உயிரியல்சார் படிமலர்ச்சி
uyiriyalcār paṭimalarcci
உயிர்சார்ந்த பொருள்களின் அனைத்து அமைப்புகளிலும் தொடர்ச்சியான வேறுபாடுகள் நிகழ்ந்து வருகின்றன.
உயிர்சார்ந்த பொருள்களின் அனைத்து அமைப்புகளிலும் தொடர்ச்சியான வேறுபாடுகள் நிகழ்ந்து வருகின்றன. இதனை ஒவ்வோர் உயிரினமும் எளிமையான, முழுமைபெறா அமைப்புகளிலிருந்து சிக்கலானதும் முழுமைபெற்றதுமான அமைப்புகளைப் பெற்று வருகிறது. ஓர் இனத்தின் மூதாதையருக்கும் அவர்களின் வழிவந்த சந்ததியினருக்குமிடையே பல வேறுபட்ட பண்புகள் காணப்படுகின்றன. ஓவ்வொரு சந்ததியினரும் கொண்டுள்ள பண்பு மாற்றங்கள் படிமலர்ச்சி நிகழ்வினால் ஏற்பட்டவை. படிமலர்ச்சிக் காரணி- களின் அடிப்படையிலேயே ஒவ்வோர் உயிரினத்தின் வெளித்தோற்ற அமைப்பிலும் மரபுப் பண்புகளின் அமைப்பிலும் மாறுபாடுகள் தொடர்ந்து நிகழ்கின்றன. இந்த நிகழ்வு ஒரு காலத்தை மட்டும் சார்ந்ததன்று. மரபணுப் பொதுச் சேர்மத்தில் (Gene Pool) உள்ள மரபணுவின் பண்புகளில் நிகழும் மாற்றம் உயிரியின் (Organism) அமைப்பில் நுண்மாற்றத்தை ஏற்படுத்தி, தொடர்ச்சியான காலத்தின் நிகழ்வில் பருநிலையில் மாற்றத்தை ஏற்படுத்திவிடுகிறது. சில உயிரியலார் படிமலர்ச்சி நிகழ்வு பெருமளவு உயிர் வேதியியல் சார்ந்தது என நம்புகின்றனர். எல்வாதிருப்பினும் படிமலர்ச்சியினைப் பல அறிஞர்கள் பலவாறு வரையறைப்படுத்தினாலும், அதன் உட்பொருள் ஒன்றாகக் காணப்படுவதை அறியலாம்.
படிமலர்ச்சியின் இயல்பினை உயிரியலார் பலவாறு விளக்குவர். மரபணுவின் அடுக்குநிகழ்வில் (Gene Frequency) ஏற்படும் மாற்றம் என்றும் உடற்கூற்றில் ஏற்படும் மாற்றம் என்றும் மக்கள்தொகையின் மரபணுவின் (Gene) அமைப்பில் ஏற்பட்டுள்ள மாற்றம் என்றும் பலவாறு இதன்பொருள் விரித்துக் கூறப்படும். உயிரியல்சார் படிமலர்ச்சி பற்றிப் பல ஆய்வுகள் மூலம் பொதுப்படையான கருத்துகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. படிமலர்ச்சி மாற்றங்கள் பொதுவாக உயிரிகளின்மீது செயற்பட்டுக் காலப் போக்கில் மரபணுவின் பண்பில் மாற்றத்தைத் தோற்றுவிக்கின்றன.
உயிரியல்சார் படிமலர்ச்சியின் செயற்பாட்டிற்குக் கீழ்வரும் அடிப்படையான காரணங்களைக் குறிப்பிடுவர் உயிரியலார். 1. உடனடி மாற்றம் (Mutation)–இது படிமலர்ச்சிக்குத் தேவையான அடிப்படைப் பொருள்களை ஏற்படுத்துகிறது. 2. தேர்வு (Selection)–இது அடிப்படைப் பொருள்களைத் தகுதிவாய்ந்த மரபுத்தோற்ற வகையாகத் (Genotype) தேர்ந்தெடுக்கிறது. 3. குறிப்பற்ற மரபணுப் பெயர்ச்சி (Random Genetic Drift)– இது மக்கள் குழுவில் மரபணுவின் அடுக்கு நிகழ்வில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. 4. வேறுபட்ட இடப்பெயர்ச்சியும் (Differential Migration) மரபணு ஓட்டமும் (Gene flow)– இவை மக்கள் தொகையில் மனிதர்களின் இடப்பெயர்ச்சியினால் மரபணுவின் அடுக்கு நிகழ்வில் நிறையற்ற மாற்றத்தையும் இருவேறுபட்ட மக்கள் குழக்களிடையே மரபணுப் பண்பில் மாறுதலையும் ஏற்படுத்துகின்றன. இக்கூறுகள் அனைத்தையும் ஒப்பிட்டு நோக்கும்போது படிமலர்ச்சியின் திசை மக்கள் குழுவின் ஒரு நிலையை வேறு நிலைக்குக் கொண்டு செல்லும் வளர்நிலைச் செயலாகவோ (Progressive Movement) ஒன்று அல்வது பல்வேறு மக்கள் குழுக்களிடையே மாற்றங்களை ஏற்படுத்தும் விரிநிலைச் செயலாகவோ (Divergence Movement) அமையும்.
ஒரு பெரிய அளவிலான மக்கள் தொகையில் படிமலர்ச்சி மாற்றத்திற்கு முதல்நிலை இயக்க ஆற்றலாக அமைவது மரபணு அடுக்கு நிகழ்வில் ஏற்படும் மாற்றமே ஆகும். இதில் மூன்று வகை மாற்றங்களைக் குறிப்பிடலாம். அவை 1. அமைப்புற்ற மாறுதல்கள் (Systematic Changes), 2. குறிப்பில்லாத ஏற்ற இறக்கம் (Random Fluctuation), 3. திரும்ப நிகழா மாற்றங்கள் (Non–recurrent Changes) ஆகும்.
ஓர் உயிரியின் அமைப்பில் மட்டும் படிமலர்ச்சி நிகழ்வு நடத்து, அத்தப் படிமலர்ச்சி நிகழ்வினால் புதிய சிறப்பினம் (Species) தோன்றுமேயானால் அவ்விதப் படிமலர்ச்சியினை உள்ளமைந்த படிமலர்ச்சி (Intra-specific Evolution) அல்லது நுண்படிமலர்ச்சி (Micro Evolution) எனவும், இவ்வாறன்றி ஒரு படிமலர்ச்சி நிகழ்வு உயிரினத்தில் பொதுக் குடும்பத்தையும் (General), குடும்பத்தையும் (Family) வரிசையையும் (Order) தோற்றுவிக்குமேயானால் அவ்விதப் படிமலர்ச்சி வெளியமைந்த படிமலர்ச்சி (Transpecific Evolution) அல்லது பெருநிலைப் படிமலர்ச்சி (Micro Evolution) எனவும் கூறப்படும். இவ்விரு வகைப் படிமலர்ச்சி நிகழ்வுகளுக்கிடையே காணப்படும் முதன்மையான வேற்றுமைப் படிமலர்ச்சி நிகழும் காலமேயாகும். நுண்படிமலர்ச்சி என்பது மிகக் குறுகிய காலத்தில் மிகச் சிறிய வேறுபாட்டினை உயிரினத்தில் தோற்றுவிப்பதாகும் பெருநிலைப் படிமலர்ச்சி என்பது நீண்ட மண்ணியல் கால (Geological Time) அடிப்படையில் நிகழ்வதாகும். ஓர் உயிரினத்தின் மாற்றம் அல்லது குறிப்பிட்ட மக்கள் தொகையில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவற்றை அறியப் படிமலர்ச்சி வீதம் (Rate of Evolution), அது நிகழும் கால எல்லை முதலானவற்றைக் கருத்திற் கொள்ள வேண்டும்.
படிமலர்ச்சி வீதத்தினைக் கட்டுப்படுத்தும் அல்லது அதனைத் தூண்டும் காரணிகள் பலவாகும். இவற்றுள் குறிப்பிடத்தக்கவை மக்கள் தொகையில் உள்ள மரபணுப்பண்பின் வேறுபாடுகள் (Genetic Variability) மக்கள்தொகை அமைப்பு (Population Structure), மக்களின் தகவமைப்பு (Adaptation), மக்கள் தொகையில் ஏற்படும் உடனடி மாற்றத்தின் வீதம் (Mutation Rates) முதலியனவாகும். இதனாலேயே படிமலர்ச்சியின் வீதம் பல்வேறு சூழ்நிலையில் வாழும் இரு தனிக் குழுக்களிடையோ ஒரே சூழ்நிலையில் வாழும் குழுக்களிடையோ மாறுபட்டுக்காணப்படும். இது தவிர, ஒரே குழுவில் ஒரு வழியே நிகழும் படிமலர்ச்சியில், பல காலங்களில் அதன் வீதம் வேறுபாடுகளைக் காட்டுந் தன்மையது.
