இலான்பிராங்கு
ilāṉpirāṅku
இங்கிலாந்திலிருக்கும் காண்டர்பரி தலைமைக் குருவாக இருந்த பெரியார்.
இங்கிலாந்திலிருக்கும் காண்டர்பரி தலைமைக் குருவாக இருந்த பெரியார். இலான்பிராங்கு கி.பி. 1005–ஆம் ஆண்டில் இத்தாலியிலுள்ள பேவியா (Pavia) என்னும் ஊரில் பிறந்தார். இவர்தம் சொந்த ஊரிலேயே சட்டம் பயின்று வழக்குரைஞராகப் பணியாற்றினார். இத்தாலியை விட்டகன்று நார்மண்டியிலுள்ள அவரான்சசு (Avaranches) என்னுமிடத்தில், கி.பி. 1039–42–ஆம் ஆண்டுகளில் இவர் பள்ளியொன்றை நிறுவி நல்லாசிரியராகப் பெரும்புகழ் படைத்தார். உருவன் (Rouen) என்னும் நகருக்கு அண்மையிலிருந்த பெக்கு (Bec) என்னும் ஊரில் பெனிடிக்டிய மடத்தில் (Benedictine Abbey) கி.பி. 1042–ஆம் ஆண்டில் சேர்ந்தார். இவர் கி.பி. 1045–ஆம் ஆண்டில் அம்மடத்தின் தலைவரானார் (Prior). இங்கு இவர்தம் மாணவர்களுள் ஒருவராக இருந்த பாகியோவைச் (Baggio) சார்ந்த ஆன்செல்மோ என்பார், குறிப்பிடத்தக்கவர். பிற்காலத்தில் இந்த ஆன்செல்மோ இரண்டாம் அலெக்சாந்தர் என்னும் பெயரில் போப்பாண்டவராக இருந்தவர். இலான் பிராங்குக்கு நார்மண்டியில், நார்மண்டிப் பிரபுவான இரண்டாம் வில்லியத்துடன் தொடர்பு ஏற்பட்டது. இவரே பின்னர் இங்கிலாந்தின் அரசர் முதலாம் வில்லியம் (William I) என்றழைக்கப்பெற்றார். நார்மண்டிப் பிரபு வில்லியம் பிளாண்டர்சுப் (Flanders) பகுதியைச் சேர்ந்த மாடில்டா (Matilda) என்பவளை கி.பி. 1053–இல் மணந்தபோது, இலான்பிராங்கு (Lanfranc) அத்திருமணத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தார். ஆயினும் இவருக்கும் வில்லியத்திற்கும் நல்லுறவு ஏற்பட்டதன் விளைவாக உற்ற இருவரும் நண்பர்களாயினர். வில்லியம் வெற்றி வீரர் (William the Conqueror) என்னும் பட்டப் பெயருடன் அரசரான போது, இலான் பிராங்கைக் காண்டர்பரியின் தலைமைக் குருவாக்கினார்.
இங்கிலாந்து திருச்சபையைத் திருத்தியமைத்த பெருமை இலான்பிராங்கைச் சாரும். போப்பாண்டவரின் சிறப்புரிமையை இவர் ஏற்றுக்கொண்ட போதிலும், ஆங்கிலத் திருச்சபை முழுச் சுதந்திரத்துடன் இயங்க வேண்டுமென்னும் நோக்குடன் வில்லியத்திற்கு இவர் உறுதுணையாக இருந்தார். எனினும், அரசரின் தலையீட்டிலிருந்தும் உலகியல் செல்வாக்குகளிலிருந்தும் திருச்சபையை இவர் காத்தார். அரசும் திருச்சபையும் தனித்தியங்கும் பொறுப்புகளையும் சிறப்புரிமைகளையும் கொன்டிலங்க வேண்டும் என்றும் கருத்துடன் பிறப்பிக்கப்பட்ட அவசரச் சட்டம், திருச்சபை நீதிமன்றங்களையும் உலகியல் நீதிமன்றங்களையும் பிரிக்க வழிவகை செய்தமைக்கு, இவரே மூலகாரணமாவார்.
யார்க்கு தலைமைக் குருவாயிருப்பவர் காண்டர்பரி தலைமைக்குருவிற்குக் கட்டுப்பட்டே நடக்கவேண்டுமென்பதை இவர் வலியுறுத்தி நிலை நாட்டினார். இதன் பயனாக இங்கிலாந்துத் திருச்சபை முழுவதற்கும் இவரே தனிப்பெரும் சமயத் தனிப்பெரும் சமயத் தலைவராகச் கருதப்பெற்றார். ஆங்கிலக் குருமார்களுக்கு மாறாக நார்மானியக் குருமார்களை அமர்த்தியதும், இங்கிலாந்தில் நார்மானிய ஆட்சி உறுதிப்பட வழிவகை செய்ததும், ஊழலுக்கிலக்காகியிருந்த ஆங்கிலத் திருச்சபையையும் மடாலய நிறுவனங்களையும் தூய்மைப்படுத்த இவர் மேற்கொண்ட முயற்சிகளும் இவருடைய சாதனைகளாகும். திருச்சபைக் குருமார்கள் திருமணம் செய்து செய்துகொள்ளுதல் கூடாது என்பதில் இவர் பேரார்வம் காட்டினார். அதற்குமுன் குருமார்கள் திருமணம் செய்துகொள்ளும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர். எனினும், ஏற்கெனவே திருமணம் செய்து கொண்டிருந்தவர்கள் மேற்கூறிய தடையிலிருந்து விலக்களிக்கப்பட்டனர். இலான்பிராங்கு கி.பி. 1067–இல் தீக்கிரையான காண்டர்பரித் திருக்கோயிலை நார்மானியப் பாணியில் கட்டி முடித்தார். காண்டர்பரிக்கு அருகில் புனித சான் (St. John) மருத்துவமனையினையும் இவர் அமைத்தார். ஆர்பில்டவுன் (Harbledown) என்னுமிடத்தில் புனித நிக்கோலசு தொழுநோய் இல்லம் ஒன்றையும் கட்டினார். வெற்றி வீரர் வில்லியம் காலமானபோது, கி.பி. 1087–இல் இங்கிலாந்தின் அரசராக இரண்டாம் வில்லியத்திற்கு இலான்பிராங்கு முடிசூட்டினார். இவர் கி.பி. 1088–இல் ஏற்பட்ட கலகத்தின்போதும் இரண்டாம் வில்லியத்திற்கே ஆதரவு கொடுத்தார்.
திருமாறுபாட்டுக்கோட்பாடு (Transubstantiation) என்னும் கத்தோலிக்கத் திருச்சபைச் சடங்கு குறித்து எழுந்த வாத எதிர் வாதத்தில் இலான்பிராங்கு தீவிரமாகப் பங்குகொண்டார். இது குறித்து பின்னர் ஆய்வுக் கட்டுரையொன்றை வெளியிட்டுப் புகழ்பெற்றார். இடைக்காலம் முழுவதிலும் கிறித்தவர்களின் வைதிக தெறியைப் போற்றிப் பாதுகாக்கும் சீரிய இலக்கியமாக இவ்வாய்வுக் கட்டுரை நிலைத்தது. இவர் கி.பி. 1089–இல் காலமானார்.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 387)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dmazhur9/
தமிழ்“இலான்பிராங்கு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/dmazhur9/APA
Oliyon Research. (2026). இலான்பிராங்கு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/dmazhur9/MLA
"இலான்பிராங்கு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/dmazhur9/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment