இலாவோசு நாட்டில் கல்வி
ilāvōcu nāṭṭil kalvi
இலாவோசு நாட்டுக் கல்வி அமைப்பு, மழலையர் பள்ளிக் கல்வி, தொடக்கப் பள்ளிக் கல்வி, உயர்நிலைப்பள்ளிக் கல்வி (Lower Secondary), மேல்நிலைப் (Upper Secondary), பல்கலைக் கழகக் கல்வி அல்லது தொழில் நுட்பக் கல்வி என்ற நிலைகளில் அமைந்துள்ளது.
இலாவோசு நாட்டுக் கல்வி அமைப்பு, மழலையர் பள்ளிக் கல்வி, தொடக்கப் பள்ளிக் கல்வி, உயர்நிலைப்பள்ளிக் கல்வி (Lower Secondary), மேல்நிலைப் (Upper Secondary), பல்கலைக் கழகக் கல்வி அல்லது தொழில் நுட்பக் கல்வி என்ற நிலைகளில் அமைந்துள்ளது.
மழலையர் பள்ளிகளில் மூன்றிலிருந்து ஆறு வயது வரை உள்ள குழந்தைகள் சேருகின்றனர். தொடக்கப் பள்ளிகளில் ஏழு வயதிலிருந்து பதினொரு வயது வரை உள்ள மாணவர்களும் உயர்நிலைப்பள்ளிகளில் பன்னிரண்டு வயதிலிருந்து பதினான்கு வயது வரை உள்ள மாணவர்களும் சேர்ந்து கல்வி பயிலுகின்றனர். மேல்நிலைப் பள்ளிகளில் பதினைந்து வயதிலிருந்து பதினேழு வயது வரை உள்ள மாணவர்கள் சேருகின்றனர். பல்கலைக் கழகங்களில் பதினெட்டு வயதில் நுழைகின்றனர்.
இலாவோசில் 1983–ஆம் ஆண்டுக் கணக்கின்படி, 29 விழுக்காடு மாணவர்கள் பள்ளியிலும், 48 விழுக்காடு மாணவர்கள் உயர்நிலைப் பள்ளியிலும், 23 விழுக்காடு மாணவர்கள் மேல்நிலைப் பள்ளியிலும் சேர்ந்து பயின்றனர். பள்ளிகளில் சேர்ந்து பயிலும் பெண்களின் விழுக்காடு குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது.
வயது வந்தோர் கல்வி
இலாவோசில் பல முறைகளில் வயது வந்தோர் கல்வி வழங்கப்படுகிறது. வியண்டைன் (Vientaine) நகரில் தொழிலாளர்களுக்கும் உழவர்களுக்கும் கல்வி மையங்கள் உள்ளன. மாநில, மாவட்ட அளவில் முதியோர் கல்வி மையங்கள் செயற்படுகின்றன. சிறுபான்மை இனக்குடியின் (Ethinic Minorities) இளைஞர்களுக்கென்றே கல்வி மையங்கள் உள்ளன.
வயது வந்தோர் கல்வி மையங்களில் கல்வியறிவு பெறாத அனைவரையும் சேர்த்துக் கொள்வதில்லை. இருபதிலிருந்து ஐம்பது வயதுக்குட்பட்ட சிறந்த புரட்சி வீரர்கள், தொழிலாளர்கள், உழவர்கள் ஆகியோரைத் தேர்ந்தெடுத்துக் கல்வி வழங்கப்படுகிறது. இவர்கள் படிக்கும் காலத்தில், உணவு, உறைவிடம் ஆகிய அடிப்படை வசதிகளை அரசு செய்து தருகிறது.
வயது வந்தோர் கல்வித் திட்டத்தில், தொடக்கப் பள்ளிக் கல்வியும் கற்பிக்கப்படுகின்றன. இக்கல்வி பெற்ற தொழிலாளர்கள், தங்களது கல்வித் தகுதிக்கு ஏற்றவாறு முறையான தொழிற்கல்விப் பள்ளிகளில் சேர்த்து கொள்ளலாம்; இவர்கள் மேற்படிப்பாகத் தொழில் நுட்பக் கல்வியும் பயிலலாம்.
நிருவாகம்
கல்விக்கு ஆகும் அனைத்துச் செலவையும் அரசே ஏற்றுக் கொள்கிறது.
தொடக்கப் பள்ளி நிருவாகம் ஊராட்சியின் பொறுப்பிலும், உயர்நிலைப் பள்ளி நிருவாகம் வட்டார அலுவலர்கள் (Commune Authorities) பொறுப்பிலும், மேல்நிலைப் பள்ளி நிருவாகம் மாவட்ட அலுவலர் பொறுப்பிலும் உள்ளன. தொழிற் கல்வி நிருவாகத்தை மாநில அலுவலர் (Provincial Authorities) கண்காணிக்கின்றனர்.
தேசிய அளவில் கல்வி அமைப்பில் புகுத்தப்படும் மாற்றங்கள், சீர்தூக்கல், தேர்வு போன்ற அனைத்துக் கல்விப் பொறுப்புகளையும் கல்வி அமைச்சகம் (The Ministry of Education) செயற்படுத்தி வருகிறது. பல்கலைக் கழகம், ஆசிரியர் பயிற்சி, சிறப்புக் கல்வி நிறுவனங்கள் (Specialized Institutes) ஆகியவையும் கல்வி அமைச்சகத்தின் பொறுப்பில் உள்ளன.
இலாவோசில் (Laos) தனியார் பள்ளிகளே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆசிரியர் தேர்வு
தொடக்கப் பள்ளி ஆசிரியர்களைத் தலைநகர் நீங்கிய நாட்டுப்புற அதிகாரிகள் (Provincial Authorities) தேர்ந்தெடுக்கின்றனர். உயர்நிலைப் பள்ளிக்கும் அதற்கு மேல் நிலையில் உள்ள கல்வி நிலையங்களுக்கும் உரிய ஆசிரியர்களைக் கல்வி அமைச்சகம் தேர்ந்தெடுக்கிறது.
ஆசிரியர் பயிற்சி
15 வயது நிறைந்த, தொடக்கப் பள்ளிக் கல்வி முடித்த இளைஞர்கள், தொடக்கப் பள்ளி ஆசிரியர் பயிற்சிக்குத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். ஆசிரியர் பயிற்சிக் காலம் மூன்றாண்டுகள். உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் பயிற்சிக்கு உயர்நிலைப் பள்ளிக் கல்வி முடித்தவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, மூன்றாண்டுப் பயிற்சியினை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளில் பெறுகின்றனர். மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் பயிற்சிக்கு, அக்கல்வித் தகுதி படைத்தவர்களுக்கு, நான்கு ஆண்டுகள் வியண்டின் நகரில் உள்ள உயர் பயிற்சி மையத்தில் (Ecole Superieure de Pedegogie) பயிற்சி அளிக்கின்றனர்.
இலாவோசு நாட்டுக் கல்வியில் சில சிக்கல்கள் தீர்க்கப்பட வேண்டியுள்ளன. ஆய்வக வசதியின்மை, சோதனைகள் செய்ய வேதிப் பொருள்கள் (Chemicals) பற்றாக்குறை, கல்வி கற்பித்தலுக்கு உதவும் நூல்களும் துணைக் கருவிகளும் இல்லாமை ஆகிய குறைகள் இலாவோசில் உள்ளன. அயல்நாட்டு மொழிகளைத் திறம்படக் கற்கச் சரியான கல்வித் திட்டமோ பாடநூல்களோ இங்கு இல்லை. மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர்கள் சேரும் வேகம் மிகுந்துவிட்டது. அதனால் அக்கல்வி கற்றோரிடையே வேலையில்லாத் திண்டாட்டம் பெருகியுள்ளது. கல்வித் தொடர்பான சிக்கல்களைத் தீர்க்க அரசானது, தனது 1981–85 ஆம் ஆண்டுகளுக்கான வளர்ச்சித் திட்டத்தில் முதலிடம் தந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 386)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/drsg8hty/
தமிழ்“இலாவோசு நாட்டில் கல்வி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/drsg8hty/APA
Oliyon Research. (2026). இலாவோசு நாட்டில் கல்வி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/drsg8hty/MLA
"இலாவோசு நாட்டில் கல்வி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/drsg8hty/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment