செயற்கைக் கோள்களின் தொழில் நுட்பம்
ceyaṟkaik kōḷkaḷiṉ toḻil nuṭpam
மனிதனால் ஏவப்பட்டு, தொழில் மற்றும் அறிவியல் வினாக்களுக்கு விடையளிக்கும் வண்ணம், செயற்படும் செயற்கைக் கோள்கள் இவ்வகையைச் சார்ந்தவையாகும்.
மனிதனால் ஏவப்பட்டு, தொழில் மற்றும் அறிவியல் வினாக்களுக்கு விடையளிக்கும் வண்ணம், செயற்படும் செயற்கைக் கோள்கள் இவ்வகையைச் சார்ந்தவையாகும். இவை, ஒரு குறிப்பிட்ட சுற்றுப் பாதையில் நிலை நிறுத்தம் செய்யப்பட்டு, தகவல் தொடர்புத் துறை, அளவியல், கப்பல் துறை, வளி மண்டலக் கட்டுப்பாட்டுத் துறை போன்றவற்றிற்கு, மிக இன்றியமையாதவையாக விளங்குகின்றன. இது போன்ற தேவைகளை நிறைவேற்ற உதவும் தொழில் நுட்பம், பொதுவான ஒன்றே; அளவியல் தொடர்பான செயற்கைக் கோள்களின் செயற்பாடு, செயற்கைக் கோள்களில் உள்ள கருவிகளின் திசை, எப்போதும் புவியை நோக்கியே இருப்பது ஆகும். புவியின் சுற்றுப் பாதையில் செயற்கைக் கோளும் தொடர்ந்து செயற்பட்டு, அதை நோக்கியே அதன் கருவிகளையும் வைத்திருத்தல் மிகவும் இன்றியமையாதது. இதற்குச் செயற்கை கோள்களை முறைப்படி: நிலை பெற வைக்கும் தொழில் நுட்பம் உதவுகிறது. செயற்படத் தேவைப் படும் ஆற்றல்களை, முன்னமே தேவைக்கேற்ப வழங்க வேண்டும். இவற்றில், சூரிய ஆற்றல்களை பயன் படுத்திக் கொள்ளும் வண்ணம் சூரியக் கலன்களையும், பிற ஆற்றல் மூலங்களையும் பயன்படுத்தலாம்.
செயற்பாட்டுச் செயற்கைக் கோள்கள், தகவல் தொடர்புத் துறைக்கு மிகவும் உதவும் வகையில், புவிக்கு வானொலி அல்லது நெடுந்தொலைவு முறை வழியாகத் தகவல்களை அனுப்புகின்றன. நவீன செயற்கைக் கோள்களின் நுணுக்கங்கள் மிகுதியாக, அனுப்பப் படும் தகவல்களின் எண்ணிக்கையும் உயரும். மிகவும் ஆற்றல் வாய்ந்த செயற்கைக் கோள்களின் உணர் சட்டங்கள், இம்மாதிரியான வசதிகளை ஏற்படுத்தத் துணை புரிகின்றன. நுண்ணுணர் மின்னணுக் கருவிகளைக் கட்டுவிக்க, மிகவும் லேசான அமைப்பு இன்றியமையாததாகும். அவ்வமைப்பு செயற்கைக் கோள்களை ஏவும் போது ஏற்படும் உயர் அளவிலான அதிர்வுகளையும் தாங்கக் கூடியதாக அமைதல் வேண்டும். இதற்கு விண்வெளியில் வெப்பக் கட்டுப் பாட்டு அமைப்பு, சீரான வெப்ப நிலை மிகுந்த சூழ்நிலையைக் கொண்டிருத்தல் வேண்டும். பல கருவிகள், வானூர்தியின் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு வெப்பத்தைச் செலுத்தவும், வெப்ப நிலையைக் கட்டுப்படுத்தவும் பயன் படுகின்றன. இவ்விதமான பல்வேறு தேவைகளை நிறைவேற்ற, நீண்ட காலத்திற்குக் கருவிகளின் நீடிக்கும் தன்மை இருத்தல் வேண்டும்.
செயற்கைக் கோள்களை ஏவ ஆகும் செலவு மிகவும் உயர்வதால், அடிக்கடிச் செயற்கைக் கோள்களை ஏவ முடியாது. இக்காரணத்தால், செயற்கைக் கோள்களில் அமைந்திருக்கும் கருவிகளின் நீடிக்குங் காலம் முடிந்து விட்டால், செயற்கைக் கோள்களை மீண்டும் ஏவ வேண்டியிருக்கும். இதனைத் தவிர்க்க, மாற்றுக் கருவிகளைப் பொருத்திச் செயற்கைக் கோள்களைச் செலுத்துகின்றனர்.
