இதன் வேறு பெயர்கள் மயில் பூ, மயில் ரோஜா, புனித ஆவி மரம் என்பன. ஈஸ்டர் பண்டிகைக்கு 50 நாளுக்குப் பின், பெந்தேகோஸ்த் விருந்தின் போது, இம்மரம் மிகுதியான பூக்களைத் தோற்றுவிப்பதால், இதைப் புனித ஆவி மரம் என்பர். இம்மரத்தின் தாவரப் பெயர் டெலானிக்ஸ் ரீஜியா (Delonix regia) என்பதாகும். இதற்குப் பாயின்சியானா ரீஜியா (Poinciana regia) என்ற இணை தாவரப் பெயரும் உண்டு. செம்பூ மரம் லெகுமினேசி குடும்பத்தைச் சேர்ந்தது. இதன் தாயகம் மடகாஸ்கர் ஆகும். இம்மரம் மிதமாகவே வளர்ச்சியுறும் தன்மை கொண்டது. சம வெளிகளிலும், மலைப் பகுதிகளில் 750–1200 மீ. உயரமான இடங்களிலும், பொதுவாக வளர்கிறது. வாத நாராயணன் பேரினத்தைச் சேர்ந்த இம்மரம் அதனைப் போல், நன்கு கிளைப்பது இல்லை; மிகு வளர்ச்சியைத் தருவதும் இல்லை; களர் நிலப் பகுதிகளில் நன்கு வளர்வதும் இல்லை; அடி மரம் வாத நாராயணன் மரத்தை விடச் சிறியதாக இருக்கும். மரம். முள் இல்லாத இம்மரத்தில், இலைகள் இரட்டைச் சிறகுக் கூட்டிலை அமைப்பில் இருக்கும். இலையடிச் சிதல்கள் சிறியவை. சிற்றிலைகள் இளம் பச்சை நிறத்தில் சிறியவையாக இருக்கும். ஒவ்வொரு கூட்டிலையும் 50 செ.மீ. நீளத்தில் இருக்கும். ஒவ்வோர் இலையிலும் 10–20 சிற்றிலைகள் காணப் படும். ஒவ்வொரு சிற்றிலையும் 6 மி.மீ. நீளமானது. பிப்ரவரி–மார்ச் மாதங்களில் இலைகள் உதிர்கின்றன. மரத்தில் உள்ள இலைகள் முழுதும் உதிர்ந்த பிறகே, பூக்கத் தொடங்கும். பூக்கள் கொப்புகளின் நுனியில் மிகப் பெரிய ரெசீமாக இருக்கும். பூவடிச் சிதல்கள் உதிரும் தன்மை கொண்டவை. பூக்காம்புச் சிதல்கள் இல்லை, புல்லிக் குழல் குட்டையானது. இதில் வெவ்வேறு ஐந்து கதுப்புகள், ஒழுங்கற்ற தொடு இதழ்களாக இருக்கும். அல்லிகள் சிவப்பு, ஆரஞ்சு மஞ்சள் கலந்த நிறங்களில் ஒளிரும். அல்லி இதழ்கள் தேக்கரண்டியின் வடிவத்தில், அழகான நெளிவுடைய விளிம்புகளைக் கொண்டுள்ளன. மேற்பகுதியில் உள்ள அல்லி மட்டும் வெள்ளையாகவும், சிவப்பு மற்றும் மஞ்சள் நிறக் கோடுகளுடனும் காணப்படும். பத்து மகரந்தக் கேசரங்கள் தனித் தனியாகவும் வெளியே தெரியுமாறும் இருக்கும். மகரந்தப் பைகள் சீராக இருக்கும். சூல் பையில் சூல்கள் பல உள்ளன. சூலகத் தண்டு இழை போன்றது. சூலக முடி முனை முறிந்தது. காய்கள் 75 செ.மீ. நீளத்திலும், 5 செ.மீ. அகலத்திலும் உள்ளன. முற்றிய நெற்று உறுதியாகவும், தட்டையாகவும், கறுப்பாகவும் இருக்கும். பிஞ்சு, காய்கள் ஆகியன பச்சையாக இருக்கும். நெற்றுகள் வெடித்து, நீள் சதுரமான விதைகளைச் சிதறச் செய்யும். வளர்ப்பு முறை. விதை மூலம், இனப் பெருக்கம் நடைபெறுகிறது. நெற்றுகளை வெயிலில் உலர்த்திக் குச்சியால் அடித்து, விதைகளைத் தனித்தெடுக்கலாம். விதைகளை வெந்நீரில் 70–80°C ஐந்து நிமிடங்கள் வைத்திருந்து விதைக்க வேண்டும். பாலித்தீன் பைகளில் தயாரித்து வைக்கப்பட்ட மண்–மட்குக் கலப்பில், விதைகளை ஊன்றிக் கன்றுகள் தயாரித்து நடலாம். ஏறக் குறைய, 10–12 மாத வயதுடைய கன்றுகளை ஊன்றிக் கால் நடைகள் மேயாமல், பாதுகாத்து வளர்க்க வேண்டும். இவ்வாறு விதைத்த 4 அல்லது 5 ஆண்டுகளில் மரத்திலிருந்து பூக்கள் உண்டாகும். பதியன் முறையில் நட்டும், இனப் பெருக்கம் செய்யலாம். பயன்கள். பூக்கள் நேராகவும், கண்ணைக் கவரும் தோற்றத்திலும் உள்ளமையால், சாலை ஓரங்களில் நடுவதற்கும், பூங்காக்களில் வளர்ப்பதற்கும், இம்மரம் ஏற்றதாகும். மரக் கட்டை வெள்ளையாகவும், எடை குறைந்தும் இருக்கும். மரத்தின் கிளைகளை வெட்டி, இழைத்து, அரிவாள், களைக் கொத்துகளுக்குக் கைப் பிடி செய்யலாம். பொருள்களை அனுப்பும் பெட்டிகள் செய்யலாம். ஓரளவே நிழல் தரும் இம்மரத்தின் தழைகளை வெட்டி, நெல் வயலுக்குப் பசுந்தழை உரமாக இடலாம். —கோ.அர்ச்சுணன்