உமர்
umar
இசுலாமிய வரலாற்றில் இரண்டாம் கலீபாவாகப் (Caliph) பதவியேற்றவர்; நெஞ்சில் உரமும் நேர்மைத் திறமும் தோளில் பலமும் உடையவர்.
இசுலாமிய வரலாற்றில் இரண்டாம் கலீபாவாகப் (Caliph) பதவியேற்றவர்; நெஞ்சில் உரமும் நேர்மைத் திறமும் தோளில் பலமும் உடையவர். இவரது ஆட்சிக் காலத்தில்தான் எகிப்து, சிரியா, பாரசீகம் ஆகிய நாடுகள் முசுலீம்களின் ஆட்சிக்கு உட்படுத்தப்பட்டன. முதலாம் கலீபாவான அபூபக்கரின் ஆட்சிக் காலத்திலேயே உமர் அவருக்கு உறுதுணையாக நின்று ஆட்சிப் பொறுப்புகளைக் கவனித்து வந்தார். அபூபக்கர் இறந்த பொழுது ஒருமுகமாகக் கலீபாவாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கலீபா உமரின் நீதியும் எளிமையும் போற்றத்தக்கன.
உமர் செல்வம் கொழிக்கும் பல பகுதிகளிலும் பரவிக் கிடந்த பேரரசின் அரசராக இருந்தாலும் எளிய வாழ்க்கை நடத்தினார். முசுலிம்களின் தன்னிகரற்ற தலைவராம் முகமது நபிக்குத் தம் அன்புமகள் அப்சாவைத் (Hapsha) திருமணம் செய்துகொடுத்துப் பெருமைபெற்றவர் உமர். ‘இசுலாத்தின் கூர்வாள்’ என்று கூறப்பட்ட தனிப் பெரும் படைத்தலைவர் காலீத்பின்–வலீது (Khalid bin Walid) என்பவர் தம்மால் தோற்கடிக்கப்பட்ட ஒரு தலைவனின் மனைவியைக் களத்திலேயே தம் மனைவியாக்கிய கொடுமையைக் கண்டு கொதித்தெழுந்த உமர், அப்போது கலீபாவாக இருந்த அபூபக்கரிடம் காலீதுக்குத் தகுந்த தண்டனை கொடுக்கும்படி வலியுறுத்தினார். தாம் பதவியேற்றதும் காலீதைப் படைத்தலைவர் பதவியினின்றும் நீக்கினார். நீதியின் நிலைக்களமான இவர் குற்றம் புரிவோரைத் தண்டிக்கக் கையில் கசையை ஏந்திக் கடைத்தெருவெல்லாம் கூட அலைவாராம். சிரியா நாட்டிலுள்ள எருசலம் (Jeruselam) கைப்பற்றப்பட்டபொழுது அதை தேரில் காணவிழைந்த கலீபா உமர், ஒரு சாதாரண மனிதரைப்போன்று ஒட்டகத்தின்மேலேறி அங்குச் சென்றதைக் கண்டு மக்கள் வியப்புற்றனர்.
முசுலீம்களால் கைப்பற்றப்பட்ட நாடுகளில் வாழ்ந்த மக்களுக்கு எல்லா உரிமைகளும் வழங்கப்பட்டன. அவர்களின் சமயமும் பண்பாடும் பாதுகாக்கப்பட்டன. அவர்களின் நிலங்கள் அவர்களிடமே இருந்தன. நகரங்களில் வாழ்ந்த மக்களைத் துன்புறுத்தாத வகையில் கலீபா உமரின் அரசியல் அலுவலர்களும் ஆட்சியாளர்களும் நகரங்களின் வெளிப்புறத்தில் அமைக்கப்பட்ட கூடாரங்களில் வாழ்ந்தனர். அவ்வாறு கூடாரங்களாக இருந்து பின் குடியேற்றப் பகுதிகளாக மாறியவைதாம் ஈராக்கு நாட்டிலுள்ள கூபா (Kuba), பசுரா (Basra) முதலிய நகரங்கள். தமது பத்தாண்டுக்கால ஆட்சியில் கலீபா உமர் நாட்டிற்கு நலம் பல செய்தார். நாட்டின் பொதுக் கருவூலம் (Public Treasury) ஒன்றை உருவாக்கினார். நபிநாயகத்தின் நெருங்கிய நண்பர்களான பல சான்றோர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வழி செய்தார். எழுதப்படாமல் மக்களின் நெஞ்சங்களில் மட்டும் ஆழமாகப் பதிந்திருந்த குர்–ஆனின் வாசகங்களை ஒன்றுசேர்க்கும் பணியைத் தொடங்கினார். நல்லவராகவும் வல்லவராகவும் வாழ்ந்த கலீபா உமர் ஒரு கொடியவனால் கி.பி. 644–ஆம் ஆண்டு கொலையுண்டார். அவரை வரலாற்று ஆசிரியர்கள் ‘மாமன்னன்’ (Omar, the Great) என்று குறிப்பிடுவர். மு.அ.
துணை நூல்கள்
Hitti, P.K., History of the Arabs, London, 1946.
Mur. W., The Caliphate, Its Rise, Decline and Fall, Edinburgh, 1924.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 935)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dwhd7wqj/
தமிழ்“உமர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/dwhd7wqj/APA
Oliyon Research. (2026). உமர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/dwhd7wqj/MLA
"உமர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/dwhd7wqj/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment