பாலக்காட்டில் பழைய கல்பாத்தி கிராமத்தில் கி.பி. 1892–இல் பிறந்தார். அங்கு விக்டோரியா கல்லூரி உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பில் தேர்வு பெற்றார். பின்னர் எட்டையபுரம் வந்து தங்கித் தன் நிலைமையை மன்னரிடம் முறையிட்டு அலுவலகத்தில் எழுத்தராகச் சில மாதங்கள் பணியாற்றினார். கேரளத்தில் பிறந்து, மலையாள மொழியில் கல்வி கற்று, தமிழ் மொழியில் நன்கு பயிற்சி பெற்ற இராமய்யர் ஆங்கில மொழியில் உள்ள சேக்சுபியர் நாடகங்களைத் தமிழில் மொழி பெயர்த்து எழுதி உள்ளார். பல புராணக் கதைகளை நாடக வடிவில் எழுதியுள்ளார். எட்டையபுரத்தில் இராமய்யர் இருந்த காலத்தில்தான் மகாகவி பாரதியாரும் அதே தெருவில் வாழ்ந்திருக்கிறார். பின்னர் இராமநாதபுரம் மாவட்டம் இலுப்பையூர் கிராமத்தில் நாடார் சத்திரிய வித்தியாசாலையில் 1932 முதல் 1948 முடிய 16 ஆண்டுகள் தலைமையாசிரியராகப் பணியாற்றினார். இலுப்பையூரிலிருந்து வெளியேறி 1948–ஆம் ஆண்டு தஞ்சை மாவட்டம் வடுவூரில் குடியேறி ஒரு நடுநிலைப் பள்ளியின் தலைமையாசிரியராகப் பணியாற்றி 1952–இல் ஓய்வு பெற்றார். தம் 60–ஆம் வயதில் வடுவூரில் நாடகத்தில் நடித்தார் என்றால், நாடகக் கலையில் இவருக்கு இருந்த ஆர்வம் எப்படிப்பட்டது என்பதை உணரலாம். மாணவர்களுக்கு ஆங்கிலப் போதனையை எவ்விதப் பயனும் கருதாது செய்தார் இவர் 22–4–1966–இல் காலமானார். இரா.கி.