உமட்டூர் கிழார் மகனார் பரங்கொற்றனார்
umaṭṭūr kiḻār makaṉār paraṅkoṟṟaṉār
சங்க காலப் புலவர்களுள் ஒருவர்.
சங்க காலப் புலவர்களுள் ஒருவர். பரங்கொற்றனார் என்பது இவரது இயற்பெயர். இவர் தந்தை பெயர் உமட்டூர் கிழார். தந்தையாரின் இயற்பெயர் மறைந்து உமட்டூருக்கு உரிமையுடையயவர் என்னும் பொருளில், உமட்டூர் கிழார் என்னும் சிறப்புப்பெயரே அவருக்குப் பெயராக வழங்கியது. பரங்கொற்றனாரின் பாடல் ஒன்று அகநானூற்றின் 69–ஆம் பாடலாக உள்ளது. பாலைத் திணையிலமைந்த இப்பாடல், பொருள் கருதிப் பிரிந்து சென்ற தலைவன் உரிய காலத்தில் வாராமல் நீட்டித்தான் என்று நினைத்து வருந்திய தலைவியைத் தோழி ஆற்றுவிக்கும் பாங்கில் அமைந்துள்ளது. இப்புலவர் வரலாற்றுணர்வுடையவர் என்பதனை, இப்பாடலில் அமைந்துள்ள இரு வரலாற்றுக் குறிப்புகளால் அறிய முடிகிறது. மோரிய அரசர்கள் பற்றியும், ஆய் என்னும் குறுநில மன்னன் பற்றியும் இதன்கண் குறிப்புகள் உள்ளன. நெடிய மலையிடத்தும் இயங்கத் தக்க தேர்களையுடைய மோரிய அரசர்கள் தம் தேர்களின் உருளைகள் தடையின்றிச் செல்லும் பொருட்டுப் பாறைகளைச் செதுக்கி வழி உண்டு பண்ணினர் என்றும், ஆய் என்பவன் பகைவர்களின் அரண்களை அழித்து அடிப்படுத்தி, அவர்களின் நன்கலன்களை அகப்படுத்திக் கொணர்ந்து தரும் வலிமைமிக்க மறவர்களின் தலைவன் என்றும் குறிப்பிட்டுள்ளார். தலைவியின் மார்பு கமழும் மணத்திற்கு உவமையாக, ஆயின் காட்டகத்தே மலர்ந்து விளங்கும் மலர்களின் மணத்தினைக் காட்டியிருப்பது நயமிக்கதாக உள்ளது.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 934)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ddpvyr2u/
தமிழ்“உமட்டூர் கிழார் மகனார் பரங்கொற்றனார்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/ddpvyr2u/APA
Oliyon Research. (2026). உமட்டூர் கிழார் மகனார் பரங்கொற்றனார். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ddpvyr2u/MLA
"உமட்டூர் கிழார் மகனார் பரங்கொற்றனார்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/ddpvyr2u/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment