இசுபெயின் குடியரசு நாடாக அறிவிக்கப்படும் வரை அதன் அரசராக (1902–1931) இருந்தவர் இவர். இவர் தந்தை இசுபெயின் நாட்டு அரசர் பன்னிரண்டாம் அல்பான்சோ ஆவார். இவரது ஆட்சிக்காலத்தில் இசுபானிய மக்கள் சிறுகுழு ஆட்சியால் (Oligarchy) மன நிறைவில்லாமல் வாழ்ந்தனர். குறைவான ஊதியத்தாலும் மொராக்கோ மீது படையெடுத்ததாலும் அவர்களின் மன நிறைவின்மை மேலும் பெருகியது. இதனை இசுபானிய நாடாளுமன்ற அரசினால் தீர்த்து வைக்க முடியவில்லை. அல்பான்சோ (Alfonso XIII) மாட்ரிடு (Madrid) என்னும் இடத்தில் பிறந்தார். இவர் ஆறுமாதக் குழந்தையாக இருந்தபொழுது இவர் தந்தை இறந்தார். இதனால் குழந்தைப் பருவத்திலேயே இவர் அரசரானார். இவர் தாய் ஆசுதிரியா இளவரசி மேரியா கிறித்தினா (Archduchess Maria Cristina of Austria). தம் மகன் தக்க வயது வரும் வரை தாமே இசுபெயினை ஆண்டார். இவரது ஆட்சிக் காலத்தில் நாட்டில் குழப்பங்கள் பல ஏற்படவே 1923–இல் நாட்டின் ஆட்சியை மைக்கேல் பிரீமோ டி இரீவெரா (General Miguel Primo de Rivera) என்னும் படைத் தலைவரிடம் ஒப்படைத்தார். 1930–ஆம் ஆண்டு வரை இரீவெரா ஆட்சியைக் கவனித்து வந்தார். 1931–ஆம் ஆண்டு இசுபெயின் குடியரசு வாதிகள் முடியாட்சியைக் கவிழ்த்து ஆட்சியைப் பிடித்தனர். அரசுக்கு எதிராகச் சதி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு அல்பான்சோ நாடு கடத்தப்பட்டார். பிரான்சிசுகோ பிராங்கோ (Francisco Franco) என்பவர் தலைமையில் புதிய அரசாங்கம் 1939–இல் ஆட்சிக்கு வந்தது. அல்பான்சோ 1941–ஆம் ஆண்டு உரோமாபுரியில் இறந்தார். மன்னராட்சி மீண்டும் 1975–ஆம் ஆண்டு இசுபெயினில் ஏற்பட்டது. பதின்மூன்றாம் அல்பான்சோவின் பேரர் சுவான் கார்லாசு (Juan Carlos) என்பவர் அரசரானார். அல்பான்சோவின் கல்லறையிலிருந்து அவர் எலும்புகள் தோண்டி எடுக்கப்பட்டு மாட்ரிட்டுக்கருகிலுள்ள எல் எசுத்தோரியல் (El Escorial) என்னும் சுடுகாட்டில் புதைக்கப்பட்டன. தேவாலயமும் மடாலயமும் அரண்மனையும் இணைந்த பகுதி இது.