அவானா
avāṉā
கியூபா நாட்டின் தலைநகரமும் சீரிய துறைமுகமும் பெரு நகரமுமாகும்.
கியூபா நாட்டின் தலைநகரமும் சீரிய துறைமுகமும் பெரு நகரமுமாகும். மேற்கு இந்தியத் தீவுக் கூட்டங்களுள் ஒன்றான கியூபாத் தீவின் வடமேற்குக் கடற்கரையில் அமைந்துள்ள அவானா (Havana), அமெரிக்க ஐக்கிய நாட்டின் மாநிலங்களுள் ஒன்றான பிளாரிடாவுக்குத் (Florida) தெற்கே 160 கி.மீ. தொலைவில் உள்ளது. கியூபா நாட்டின் மக்கள் தொகையில் ஐந்திலொரு பங்கு மக்கள் அவானாவில் வாழ்கிறார்கள். இந்நகரை இசுபானிய மொழியில் ‘லா அவானா’ (La Havana) என்பர்.
அவானா மாநகரத்தின் பரப்பு 740 ச.கி.மீ. இதை இசுபானியக் குடியேற்றக்காரர்கள் கி.பி. 1519-ஆம் ஆண்டில் அமைத்தார்கள். இதன் நுழைவாயிலில் பர்ரோ காசில் (Burro Castle) என்னும் இசுபானியக் கோட்டையொன்றுள்ளது.
அவானாவின் பழைய நகரம் இன்றைய துறைமுகத்திற்கு மேற்கிலுள்ளது. இங்குத்தான் இசுபானியர் குடியேறினர். இங்குள்ள அவானாக் கிறித்தவக் கோயில் புகழ்மிக்கது. இது கி.பி. 18–ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கட்டப்பட்டது. புதிய அவானா நகரம் மக்கள் மிகுதியாக வாழும் இடமாகும். அவானாப் பல்கலைக் கழகம் இங்குள்ளது.
கியூபா நாட்டின் வாணிகத் தொழிற்சாலை மையமாக இருப்பது அவானாவேயாகும். இங்குப் பொதுவுடைமைக் கொள்கைச் சார்புள்ள அரசு இயங்குவதால், அனைத்து வாணிகங்களும் தொழிற்சாலைகளும் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன. பணியாளர்கள் அனைவரும் அரசாங்க ஊழியர்களாவர். புகையிலை பதப்படுத்தல் இங்கு நடைபெறும் சிறப்பான தொழிலாகும். பீர், இரசாயனப் பொருள்கள், மிதியடிகள், ஆடைகள் போன்றவை பிற உற்பத்திப் பொருள்களாம்.
கியூபா நாட்டின் ஏற்றுமதிப் பொருள்களுள் ஐந்திலொரு பங்கும், இறக்குமதிப் பொருள்களுள் பாதியும் அவானா துறைமுகத்தின் வழியாகவே செல்லுகின்றன. புட்டிகளில் அடைக்கப்பட்ட பழ வகைகள், மீன், சர்க்கரை, புகையிலைப் பொருள்கள் போன்றவை ஏற்றுமதியாகும் சிறப்பான பொருள்கள். உணவுப் பொருள்கள், இயந்திர வகைகள், பெட்ரோல், பேருந்து வண்டிகள் போன்றவை இறக்குமதிப் பொருள்கள். கியூபா பெரும்பாலும் பொதுவுடைமை நாடுகளுடனேயே வாணிகம் செய்கிறது.
திகோ வெலாசுகுசு (Diego Valazquez) என்ற இசுபானிய ஆளுநரே அவானாவைக் கி.பி. 1515–ஆம் ஆண்டில் உருவாக்கினார். உருவாக்கினார். அப்போது இந்நகரம் தீவின் தென்கரையில் இருந்தது. கடல் கொள்ளையரின் தாக்குதல்களினால் இந்நகரம் பெருகி வளரவில்லை. எனவே, கி.பி. 1519–இல் இன்றுள்ள இடத்தில் அவானாவைக் கட்டினார்கள். அவானா துறைமுகம் வாணிகக் கப்பல்கள் வந்து செல்ல வசதியான அழகிய துறைமுகம். காலப்போக்கில் இது பெரும் வாணிக மையமாக உருப்பெற்றுக் கி.பி. 1552–இல் கியூபா நாட்டின் தலைநகராயிற்று.
ஆங்கிலேயர் இந்நகரைக் கி.பி. 1762–ஆம் ஆண்டில் கைப்பற்றி ஏறத்தாழ ஓராண்டு வைத்திருந்தனர். வாணிகம் பெருகி வளர்ந்தது.
அமெரிக்க ஐக்கிய நாடுகளின் கப்பலான மெயின் (Maine) கி.பி. 1898–ஆம் ஆண்டு இத்துறைமுகத்தின் மீது குண்டு வீசியது. அதன் விளைவாக இசுபானிய அமெரிக்கப் போர் மூண்டது.
இருபதாம் நூற்றாண்டின் முற்பாதியில் கியூபா அரசாங்கம், எண்ணற்ற பொருட் செலவில் அவானாவைச் சுற்றுலா மையமாக்கியது. அமெரிக்க நிறுவனங்கள் பெரும் முதலீடு செய்து அவானாவில் வாணிகத்தைப் பெருக்கின. பிடல் காசுடுரோ (Fidel Castro) என்பவர் தலைமை அமைச்சர் பொறுப்பேற்றபின், கியூபா நாடு பொதுவுடைமை நாடுகளுள் ஒன்றாகத் திகழ்கிறது. அவானாவின் மக்கள் தொகை 19,00,240 (1981).
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 902)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/efpkwhw3/
தமிழ்“அவானா”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/efpkwhw3/APA
Oliyon Research. (2026). அவானா. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/efpkwhw3/MLA
"அவானா." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/efpkwhw3/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment