நாடகம் சிறப்புற அமைவதற்குச் சிறந்த அரங்கமைப்பு இன்றியமையாததாகும். நாகரிகம் முன்னேறி வரும் இந்நாளில் எதனைப் பற்றி- யும் கேட்பதைவிட, காட்சிகளாகப் பார்ப்பதையே மக்கள் பெரிதும் விரும்புகிறார்கள். மதம் கெண்ட யானையை ஒருவன் அடக்குகிறான் என்ற செய்தியைக் கேட்பதை விட அக்காட்சியை நேரிடையாக மேடையில் பார்க்கும்போது மக்கள் அதிக மனச் சிலிர்ப்பு அடைகிறார்கள். அரசன் அரண்மனைக் கொலு மண்டபத்தில் வீற்றிருத்தல், செல்வந்தரின் மாளிகைக்குள் நள்ளிரவில் திருடன் நுழைதல், ஒரு பெருங் கட்டிடம் சரிந்து விழுதல் போன்ற நிகழ்ச்சிகளைத் திட்டமிட்டு அமைக்கப்பெற்ற காட்சிகளாக்கிக் காட்ட அரங்கில்தான் முடியும். அரங்கைக் கட்டுவதற்கு முன்னரும் செப்பனிடும் பொழுதும், பொறியாளர்கள் நாடகத்துறையில் அனுபவமுள்ளவர்கள் ஆகியோரின் ஆலோசனைகளையும் பரிந்துரைகளையும் போற்றிக் கொள்ள வேண்டும். நாடக அரங்குகளே இல்லாத ஊர்களில் தென்னங்கீற்றினாலும், பலகைகளாலும் நாடக மேடையை மட்டும் அமைத்து விடுகிறார்கள். மக்கள் திறந்த வெளி அரங்கிலிருந்து கொண்டுதான் நாடகத்தைக் காண்கிறார்கள். இந்த முறை, கோடைக்காலங்களில் தான் இயலும், திடீரென்று காற்றோ மழையோ வந்துவிட்டால் நிகழ்ச்சிகள் தடைப்பட்டுப் போகும். பொதுவாகப் பொருட்காட்சிகளில் இத்தகைய மேடைகளைத்தான் அமைத்துக் கொடுக்கிறார்கள். பொருட்காட்சியில் இருக்கும் திறந்தவெளிக் கலை அரங்கில் நாடகம் மிகுதியாகப் பாதிக்கப்படும். ஒலி பெருக்கியின் வாயிலாகச் செய்யப்படும் விளம்பரதாரர்களின் ஒலி, அரங்கின் வெளியில் கடைகளுக்காக இணைக்கப்பட்டிருக்கும் மின் விளக்குகளின் ஒளி போன்ற குறுக்கீடுகள் அந்நாடக அரங்கில் ஊடுருவி நாடகத்தின் தரத்தைக் குறைக்கும். எனவே, நாடகம் தொடங்கியவுடன் இவைகளை நிறுத்திவிட வேண்டும். பொதுவாக நாடக அரங்குகளில் தீ அணைப்புக் கருவிகள் எப்பொழுதும் ஆயத்த நிலையில் இருந்தல் வேண்டும். குறிப்பாகக் கீற்றுக் கொட்டகை அரங்குகளில் இவை இன்றியமையாதனவாகும். மிகவும் நெருப்புத் தொடர்பான எப்பொருள்களையும் மேடையில் பயன்படுத்தாமல் இருப்பது நலம், மேடையில் புகைபிடித்தலையும் தவிர்க்க வேண்டும். இத்தகைய கொட்டகை அரங்குகளில் கீற்றுகளை மிகவும் நெருக்கமாக வேய்ந்து காட்சி அமைப்புகளை மழையில் சேதமடையாவண்ணம் பாதுகாக்க வேண்டும். நாடக மேடை 60 அடி அகலமும் 60 அடி நீளமும் கொண்டதாக அமைந்திருந்தால் தான் பெரிய நாடகங்களை நடத்த முடியும். (வெளிப்புறத்திலிருந்து பார்க்கையில்) இரு புறமும் 15 அடி அகலத்தில் மறைப்புச் சுவர் எழுப்ப வேண்டும். இதுவே நாடக அரங்கின் முகப்பு ஆகும். இதனால் நமக்குத் தெரியும் காட்சி 30 அடி அகலத்திலிருக்கும். நாடக மேடையின் அகலம் 60 அடி இருந்தால்தான் அரங்கின் இருபுறமிருக்கும் அவையோருக்குக் காட்சிகள் நன்கு தெரியும். அன்றியும் இதனால், அந்தக் காட்சிக்கு மட்டும் தேவைப்படாத காட்சி அமைப்புகளை நன்றாக உள்ளே மறைத்து வைக்கவும் முடியும். மேடையின் உட்புறம் காட்சி அமைப்பாளர்களும் நடிகர்களும் எளிதாக நடமாட ஏதுவாயிருக்கும். தரையிலிருந்து நாடக மேடை 3 அடிக்கு மேலிருக்கக் கூடாது. அதற்கு மேலிருந்தால் முன் வரிசைகளில் அமர்ந்து நாடகம் பார்ப்போர்கள் கழுத்து வலியால் துன்புற நேரிடும். மேடையின் உயரம் மேடைத் தளத்திலிருந்து 18 அடி தான் இருக்க வேண்டும். அதற்கு மேல் 4 அடி விட்டுப் பரண் அமைக்க வேண்டும். அதற்கு மேல் 5 அடி பரப்பு விட்டுப் பந்தலோ நிரந்தரத் தளமோ அமைத்தல் வேண்டும். இந்த 5 அடி, காட்சி அமைப்பாளர்கள் மேலிருந்தபடி வேலை செய்யப் பயன்படும். இப்பரண் மூங்கிற் கம்புகளால் அமைக்கப்பட்டால் அவ்வப்போது மாற்றிக் கட்டிக் கொள்ளவும், கயிறுகள் எளிதாக இழுபடவும் வாய்ப்பாக இருக்கும். 60 அடி அகலமான நாடக மேடையில் 50 அடி அகலத்திற்கு நல்ல வழுவழுப்பான பலகைகளால் மேடை போடப்பட வேண்டும். சிமண்ட்டு அல்லது கான்க்ரீட்டினால் மேடை அமைக்கப்பட்டால் எதிரொலி கேட்கும். அடிக்கடி பழுதுபார்ப்பதும் கடினம், மேடையில் உட்புறம் இருபக்கமும் திரைக் கயிறு கட்டவும் தட்டிகளுக்காகக் கம்பிகள் கட்டவும் இரும்புக் குழாய்கள் அல்லது சவுக்குக் கம்புகள் அமைக்கப்பட வேண்டும். அவற்றை மேடையிலிருந்து 4½ அடியிலும், 9 அடியிலும், 13½ அடியிலும் ஒன்றன்மேல் ஒன்றாக அமைக்க வேண்டும். மேடையிலிருந்து 15 அடி உயரத்தில் இருபக்கமும் மச்சுத் தாழ்வாரம் போல் 5 அடிகள் அகலத்திற்குக் கான்கிரீட்டில் தளம் அமைக்க வேண்டும். ஓரிரு நிகழ்ச்சிகளுக்காகச் செய்யப்படும் ஓலைக் கொட்டகைகளுக்கு இது தேவையில்லை. தளத்திற்கு முன் சுவர் எழுப்பாமல், படுதாக்கள், தட்டிகளின் கம்பிகள் கட்ட இரும்புக் குழாய்கள்தாம் பொருத்த வேண்டும். அதன் உயரம் 3½ அடியாகத்தான் இருத்தல் வேண்டும். இத்தகைய அமைப்பு, சென்னை இராசா அண்ணாமலை மன்றத்தில் காணப்படுகிறது. நாடக மேடையின் பின்புறம் 30 அடி அகலத்திற்கும் 18 அடி உயரத்திற்கும் நுழைவு வாயில் வைத்தால், காட்சி அமைப்புகளைக் கொண்டு வரவும், நாடகம் முடிந்தபின் அவற்றைத் திரும்பக் கொண்டு போகவும், பேருந்துகளில் ஏற்றவும் இறக்கவும் எளிதாக இருக்கும். அவரவர்கள் வசதிக்கேற்ப ஒப்பனை, ஆடை அறைகளை அரங்கின் இருபுறங்களிலும் அமைத்துக் கொள்ளலாம். அந்த அறைகளிலிருக்கும் விளக்கின் வெளிச்சம், மேடைக்கு வராத அளவிற்குக் குவியாடங்களைக் கொண்டோ திரைகளைக் கொண்டோ தடுக்கப்படவேண்டும். ஒப்பனை அறையிலுள்ள கண்ணாடிகளின் பின்னணி மங்கலான நிறத்தில் அமைதல் வேண்டும். ஒப்பனை அறைகளில் மின்விசிறிகளும் அமைக்கப்பட வேண்டும். மேடைக்கு அருகிலேயே நடிகர்களுக்குக் குடிநீர் மற்றும் கழிவுநீர் அறை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும். மேல் பார்வை ::1. பின் கதவு 2. மரப்பலகை 3. பக்கமாடி வரிசை 4. வாத்தியக் குழு 5. பார்வையாளர்கள் 6. ஒப்பனை அறை 7. உடை அலங்கார அறை 8. அரங்கு முகப்பு நாடக அரங்கிலிருந்து 5 அடி அகலத்தில் பின்னணி இசைக் குழுவிற்கு இடம் ஒதுக்கப்பட வேண்டும். இசைக் குழுவிற்கு முன் தடுப்புச் சுவர் 2½ அடி உயரத்தில் 40 அடி அகலத்தில் இருக்க வேண்டும். இசைக்குழுத் தடுப்பிலிருந்து 8 அடி விடுத்தே அவையினரின் முதல் வரிசை நாற்காலிகள் அமைக்கப்பட வேண்டும். வெளியிலிருந்து எந்த வெளிச்சமும், ஒலியும் நாடக அரங்கினுள் புகுந்து, நாடகத்தைக் கெடுக்காத அளவிற்குத் தடுப்பு இருக்க வேண்டும். ஒரு புதிய நாடக அரங்கை அமைப்புதற்குமுன், ஒலிபெருக்கி விற்பன்னர்களை வைத்து அரங்கில் எதிரொலி வராத அளவிற்கு ஆராய்ந்து வேண்டிய மாற்றங்கள் செய்யப்பட வேண்டும். அரங்கு நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் அரங்கின் எப்பகுதியில் இருந்தாலும் தக்க வேறுபாடுகளுடன் அவையினருக்கு ஒலி கேட்குமளவிற்கு ஒலிபெருக்கிகள் பொருத்தப்பட வேண்டும்.ஆர்.எஸ்.ம.