குறைந்த பாகுத் தன்மை உடைய கரைசல் கிடைக்குமாறு தகுந்த அளவில் வினை வழியை மாற்றி அமைத்து, அந்தக் கரைசலைச் சோடியம் சல்ஃபேட், கார்பன் டைசல்ஃபைடு கரைந்துள்ள சல்ஃப்யூரிக் அமிலக் கரைசலினுள் சிறு துளை வழியாகச் செலுத்தினால், மெல்லிய படலம் உண்டாகிறது. இதுவே செல்லோஃபேன ஆகும். ஆனால், உயர் பாகுத் தன்மையுடைய சாந்தேட் கரைசலைச் சல்ஃப்யூரிக் அமிலத் தொட்டியில் துளையினூடே செலுத்தினால், செயற்கை இழை உண்டாகும். அமில சல்ஃபேட் தொட்டியில், விஸ்கோஸ் மீள் உருவாக்கப்பட்ட செல்லுலோசாக (regenerated cellulose) மாற்றமடையும் போது, ஹைட்ரஜன் சல்ஃபைடு, கார்பன் டைசல்ஃபைடு ஆகியன வெளியாகின்றன. தேவையான பண்புகளையுடைய இறுதிப் பொருள் கிடைக்குமாறு மேற்சொன்ன முறையால் விளையும் செல்லோஃபேன் படலத்தைக் கழுவியும், வேறு முறைகளால் செம்மை ப்படுத்தியும், பின்னர் உலர்த்தியும் பெறலாம். இப்படலத்தின் மேல், ஈர எதிர்ப்புக்குள்ளாகும் பொருள்களால் மேற்பூச்சுப் பூசி, அதை உணவுப் பொருள்களைப் பாதுகாக்க உதவும் சிப்பம் கட்டும் (packaging) காகிதமாகப் பயன்படுத்தலாம். —த. தெய்வீகன்