சிம்சன் (Simpson) என்பார் படிமலர்ச்சி வீதத்தினை அதன் நிகழ்வுத் தன்மையை வைத்துத் தொகுதிவழிப் படிமலர்ச்சி (Phyletic Evolution), மொத்தப் படிமலர்ச்சி (Quantum Evolution), சிறப்பினவாக்கம் அல்லது பிளவுறும் படிமலர்ச்சி (Speciation or Splitting Evolution), வெடிக்கும் படிமலர்ச்சி (Explosive Evolution), தார்வின் படிமலர்ச்சி (Darwin Evolution) என ஐந்து முறைகளாக விளக்குவார். அனைத்துப் படிமலர்ச்சி நிகழ்விற்கும் அடிப்படையாக அமைவது மரபணுவில் ஏற்படும் மாற்றமே. இம்மாற்றத்திற்கு வழி கோலுவது உடனடி மாற்றம் (Mutation) ஆகும் என்பது படிமலர்ச்சியியலாரின் பொதுக்கருத்து.
படிமலர்ச்சியின் வளர்ச்சி நிலையினை ஆராயின், இரு பரிமாணங்கள் இதன் செயற்பாங்கில் புலப்படும். உயிரினங்கள் அவை தோன்றிய கால்வழிக்குள் ஏற்படும் படிமலர்ச்சியினை (Anagenesis) ஒரு பரிமாணமாகவும், ஒருகால்வழி உயிரினங்கள் பல கால்வழிக் குழுக்களாகப் பாகுபட அமைந்த படிமலர்ச்சியினை (Cladogenesis) மற்றொரு பரிமாணமாகவும் உடையன. ஒரு கால்வழிக்குள் நிகழும் படிமலர்ச்சி மாற்றம் என்பது காலப்போக்கில் இயற்கைத் தேர்வின் வழி நிகழ்வதாகும். இதன்வழி அந்த உயிரினங்கள் தாம் வாழும் சூழ்நிலையில், இயற்பியல் (Physical) உயிர்சார் (Biotic) மாற்றங்களைப் பெறுகின்றன. இன்றைய உலகில் பல்வேறு உயிரினங்கள் காணப்படுதற்குக் கிளைப்படிமலர்ச்சி (Cladogenesis) காரணமாகிறது. இந்த நிகழ்வு உயிரினங்களுக்கு மாறுபட்ட தகவமைப்புப் பண்புகளையும் மாறுபட்ட வாழ்க்கையமைப்புகளையும் பெற வகை செய்கிறது. கிளைப் படிமலர்ச்சி நிகழ்வில் சிறப்பினத்தோற்றம் (Speciation) நிகழ்வது குறிப்பிடத்தக்கது.
இனப்பெருக்கத்தில் தனித்த நிலையினைக் கொண்ட ஒவ்வொரு சிறப்பினமும் படிமலர்ச்சி நிகழ்வின் தனித்த அலகாகும். ஒவ்வொரு தனிச் சிறப்பினமும் தனித்த நிலையில் காலத்தினூடே மரபணுவின் பண்பில் மேலும் மேலும் மாற்றங்களைப் பெற்றுவரும். தொகுதிவழி வரலாற்றை (Phylogeny) நன்கு ஆராயின், ஒவ்வொரு தொகுதியின் உயிரினத்திலும் ஏற்பட்டுள்ள மரபு மாற்றத்தை (Genetic Change) அளவிட முடியும். அண்மைக் காலங்களில் பல புதிய அணுகுமுறைகளைக் கொண்டு, படிமலர்ச்சிகளை நுட்பமாக ஆராய்ந்து விளக்கியுள்ளனர்.
