இருநிறமயக்கம் என்பது இரு நிறங்களின் வேறுபாட்டினை உணர முடியாத நிலையைக் குறிக்கும். இது பிறக்கும் பொழுதே ஏற்படும் நிறக்காட்சிக் குறையாகும். இருநிறமயக்கத்திற்கு (Dichromatism ) மருத்துவம் எதுவும் இல்லை. இவர்கள் பெரும்பாலும் பச்சை, சிவப்பு நிறங்களைப் பிரித்தறிய முடியாதவராக இருக்கின்றனர். இது மரபுவழி வரும் பார்வைக் குறையாகும். இது 23–ஆம் பாலணுக்களின்வழி அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. இவர்களுக்குப் பச்சை, சிவப்பு ஆகிய நிறங்கள் வெளிர் நீலமாகத் தோற்றமளிக்கின்றன. இயங் எமோல்டிசு (Young Helmholtz) என்பார் பச்சை, சிவப்பு ஆகிய நிறங்களின் கலப்பினால் மஞ்சள் நிறம் கண்ணுக்குத் தெரிகிறது என்றும், பச்சை, சிவப்பு ஆகிய நிறங்களைத் தனித்தனியே அடையாளம் கண்டு கொள்ளமுடியாதவர்கள் மஞ்சள் நிறத்தை மட்டும் அடையாளம் கண்டுகொள்கின்றனர் என்றும் கூறுகிறார். ஒரு பட்டுப்பூச்சியின் நிறம் இருநிறமயக்கமுடையோரின் (Dichromates} கண்களுக்கு எவ்வாறு தெரிகிறது என்பதைக் கேட்டு அறியலாம். மனிதர்களின் இயல்பான நிறக்காட்சித்திறன் மூன்று நிறக்காட்சித் திறன் (Trichromatic Vision) என்று குறிப்பிடப்படுகிறது. பார்வைக் குறைகள் எதுவும் இல்லாதவர்கள் இயல்பாகக் கருமை, வெண்மை, ஆகிய இரு நிறங்களைப் பிரித்து உணர்வதோடன்றி, நீலம், சிவப்பு, பச்சை, மஞ்சள் ஆகிய நிறங்களின் பலநிலைகளையும் பிரித்தறியக் கூடியவர்களாக இருக்கின்றனர். ::1. பட்டுப்பூச்சியின் இயல்பான நிறம் ::2. இருநிற மயக்கமுடையோருக்கு அது தெரியும் விதம் ஆகியவற்றை இருநிறமயக்கச் சோதனை மூலம் காணலாம். இத்தகைய நிறவேறுபாடுகளை உணரமுடியாதவர்களும் இருக்கின்றனர். இவர்கள் நிறக்குருடர்கள் (Colour Blinders) என்று குறிப்பிடப்படுகின்றனர். நிறக்குருடு உடையவர்களிடம் பார்வைக்குறைகள் எதுவும் இருப்பதில்லை. ஆனால், சில நிறங்களை மட்டும் இவர்களால் வேறுபடுத்தி உணரமுடிவதில்லை. நிறக்குருடு ஆண்களிடம் மட்டுமே காணப்படுகிறது. உலகில் உள்ள ஆண்களின் மொத்த எண்ணிக்கையில் இரண்டு விழுக்காட்டினர் இத்தகைய நிறக்குருடுடையவர்களாக இருக்கின்றனர் என்பது கணக்கிடப்பட்டுள்ளது. வெளிர்ப்பச்சையும் வெளிர்ச் சிவப்பும் இருநிறக் குருடு உடையவர்களுக்கு (Dichromates) ஒரு நிறம் போலக் காட்சியளிக்கின்றன. இரண்டும் வெளிர் மஞ்சளாகத் தெரிகின்றன. இவர்களுள் சிலர் வெளிர் சிவப்பு நிறத்தை மட்டுமே கண்டுகொள்ள முடியாதவர்களாக இருக்கின்றனர். இத்தகையோர் ‘புரடனோபியா’ (Protanopia) உடையோர் என்று கூறப்படுகின்றனர். வேறுசிலர் வெளிர்பச்சை நிறத்தை மட்டுமே கண்டுபிடிக்க முடியாமல் இருக்கின்றனர். இவர்கள் ‘தியுடரனோபியா’ (Deuteranopia) உடையோர் என்று குறிப்பிடப்படுகின்றனர். ‘புரடனோபியா’ உடையோர் பச்சை, மஞ்சள் ஆகிய இரண்டு நிறங்களுக்குள் வேறுபாடு உணரமுடியாதவர்களாகவும், ‘தியுடரனோபியா’ உடையோர் வெளிர் சிவப்பு, வெளிர் பச்சை ஆகிய இருநிறங்களுக்குள் வேறுபாடு காண முடியாதவர்களாகவும் இருக்கின்றனர். இத்தகைய நிறக்குருடுக்கு மாறாக, ஒரு நிறக்குருடுடையோர் (Monochromates) வெண்மை, கருமை ஆகிய இரு நிறங்களின் பல நிலைகளைத் தவிர வேறு நிறங்களைக் காணமுடியாதவர்களாக இருக்கின்றனர்.