சிரங்கு
ciraṅku
இந்நோயைச் சொறி என்றும் சொல்வர்.
இந்நோயைச் சொறி என்றும் சொல்வர். சிரங்கு ஓர் ஒட்டுண்ணியால் (Ascabtus sarcopti) ஏற்படுகிறது. இது ஒரு தொற்று நோய்.
நோய் பரவும் விதம். ஒரே குடும்பத்தில் ஒருவருக்கு நோய் கண்டால், மற்றவர்க்கும் வரும். இந்த ஒட்டுண்ணி ஒட்டிக் கொண்டுள்ள துணியை மற்றவர் உடுத்தினாலும், நோய் உள்ளவர் உடலும் மற்றவர் உடலும் சேர்ந்து இருந்தாலும் வரும். குழந்தைகளுக்குத் தாய் மூலமாகவோ, மற்றவர் மூலமாகவோ விரைவில் பரவும்.
விலங்கு ஒட்டுண்ணி. இந்த ஒட்டுண்ணி வழக்கத்தில், ஆண் பெண் உறவு ஏற்பட்ட பின், ஆண் இனம் கொல்லப்பட்டு விடும் அல்லது இறந்து விடும். பெண் இனம், ஆண் இனத்துடன் சேர்ந்த பின், மிக மெல்லிய மேல் தோல் பகுதியில் துளை போட்டு முட்டையிடும். ஆறு கால் புழு, முட்டையிலிருந்து வெளி வந்து 14-17 நாள் வரை வளர்ச்சியடைந்து, இனப்பெருக்கம் செய்து கொண்டே இருக்கும்.
உடலில் வரும் இடங்கள். இவை உடலில் மெல்லிய தோல் இருக்கும் இடத்தில் துளை போட்டுப் பரவும். எ-டு: கைவிரல் இடுக்குகளிலும், மணிக்கட்டிலும், முன் கையின் உள்புறத்திலும், அக்குளின் முன் புறத்திலும், இடுப்பு அறையின் இரு புறத்திலும், ஆண் குறியிலும், பெண் குறியிலும், வலக் கால்தொடையின் உட்புறமும், கால் வெளிப்புறத்திலும், பாதம், கால் விரல் இடுக்குகள், புட்டம் முதலிய இடங்களிலும் இந்நோய் காணப்படும்.
நோயின் அறிகுறிகள். இந்த ஒட்டுண்ணியால் ஒவ்வாமை ஏற்பட்டு, அரிப்பு ஏற்படும். அரிப்பு ஏற்படும் போது, பல முறை சொறிந்து, தோல் வறண்டு, அதில் பிற நுண்ணுயிரிகள் புகுந்து, சீழ் பிடித்து வலி ஏற்படும். சிலருக்கு, அரித்த இடத்தில் குருதியும் வரும். சிலருக்கு, அக்குளிலும், தொடையின் மேல் புறத்திலும் வீங்கி வலியும், காய்ச்சலும் உண்டாகும்.
மருத்துவம். இந்நோய் கண்டவர் தனித்து இருப்பது நல்லது. அவர் உடை, படுக்கை முதலியவை தனியே இருக்க வேண்டும். கந்தகம் கலந்த களிம்பை நன்றாகத் தேய்த்து, உடலில் தடவிக் கொண்டு 2 அல்லது 3 மணி நேரம் இருக்க வேண்டும். உடைகளை வெந்நீரில் கொதிக்க வைத்து, உலர வைக்க வேண்டும். இவ்வாறு 3 அல்லது 4 நாள் செய்ய வேண்டும், குளிக்காமல், களிம்பை மேன்மேலும் தடவி, 3 நாள் கழித்துக் குளிப்பது நலம். விரல் நகங்களை நெருக்கமாக வெட்ட வேண்டும். இவ்வாறு செய்வதால், நோய் பரவாது. சொறிவதால் தோலில் புண் ஏற்படலாம். உணவுக் கட்டுப்பாடு இல்லை
கந்தகக் களிம்பைக் குழந்தைகளுக்குக் கொடுக்கக் கூடாது. கந்தகம் குழந்தைகளின் மெல்லிய தோலில் அழற்சியை உண்டாக்கும். குழந்தைகளுக்குப் பென்சைல் பென்சோவேட் மிகவும் சிறந்தது. ஏனைய நுண்ணுயிரிகள் நோயைச் சிக்கலாக்காமல் இருக்க, எதிர் உயிர் மருந்தை, மூன்று வேளையும் மாத்திரையாகவோ நீர் மருந்தாகவோ நோய் குணமடையும் வரை கொடுக்க வேண்டும். அரிப்பைக் குறைக்க ஹிஸ்டமின் எதிர் மாத்திரையாகவோ, நீர் மருந்தாகவோ பெரியவர்களுக்கு மூன்று வேளையும், குழந்தைகளுக்கு வயதுக்கு ஏற்றவாறும் கொடுக்க வேண்டும். பெரியவர்கள் இம்மருந்தை எடுத்துக் கொள்ளும் போது வாகனம் ஓட்டக் கூடாது.
பிற விளைவுகள். ஒவ்வாமையால் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு, முகம் கால் வீக்கம் ஏற்பட்டுச் சிறுநீர் போவது குறையும். குருதியில் உப்புச் சத்து மிகுதியாகும். இந்நோய் முற்றிலும் குணப்படுத்தக் கூடியது. ஆனால், சிலருக்கு நாட்பட்ட நிலையாகவோ, ஒவ்வாமை நோயாகவோ ஏற்பட்டுச் சிறுநீரகம் பழுதடையக் கூடும்.
—சொ. நடராசன் நூலோதி. John Macleod, Davidson's Principles and Practice of Medicine, Fourth Edition, Churchill Livingstone, 1984. Manson Bahr, Manson's Tropical Diseases, Eighteenth Edition, ELBS, London, 1982.
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 261)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ec5xhwtc/
தமிழ்“சிரங்கு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/ec5xhwtc/APA
Oliyon Research. (2026). சிரங்கு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ec5xhwtc/MLA
"சிரங்கு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/ec5xhwtc/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment