இராப்போசனம்
irāppōcaṉam
இராப்போசனம் என்பது கிறித்தவர்கள் பின்பற்றும் பல புனிதச் சடங்குகளுள் (Sacrements) இரண்டாம் சடங்கு.
இராப்போசனம் என்பது கிறித்தவர்கள் பின்பற்றும் பல புனிதச் சடங்குகளுள் (Sacrements) இரண்டாம் சடங்கு. முதல் சடங்கு திருமுழுக்கு அல்லது ஞானசுநானம் (Baptism) என்பதாகும். இராப்போசனத்தைக் தமிழ்நாட்டில் இப்போது ‘நற்கருணை’ (Holy Communion) என வழங்குகிறார்கள். இயேசு கிறித்து, தாம் மனிதக்குலப் பாவங்களை நீக்குவதற்காகச் சிலுவையில் இறந்ததை நினைவு கூரும் சின்னமாக (Memorial) இதை ஏற்படுத்தினார். இப்புனிதச் சடங்கு, மனிதனின் உடலையும் ஆன்மாவையும் மறுவாழ்வுக்கெளப் (Life after Death) பாதுகாக்கிறது எனக் கிறித்தவர்கள் நம்புகிறார்கள்.
இயேசு கிறித்துவைக் கொலை செய்ய வழி தேடினவர்களுக்குத் தாம் காட்டிக் கொடுக்கப்பட்ட அந்நாள் இரவில், அவர் தம் மாணவர் பன்னிருவருடன் உணவு உட்கொள்ளும்போது தாம் மேற்கொள்ளப் போகும் இறப்பின் வேதனைகளையும் பாரத்தையும் அவற்றின் பொருளையும் நினைவுகூரும்படி இந்தப் புனிதச்சடங்கினைச் செயற்படுத்தி விளக்கினார். அம்மாணவர்கள் உண்ண வைக்கப்பட்டிருந்த அப்பத்தையும் திராட்சைப் பழச் சாற்றையும் இயேசு உயரத் தூக்கி எடுத்து, அவற்றிற்கான நன்றி வேண்டுதல்களை இறைவனுக்கு அளித்தார். பின்பு அந்த அப்பத்தைப் பகிர்ந்து தம் மாணவர் உண்ணும்படி கொடுத்தார். அது பலியாகப் போகிற தம் உடலைக் குறிக்கிறது என்றார். திராட்சைப் பழச் சாற்றையும் பங்கிட்டு அருந்த வழங்கினார். அது மனிதக் குலத்தின் பாவ மன்னிப்பிற்காகத் தாம் சிலுவையில் சிந்தும் இரத்தத்தைக் குறிக்கிறது என்றார்.
நற்கருணை அல்லது இராப்போசனம் மூலம் அப்பத்தையும் திராட்சைப்பழச் சாற்றையும் பெற்றுக் கொள்ளும்போது, இயேசு கிறித்துவின் தூய உடலுடனும் இரத்தத்துடனும் தாங்களும் பங்குள்ளவர்களாகிறார்கள் என்பதும், அப்பத்தினாலும் திராட்சைப் பழச் சாற்றினாலும் மனிதனின் உடல் பலமடைந்து தேற்றப்படுகிறது போல, இயேசு கிறித்துவின் உடலினாலும் இரத்தத்தினாலும் மனிதனுடைய ஆன்மா பலமடைந்து தேற்றப்படுகிறது என்பதும் நம்பப்படுகின்றன.
நற்கருணையில் பங்கு பெறும் ஒவ்வொருவரும் அதில் பங்குபெறுமுன் தனித் தியானத்தில் (Meditation) ஈடுபட்டுத் தம்மை நன்கு ஆராய்ந்தறிந்து, அதனால் வெளிப்படுகிற முன் செய்த பாவங்களுக்காக உண்மையாய் மனம் வருந்திப் பாவமற்ற புது வாழ்க்கை நடத்த உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும். இயேசு கிறித்துவின் இறப்பை நன்றியறிதலுடன் நினைவு கூர்ந்து தம் நம்பிக்கையை வெளிப்படுத்த வேண்டும். எல்லா மனிதரிடத்திலும் அன்பாயிருக்க உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும். இவற்றில் உறுதியாய் நிலைத்து நிற்க முன் வருபவர்களுக்கு மட்டுமே நற்கருணை வழங்கப்படும்.
கிறித்தவ சமயத்தில் பல பிரிவுகள் (Denominations of Church) காணப்படுவதால் இப்புனிதச் சடங்கைப் பின்பற்றுவதிலும் பல முறைகள் காணப்படுகின்றன. கத்தோலிக்கக் கிறித்தவர்கள் சிறு குழந்தைகளும் இதைப் பெற அனுமதிக்கின்றனர். மறுப்புரையாளராகிய (Protestants) கிறித்தவர்கள் வயது வந்த பெரியவர்கள் (Adults) மட்டுமே இதில் பங்குபெறத் தகுதியுடையவர்கள் என்ற கோட்பாட்டை உறுதியாய்ப் பின்பற்றுகின்றனர். சில பிரிவினர்களிடையே அப்பத்திற்குப் பதிலாக ஒரே உரொட்டியைப் பலர் பகிர்ந்து உண்பதும், ஒரே பாத்திரத்திலிருந்து திராட்சைப் பழச்சாறை அருந்துவதும் வழக்கமாக உள்ளன. திராட்சைப் பழச் சாற்றில் அப்பத்தை நனைத்து வழங்கப்படும் பழக்கமும் உள்ளது.
இப்புனிதச் சடங்கு ஆவிக்குரியதான கருணையைப் (Grace of God) பெறும் புற அடையாளமாகவும் அதை உறுதிப்படுத்தும் சான்றாகவும் இயேசு கிறித்து ஏற்படுத்திய ஆணையாகும். அவர் பலியாக இறந்ததையும் அதனால் மனிதக் குலம் பெறும் நன்மைகளையும் கிறித்தவர்கள் இச்சடங்கின் மூலம் நினைவு கூருகின்றனர்.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 88)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/e6zpqfv4/
தமிழ்“இராப்போசனம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/e6zpqfv4/APA
Oliyon Research. (2026). இராப்போசனம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/e6zpqfv4/MLA
"இராப்போசனம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/e6zpqfv4/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment