சங்க காலத்தில் வாழ்ந்த ஒரு பாண்டிய மன்னன், பாண்டியன் இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நன்மாறன் என்று புறநானூற்றில் குறிக்கப்பட்டுள்ளான். இலவந்திகை என்பதற்கு இயந்திர வாவி என்றும், வாவியைச் சூழ்ந்த வசந்த சோலை என்றும் பொருள் கூறப்பட்டுள்ளது. மூதூர்ப் பொழில் என்பது இலவந்திகைச் சோலை என்றும், இலவந்திகை என்பது ‘நீராவியைச் சூழ்ந்த வயந்த சோலை; அது அரசனும் உரிமையும் ஆடும் காவற் சோலை’ என்றும் அடியார்க்கு நல்லார் விளக்கந் தந்துள்ளார். செங்குட்டுவன் தன் தேவியுடன் இலவந்திகை மாடத்திருந்தபோது மலைவளம் காணச் செல்லும் முடிவினை மேற்கொண்டான் என்று சிலப்பதிகாரம் (காட்சி 3–8) கூறுகிறது. இதனால் அரசுத் தலைநகர்களை அடுத்துப் புறத்தே, இயந்திர வாவி சூழ்ந்த வசந்த சோலை மாடத்தோடு அமைந்திருந்தது என்பதும், அதில் அரசனும் தேவியும் இன்பமாகப் பொழுது போக்கினர் என்பதும் தெரிகின்றன. இத்தகு இலவந்திகைப் பள்ளியில் இருக்கும் போது மன்னன் இறக்க நேர்ந்தால், ‘இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய’ என்னும் அடைமொழி கொண்டு அவன் வழங்கப்படுவாள், பாண்டியன் நன்மாறன், இவ்வாறு இலவந்திகைப் பள்ளியில் இறந்தமையால் இவ்வடைமொழியோடு பெயர் பெற்றுள்ளான். நன்மாறன் எனப் பெயரிய வேறொரு பாண்டிய மன்னனின்றும் பிரித்தறிய இவ்வாறு பெயர் அமைக்கப்பட்டது. இம்மன்னனை மதுரை மருதன் இளநாகனார், (55) ஆவூர் மூலங்கிழார் (196), வடம வண்ணக்கன் பேரி சாத்தனார் ஆகிய புலவர்கள் தம் புறநானூற்றுப் பாடல்களில் சிறப்பித்துள்ளனர். தமிழக மூவேந்தர்களுள்ளும் இவன் சிறந்து விளங்கியமையினைச், சிவபெருமானது நெற்றிக்கண்ணை உவமை காட்டுவதன் மூலம் மருதன் இளநாகனார் குறிப்பிட்டு, ஆண்மையும், சாயனும் வண்மையுங் கொண்டு வாழ்கவென அறிவுறுத்தியுள்ளார். தமக்குப் பரிசில் வழங்கக் காலந்தாழ்த்தமை கண்டு ஆவூர் மூலங்கிழார், ‘நோயிலராக நின் புதல்வர் ... ... ... ... ... ... ... செல்வல் அத்தை சிறக்க நின்நாளே’ என்று கூறி இம்மன்னனின் நீங்கிச்சென்றார். வடம வண்ணக்கன் பேரிசாத்தனார் பரிசில் கடாநிலைத் துறையில், இம்மன்னனைப், ‘பெருங்கடல் நீரினும் அக்கடல் மணலினும், நீண்டுயர் வானத்து உறையினும் நீடு ... ... ... ... ... ... நீடு வாழிய நெடுத்தகை’ என்று வாழ்த்தியுள்ளார்.