ஓர் உயிரியின் படிமலர்ச்சியில் இரு தன்மைகளைக் காணலாம். 1. அந்த உயிரியின் படிமலர்ச்சி அது வாழும் சூழிட வகைக்கு (Ecotype) ஏற்பத்தகவமைப்பை மாற்றும். 2. வளர்நிலை சார்ந்த (Progressive) அல்லது உயிரினக் குழுவின் வளர்ச்சியோடு ஒத்த படிமலர்ச்சியினை உண்டு பண்ணும். எனவே, படிமலர்ச்சி என்னும் கோட்பாட்டை முழுவதாக அறிய மக்கள் தொகையியல் சார் உயிரியல் (Population Biology) கூறும் இரு உண்மைகளை ஏற்றுக் கொள்ள வேண்டியதாகிறது. அவை 1. எந்த இரு தனி உயிரிகளும் ஒன்று போல் காணப்படா; 2. சூழ்நிலையும் மரபுச் சேர்மமும் (Genetic Endowment) ஒவ்வோர் உயிரியின் அனைத்துக் கூறுகளுக்கும் (Trait) தன் பங்களிப்பைக் கொடுக்கிறது என்பனவாகும்.
உலகின் பெரும்பகுதியில் மிகச்சிறிய பகுதியில் மட்டுமே மனித வாழ்க்கை காணப்படுகிறது. உயிரியல்சார் படிமலர்ச்சியின் அறிவினை இழந்த மண்ணுலகின் உயிரிகளை மட்டும் வைத்தே அறிய முடிகிறது. எனினும், இவ்வுலகில் உயிர் தோன்றிய சரியான காலம் என்ன என்பது இன்னும் வினாவாகவே உள்ளது. 500 மிலியன் ஆண்டுகள் வரை காலமுடைய புதைபடிவங்கள் (Fossils) ஆய்வுகளின் வழி கிடைக்கப்பெற்றுள்ளன. புதைபடிவங்களாகக் கிடைக்கும் சில உயிரிகள் கடலினத்தைச் சேர்ந்தவை ஆகும். இதனால், படி மலர்ச்சியினை ஆய்வு செய்யக் கிடைத்த புதைபடிவங்களின் எண்ணிக்கை குறைந்து விட்டன எனலாம். இதற்கு முதன்மையான காரணங்கள் இரண்டைக் குறிப்பிடலாம். 1. இன்று வாழும் சில தொன்மை உயிரிகள் மிகச் சிறியதாகவும் இவற்றை மண்ணுக்கடியில் பேணிக் காப்பது அரிதாகவுமிருத்தல், 2. 500 மிலியன் ஆண்டுகளுக்கு மேற்பட்ட மண்ணியல் அடுக்குகள் (Geological Strata) காலநிலையாலும் அழுத்தத்தாலும் மிகவும் மாறிவிட்டன. இந்த அனைத்துக் கருத்துகளையும் ஆய்வு செய்து தோப்சான்சுகி (Dobzhonsky), படிமலர்ச்சி, மரபியல், மனிதன் (Evolution, Genetics and Man) என்னும் நூலில் மண்ணுலகில் உயிரினம் 500 மிலியன் ஆண்டுகளுக்கு முன்பு உண்டானது என்பார். இன்று உயிர் வாழும் அனைத்து உயிரிகளின் கருத்திசு நிலையிலிருந்து வளர்ச்சி, அவற்றின் அமைப்புகள், வேதியியற் பண்புகள், சூழலமைப்பில் வளர்ச்சி, தகவமைப்பு முதலான அனைத்துக் கூறுகளையும் உள்ளடக்கி, உயிரினத்தின் தோற்றம் முதல் இன்றைய நிலை வரை காணும் பெரும் பரப்பை உயிரியல் சார் படிமலர்ச்சி கொண்டுள்ளது. எம்.சே.
துணை நூல்கள்
Dobzhonsky, T., Genetics of the Evolutionary Process, Columbia University Press, New York, 1970. Hanson. E.D., Animal Diversity, Prentice Hall, Inc., U.S.A., 1964.
Savage, Jay, M., Evolution, Holt, Rinehart and Winston, New York, 1969.
Simpson, G.G., The Major Features of Evolution, Columbia University Press, New York, 1953.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 984)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/e3wf9rxt/
தமிழ்“உயிரியல்சார் படிமலர்ச்சி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/e3wf9rxt/APA
Oliyon Research. (2026). உயிரியல்சார் படிமலர்ச்சி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/e3wf9rxt/MLA
"உயிரியல்சார் படிமலர்ச்சி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/e3wf9rxt/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment