அலகாபாத்து
alakāpāttu
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ளதொரு மாநகரம்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ளதொரு மாநகரம். இதன் பழம் பெயர் பிர- யாகை என்பதாகும். இந்திய நாட்டின் புனித நகரங்களுள் இதுவும் ஒன்று பிரயாகை என்னும் பெயரை அக்பர், அலகாபாத்து (Allahabad) என மாற்றினார். அலகாபாத்து என்பது கடவுள் நகரம் எனப் பொருள்படும். இது உத்தரப்பிரதேச மாநிலத்தின் இரண்டாம் பெருநகரமாகும். இயமுனை ஆற்றின் வடகரையில் அமைந்துள்ள இந்நகரத்தின் வடமேற்கில் கங்கையும் யமுனையும் ஒன்றாகக் கலக்கின்றன. நிலத்தடியில் பாய்ந்தோடி வரும் சரசுவதி என்னும் ஆறும் இவற்றோடு இணைவதால் இதனை முக்கூடல் அல்லது ‘திருவேணி சங்கமம்’ என்றும் அழைப்பர். திரிவேணி சங்கமத்தில் நீராடுவதால் பாவங்கள் தொலையும் என்பது இந்துக்களின் மரபுவழிக் கருத்தாகும். இங்கு இயமுனை ஆற்றின் வலக்கரையில் உள்ள அக்பர் கட்டிய கோட்டையும் அரண்மனையும், சும்மா மசூதியும் புகழ்பெற்றவை. கோட்டையின் நுழைவாயிலின் அருகில் அசோகர் கற்றூண் உள்ளது. அதன் உயரம் ஏறத்தாழ 12 மீட்டராகும். அத்தூணில் அசோகர் கட்டளைகளும், கி.பி நாலாம் நூற்றாண்டில் வாழ்ந்த குப்தப்பேரரசர் சமுத்திரகுப்தரின் வெற்றிகளைக் குறித்த வடமொழிச் சாசனம் ஒன்றும் பொறிக்கப்பெற்றுள்ளன. பன்னிரண்டாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கும்பமேளாவும், மாகமேளாவும் சிறப்பாக இந்நகரில் கொண்டாடப்பெறும். கும்பமேளாவின்போது திருவேணி சங்கமத்தில் நீராட இலட்சக்கணக்கானவர் நாடு முழுவதிலுமிருந்தும் பிரயாகைக்கு வருகின்றனர். முசுலிம்களின் ஆட்சிக் காலத்திலும் இந்நகரம் சிறப்புப் பெற்றிருந்தது. குசுருபாக் என்னும் நினைவுச் சின்னம் இசுலாமியர் ஆட்சிக் காலத்தில் நிறுவப்பெற்றதாகும். கிழக்கிந்திய வணிகக் குழுவின் ஆட்சியின்போது கி.பி. 1801–ஆம் ஆண்டில் இந்நகரம் ஆங்கிலேயருக்குக் கொடுக்கப்பட்டது. கி.பி. 1857 ஆம் ஆண்டில் ஏற்பட்ட பெரும் புரட்சியின் போது இங்கும் கலகம் மூண்டது. இங்கு நேரு குடும்பம் வாழ்ந்துவந்த ஆனந்தபவன் இந்திய விடுதலைப் போராட்டத்தின்போது காந்தியடிகளின் மையமாயிற்று. இந்திய தேசியக் காங்கிரசுக் கட்சியின் பல மாநாடுகள் இங்கு நடைபெற்றன. காங்கிரசு கட்சியின் தலைமையிடமாக ஆனந்தபவன் கி.பி. 1948–ஆம் ஆண்டுவரை நீடித்தது. இந்நகரில்தான் அலகாபாத்துப் பல்கலைக் கழகம் கி.பி. 1887–ஆம் ஆண்டு நிலைநாட்டப்பெற்றது. உத்தரப் பிரதேசப் பல்கலைக் கழகங்களில் அது சிறந்ததெனப் பாராட்டப்படுகிறது.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 855)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dqqa7xxm/
தமிழ்“அலகாபாத்து”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/dqqa7xxm/APA
Oliyon Research. (2026). அலகாபாத்து. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/dqqa7xxm/MLA
"அலகாபாத்து." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/dqqa7xxm/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment