யாழ்ப்பாணத்தைச் சார்ந்த திரிகோணமலையில் வாழ்ந்த புலவர். கார் காத்த வேளாளர். கி.பி. 1853-இல் பிறந்த இவர் 57 ஆண்டுகள் வாழ்ந்தார். தந்தை பெயர் அளகைக்கோன் வேலுப்பிள்ளை. இவர் நிகண்டுகள், நீதிநூல்கள் போன்றவற்றைக் குமாரவேலுப் பிள்ளையிடமும் இலக்கண இலக்கிய நூல்களையும் வடமொழியையும் தம் சிறிய தந்தையாராகிய தையல் பாகம் பிள்ளையிடமும் பயின்றார். ஆசிரியப் பயிற்சி பெற்று அரசினர் கல்லூரியில் தலைமையாசிரியராகப் பணியாற்றினார். பணி ஓய்வு பெற்ற பின்னர்த் தமிழ்த் தொண்டிலும் சிவத்தொண்டிலும் ஈடுபட்டார். திருக்கோண நாயகர் பதிகம், திரிகோணமலை வில்லூன்றிக் கந்தசாமி பத்துப் பதிகம், திரிகோணமலை வில்லூன்றிக் கந்தசாமி பதம், கந்தசாமி கலிவெண்பா, திரிகோணமலை சிவகாமியம்மன் கும்மி, திரிகோணமலை விசாலாட்சியம்மன் விருத்தம், வெருகல் சித்திர வேலாயுதசாமி விருத்தம், சித்திர வேலாயுதசாமி தரிசனப் பத்து, சிவகாமியம்மன் ஊஞ்சல், சித்தி விநாயகர் ஊஞ்சல், பத்திரகாளி ஊஞ்சல், வேற்பத்து, மயிற்பத்து, விசுவநாதர் விருத்தம், தனிப்பாடல்கள், கண்டி நாடகம், கண்டனங்கள், நெஞ்சறி மாலை, விசாலாட்சியம்மை பெருங்கழி நெடில் விருத்தம், கந்தசாமி விருத்தம், திருக்கோணாசல வைபவம் என்பன இவர் செய்த நூல்கள். திருக்கரசைப் புராணம், திருக்கோணாசல வைபவம், கோணேசர் கல்வெட்டு, நரேந்திர சிங்கராசன் வசந்தன் சிந்து, வெருகல் சித்திர வேலாயுதசாமி காதல் என்னும் நூல்களை இவர் பதிப்பித்துள்ளார்.த.கு.மு.