தொழில் நுட்பத்தை விரிவாக்க, செயற்பாட்டு செயற்கைக் கோள்களை வரிசையாக அனுப்பி, ஆய்வுகளை மேற்கொள்கின்றனர். இச்செயற்கைக் கோள்கள் புவியிலிருந்து ஏறத் தாழ 35887.39 கி.மீ. உயரத்தில் நிலை பெற்று நில நடுக் கோட்டின் மேற்புறம் பணி புரிகின்றன. இவ்வுயரத்தில், செயற்கைக் கோள்கள் 24 மணி நேரம் துல்லியமாக சுற்றுப் பாதையில் செயற்படுமாறு அமைக்கப் பட்டிருக்கும். அதாவது, புவியின் சுழற்சிக்குத் தக்கபடி, அதற்கு சரியான சுழல் வேகத்தில் செயற்கைக் கோள்களும் செயல் படுகின்றன. இவ்விதமான அமைப்பால், புவியின் மேற்பரப்பில் ஒரு பகுதியை நோக்கிச் செயற்கைக் கோள்களை நிலை நிறுத்தி வைப்பதன் மூலம், அப்பகுதிக்குத் தொடர்ந்த தொடர்பு கொண்டிருத்தல் ஏதுவாகிறது.
புவியிலிருந்து குறைந்த உயரத்தில், நிலை பெற்ற அளவியல் தொடர்பான செயற்கைக் கோள்கள் குறிப்பிட்ட பகுதிகளுக்காகச் சுற்றுப் பாதைகளிலும், குறிப்பாகச் சிலவற்றிலேயே நிலை நிறுத்தப் படுகிறது. இவ்வகைச் செயற்கைக் கோள்கள், மேகங்களின் அசைவுகளையும்,அவற்றைப் பற்றிய ஏனைய விவரங்களையும் கண்டறிகின்றன. புவியியலைப் பொறுத்த வரை, மிகக் குறுகிய கால வரையறையைக் கொண்ட நிகழ்ச்சிகளான இடி, மின்னல், நில நடுக்கம் போன்றவற்றின் தோற்றக் காரணங்கள் போன்ற மிக இன்றியமையாத விவரங்களையும் கண்டறிகின்றன. இவ்வாறு மனித வாழ்வின் நவீன தேவைகளான பல தொழில் நுட்பங்களும், பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்வதன் மூலம் நடைமுறைப் படுத்தப்படுகின்றன. —வி. சண்முகசுந்தரம் நூலோதி. Arthur C. Clerke, The Promise of Space, Hodder and Stonghton Publication, London, 1968.
தொழிலியல் (technology) என்பது தொழில் துறையின் (industry) முறையான அறிவும், செயல் நடவடிக்கையும் குறித்த இயல் ஆகும். அறிவியல், பொறியியலுடன் நெருங்கிய தொடர்புள்ளது. கருவிகள், தொழில் நுட்பங்கள் (techniques) உதவியுடன் பல திட்டங்களைச் செயல்படுத்தும் ஒழுங்கமைப்பே தொழிலியல். எனவே, இதனைத் தொழில் நுட்பவியல் அல்லது தொழில் நுட்பம் என்றே சுருங்கக் குறிப்பதும் உண்டு. பல்வேறு தொழில் நுட்பங்களை நிறுவிடக் கையாளும் ஆய்வுச் செயற்கைக் கோள்களே தொழிலியல் செயற்கைக்கோள்கள்.
செயற்கைக் கோள் ஏவுகலங்களின் (satellite launch vehicles) பறப்பு இயங்கியல் (flight dynamics). அவற்றின் பயணத் தடமறிதல், தொலைவு அளப்பு (tracking and telemetry), செயற்கைக் கோளுடன் குறித்த மின் காந்த அலை வரிசையில் கொள்ளும் தகவல் தொடர்புச் சிக்கல்கள் அதன் சுற்றுப் பாதை இயக்கவியல் (orbital mechanics) மற்றும் மின்னணுக் கருவிகள், கட்டுப்பாட்டு அமைப்பு (control system), எரி பொருள் தேர்வு போன்ற பல வகைத் தொழில் நுட்ப முறைகளை வெற்றி கரமாகக் கையாளும் பயிற்சியும், முயற்சியுமே. இவ்வகைச் செயற்கைக் கோள் உருவாக்கத்திற்குரிய அடிப்படைகளாகும்.
இந்தியாவின் ரோகிணி (Rohini) செயற்கைக் கோள்கள் இத்தகைய தொழிலியல் நிரூபணச் செயற்கைக் கோள்களே (technology proving satellites).
அவ்வாறே தகவல் தொடர்புத் தொழிலியலில் தேர்ச்சியடையவும், செயற்கைக் கோளின் பயன்களைப் பொது மக்களுக்குப் புகட்டவும், கல்வியறிவு ஊட்டவும்–ஆகஸ்ட் 1975 முதல் ஜூலை 1976 வரை ‘சைட்’ (SITE) என்னும் 'செயற்கைக் கோள் வழி, கல்வி பயிற்றுத் தொலைக் காட்சி ஆய்வு (Satellite Instructional Television Experiment) நடத்தப்பட்டது. இத்திட்டத்திற்குக் களம் அமைத்துத் தந்த அமெரிக்காவின் ஏ. டி. எஸ்-6 (ATS-6) என்ற பயன் பாட்டுத் தொழிலியல் செயற்கைக் கோளைப் (Application Technology Satellite) படத்தில் காணலாம். —சு. முத்து
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 809)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dsgeabby/
தமிழ்“செயற்கைக் கோள்களின் தொழில் நுட்பம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/dsgeabby/APA
Oliyon Research. (2026). செயற்கைக் கோள்களின் தொழில் நுட்பம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/dsgeabby/MLA
"செயற்கைக் கோள்களின் தொழில் நுட்பம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/dsgeabby/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment