தொலைக் காட்சிப் பெட்டியில் உள்ளது போலவே, நேரத் தொடர்பான புள்ளிகளால் படிவத்தை உண்டாக்கும் எலெக்ட்ரான் நுண்ணோக்கியே, அலகீட்டு எலெக்ட்ரான் நுண்ணோக்கி (scanning electron) ஆகும். 1930ஆம் ஆண்டு முதலே, இக்கருவியைப் பற்றிய கருத்துகள் நிலவின. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னரே, இக்கருவியை வடிவமைக்கும் பணிகள் விரைவாக நடைபெற்றன. 1966இல் இக்கருவி பயன்பாட்டுக்கு வந்தது. உயிரியல், இயற்பியல் துறை ஆய்வகங்களில் நுண்ணுலகை ஆய்வதில் இது பெரிதும் பயன் படுகிறது. இந்நுண்ணோக்கியில், எலெக்ட்ரான் துப்பாக்கி எனும் அமைப்பில், மிக மெல்லிய எலெக்ட்ரான் கற்றை உண்டாக்கப் பட்டுக் காண வேண்டிய பொருளின் மீது வரி வரியாய்ப் பாய்ச்சப் படுகிறது. அப்போது, பொருளிலிருந்து பல்வகைக் கதிர் வீச்சுகள் வெளி வருகின்றன. ஒரு குறிப்பிட்ட கணத்தில், பொருளின் ஏதேனும் ஒரு புள்ளியில் வெளியாகும் கதிர் வீச்சின் அளவு குறிப்பலை எனப் படுகிறது. அது ஒரு எதிர் முனைக் கதிர் குழாயின் சீரான எதிர் முனை, கதிர் வீச்சின் மீது பண்பேற்றம் செய்யப் படுகிறது. பொருளின் ஒரு புள்ளியிலிருந்து வெளியாகும் கதிர் வீச்சுகள் மிகுதியெனில், அதனால், பண்பேற்றம் பெற்ற, திரையில் உள்ள அடுத்த புள்ளிக்குத் தாவும் போது, பண்பேற்றம் பெற்ற, திரையில் உள்ள அடுத்த புள்ளி, தக்கவாறு ஒளிப் பொலிவை அடையும். இவ்வாறு, பொருளின் அனைத்துப் புள்ளிகளுக்கு மேற்றவாறு, திரையில் ஒளிப் பொட்டுகள் அமைந்து, அங்கு பொருளின் முழுப் படிவமும் காணப் படும். தொலைக் காட்சியில் காணப்படும் படிவத்தைப் போலவே, இதுவும் அமைகிறது. உயர்ந்த பிரி திறனும், சிறந்த தெளிவும் உள்ள படிவங்களை இந்நுண்ணோக்கி மூலம் பெற முடியும். ஆல்பெர்ட் கிரிலி என்பார் மீ உயர் பிரி திறனைக் கொண்ட, அலகீட்டுக் கடத்தல் எலெக்ட்ரான் நுண்ணோக்கியை (scanning transmission electron microscope) வடிவமைத்தார். அதில், அணுக்களைக் கூடப் பிரித்தறியும் அளவுக்குப் பின்னோக்கிச் சிதறும் எலெக்ட்ரான்கள், சிறப்பியல் எக்ஸ் கதிர்கள், கண் காணும் ஒளி மற்றும் தூண்டு மின்னோட்டம் இவற்றைக் குறிப்பலைகளாகப் பெறலாம். இவற்றைக் கொண்டு அமைந்த பொருளின் படிவத்திலிருந்து, பொருளின் வடிவம், கொள்ளளவு, வேதியியல் மற்றும் மின்னியல் பண்புகளை ஆராயலாம். துணை எலெக்ட்ரான் குறிப்பலையைப் பயன்படுத்தி, நுண்ணுயிரியலில் படிவங்களைப் பெறலாம். எடுத்துக் காட்டாக, மனிதக் குருதியின் சிவப்பணுக்களைச் சொல்லலாம். நுண்ணோக்கியின் பிரி திறன் எலெக்ட்ரான் துப்பாக்கியிலிருந்து வெளி வரும் எலெக்ட்ரான் கதிர்களின் பொலிவிற்கேற்ப அமைகிறது. எனவே பிரி திறனைக் கூட்டும் நோக்கத்துடன், எலெக்ட்ரான் கதிரின் பொலிவினை, அதாவது, செறிவினைக் கூட்டப் பல ஆண்டுகளாக முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டன. கிரிவி என்னும் அறிஞர், புல உமிழ்வு மூலத்தை எலெக்ட்ரான் துப்பாக்கியாக அமைத்து, அதிலிருந்து வெளி வரும் செறிவு மிக்க, குறைவான அளவு பிரி திறனைக் கொண்ட ஹெக்சா போரைடு மூலத்தை, எலெக்ட்ரான் துப்பாக்கியாகக் கொண்ட நுண்ணோக்கிகளை அமைத்தார். அவை, மிகப் பொலிவுள்ள கதிர்களை உமிழ்ந்து, பிரி திறன் மிக்க படிவங்களை உண்டாக்குகின்றன. <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் ஆரம்பத்தில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> இந்நுண்ணோக்கி வழியே பார்க்கப் படும் பொருள், நன்கு உலர்ந்திருத்தல் இன்றயமையாதது. ஆனால், எளிய எலெக்ட்ரான் நுண்ணோக்கியிலோ, ஒளியியல் நுண்ணோக்கியிலோ பொருள் உலர்ந்திருக்க வேண்டியதில்லை. பொருளை உலர்த்தும் முறைகள், மாறு நிலைப் புள்ளி உலர்வு முறை, உறைதல் உலர்வு முறை என இரு வகைப் படும். இவ்விரு முறைகளில், எளிதில் உடைந்து நொறுங்கும் தன்மையுள்ள உயிரியல் திசுக்களைக் கூட உலர்த்தி விடலாம். நுண் பொருளை உறைய விட்டால், அது உலர்ந்து விடுகிறது. மேலும், மிகக் குளிர் வெப்ப நிலைகளில் நுண் பொருள் உடைந்து, உள் அமைப்புகளைக் காட்டி நிற்கும். பொதுவாக நுண்பொருள்கள் பற்றிய செய்முறை ஆய்வுகளில், இந்நுண்ணோக்கி சிறப்பிடம் பெறுகிறது. —மு. சேக்முஸ்தபா