தாவரங்களுக்கு இன்றியமையாத ஊடடச் சத்துகளில் பாஸ்ஃபரசும் ஒன்றாகும். இச்சத்து, பாறை பாஸ்ஃபேட்டுகளில் கால்சியம் பாஸ்பேட்டாக அமைந்துள்ளது. இது நீரில் கரையாமையால், தாவரங்களுக்குப் பயன்படுவதில்லை. எனவே, நீரில் கரைய வல்லதும், தாவரங்களில் வேர்களின் மூலம் உட்கவரப்படக் கூடிய வகையில் மாற்றப்பட்டதுமான கால்சியம் டைஹைட்ரஜன் பாஸ்ஃபேட், கால்சியம் சூப்பர் பாஸ்ஃபேட் எனப்படும். பாஸ்ஃபரஸ் தாவரத்தின் வளர்ச்சிக்கும், முதிர்ச்சிக்கும், பழ உற்பத்திக்கும் இன்றியமையாதது. மேலும், வேர்கள் நன்கு வளரவும், நோய்த் தடுப்பு ஆற்றலைப் பெருக்கவும் இன்றியமையாதது. அமெரிக்க ஒன்றியக் குடியரசு, ஆஸ்திரேலியா, ஈரான், ஈராக் ஆகிய நாடுகளில் மிகுதியாகக் கிடைக்கும் பாஸ்ஃபேட் பாறைகளை உடைத்து எடுத்துக் கனிமப் பொருளைத் தூய்மை செய்து, நன்கு பொடியாக்கி, வெப்ப வினைக்கு உட்படுத்துவர். இம்முறையினால் Ca10 (PO₄)₈F₂ என்னும் வாய்ப்பாடு உள்ள ஃபுளூரின் வளிமம் நீக்கப்பட்ட டிரைகால்சியம் பாஸ்ஃபேட் கிடைக்கிறது. இத்துடன், அடர் சல்ஃப்யூரிக் அமிலத்தைச் சேர்த்து, வேதி வினையுறச் செய்யும் போது, கால்சியம் டை ஹைட்ரஜன் பாஸ்ஃபேட் கிடைக்கிறது. மேலும், இத்துடன் தாவரங்களுக்குப் பயன்படாத ஜிப்சமும் கலந்துள்ளது. இந்தக் கலவைக்குக் கால்சியம் சூப்பர் பாஸ்ஃபேட் என்று பெயர். சூப்பர் பாஸ்ஃபேட் உண்டாகும் வேதி வினை வருமாறு: இந்தச் சாதாரண சூப்பர் பாஸ்ஃபேட்டில் ஜிப்சமும் கலந்துள்ளமையால், பாஸ்ஃபரஸ் விகிதம் குறைந்துள்ளது (24%க்கும். குறைவாகவே, P₂O₅ உள்ளது). எனவே, பாறை பாஸ்ஃபேட்டுடன் பாஸ்ஃபோரிக் அமிலத்தைச் சேர்த்து, வேதி வினையுறச் செய்து, பாஸ்ஃபரஸ் மிகுந்துள்ள டிரிபிள் சூப்பர் பாஸ்ஃபேட் தயாரிக்கப்படுகிறது. இவ்வுப்பில் 48–52% வரை பாஸ்ஃபரஸ் பென்டாக்சைடு உள்ளது. இது சேமித்து வைப்பதற்கும், கையாள்வதற்கும் மிகவும் எளிது. மேலும், இதை ஓரிடத்திலிருந்து பிற இடங்களுக்கு எடுத்துச் செல்லும் செலவும் குறைவு. —கே. சுந்தரம் நூலோதி. Samuel. L. Tisdale and Werner L. Nelson, Soil Fertility and Fertilisers, Third Edition, Collier Macmillan International Edition, London, 1979.