உயர் குடியாட்சி
uyar kuṭiyāṭci
@@ART@@உயர் குடியாட்சி: பிளேட்டோ கூறிய உயர் குடியாட்சி:@@ பண்டைய கிரேக்க அரசியல் சிந்தனையாளரான பிளேட்டோ (கி.மு.
@@ART@@உயர் குடியாட்சி: பிளேட்டோ கூறிய உயர் குடியாட்சி:@@ பண்டைய கிரேக்க அரசியல் சிந்தனையாளரான பிளேட்டோ (கி.மு. 427–கி.மு. 347) தாம் எழுதியுள்ள (இலட்சியக்) குடியரசு (Republic) என்ற நூலில் இலட்சிய அரசாங்கத்தின் நோக்கம் நீதியைக் (Justice) காண்பதே என்ற கருத்தை மையமாக வைத்து, அரசின் தோற்றத்திற்குக் காரணம், இலட்சிய அரசில் ஆளுவதற்குரிய இளைஞர்களுக்கான கல்விப் பயிற்சித் திட்டம், பொதுவுடைமை முதலியவற்றைப் பற்றித் தமது கருத்துரைகளைக் கூறுகிறார்; பின்னர்த் தமது இலட்சிய அரசின் இயல்புகளை மனத்தில் வைத்துக் கொண்டே, தம் காலத்தில் கிரீசில் நடைமுறையில் இருந்துவந்த அரசாங்க வகைகளை மதிப்பிட்டுக் கூறுகிறார்.
அரசுகளும் அரசியலமைப்பு வகைகளும் மனிதப் பண்புகளைப் பொறுத்தே அமைகின்றன. உயர்குடியாளர் ஆட்சியின் தனித்தன்மையாவது அதில் மெய்யறிவுடைய ஞானிகளே ஆட்சி செய்வர் என்பதாம். ஞானிகள் நல்லியல்புகளெல்லாம் உடைய முழுப் பண்பாளர் ஆவர். ஏனையோர் ஓரளவே பண்புடையவராதலால் அவர்கள் ஆளுதற்கு உரியரல்லர். ஆளுவோரிடையே எந்தப் பண்பு தலைமையாக விளங்குகிறதோ, அந்தப் பண்பிற்கேற்பவே அதை அடிப்படையாக வைத்தே ஆட்சி வகையும் அமையும். காவலர்களாக இருந்து (Guardians) ஆட்சி அதிகாரத்தைக் கையாண்ட மெய்யறிவாளர்கள் (Philosophers) நீதி அல்லது முறைமை (Justice) என்ற நோக்கத்தை நிலைநிறுத்தும் பொருட்டே கையாண்டனர். இதுவே இலட்சிய அரசில் காணப்படும் உயர்குடியாளராட்சி ஆகும். பின்னர், அறிவு வளர்ச்சியில் தாழ்ந்த வீரர்களாட்சி (Timocracy) தோன்றிற்று. இவர்கள் தங்களுக்குப் புகழ் தேடும் நோக்கத்தோடு அதிகாரத்தைக் கையாண்டனர். மூன்றாவது, தாழ்ந்த ஆட்சி வகையாகிய செல்வச் சிறுகுடியினராட்சி (Oligarchy) தனியார் சொத்துரிமை முறையினின்றும் தோன்றியதாகையால், இவர்கள் சொத்துத் தகுதியை ஆதாரமாகக் கொண்டு அரசியலதிகாரத்தைக் கையாளுகின்றனர். இது பல குறைபாடுகளை உடையது. நான்காவது, தாழ்ந்தவகையே குடியாட்சி (Democracy) ஆகும். செல்வச் சிறு குடி- யினருடைய ஆட்சியிலிருந்த நிலைமையை இவ்வாட்சியினர் மாற்றி, மக்களுடைய சுதந்திரம் அல்லது உரிமையைக் (Freedom or Liberty) காப்பாற்றும் பொருட்டு அதிகாரத்தைக் கையாளுகின்றனர். இதற்கடுத்த நிலையிலுள்ளதும் எல்லாவற்றுக்கும் மிகத் தாழ்ந்த நிலையிலுள்ளதுமாகிய ஆட்சி வகை சருவாதிகாரம் (Tyranny) ஆகும். இது ஆட்சியாளரின் தன்னலத்துக்காகவே நடைபெறுவதாகும். பிளேட்டோ இவ்வாறு உயர் குடியாட்சி (Best Government) என்பது மெய்யறிவாளருடைய ஆட்சி என்று கூறுகிறார்.
அரிசுட்டாட்டில் வகுத்த அரசியலமைப்பு வகைகள்: (அரிசுடாட்டில், கி.மு. 384—கி.மு. 322)
அரிசுட்டாட்டிலின் கருத்துப்படி, இறைமை அதிகாரம் தங்கி இருக்கும் அரசியலதிகாரிகளின் எண்ணிக்கைக்குத் தக்கவாறும், அரசாங்கச் செயல்கள் எந்த நோக்கத்துக்காகக் கையாளப்படுகின்றனவோ அந்த நோக்கங்களுக்குத் தக்கவாறும் அரசியலமைப்புகள் வகைப்படுத்தப்படுகின்றன. அரசாங்கத்தின் நோக்கமே அதைத் தூய்மையானது என்றும் (Pure Form), தூய்மையற்ற மாசுபட்ட அல்லது சிதைந்த வகையானது என்றும் (Corrupt Form) பிரித்து அறிவதற்கு அளவுகோலாகும். ஓர் அரசாங்கம் தன்னுடைய எல்லா மக்களுடைய முழு வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு செயற்படுமானால் அது தூயவகையானதென்றும், ஆளுவோருடைய நலனை மட்டும் கருத்தில் கொண்டு செயற்படுமானால், அது தூய்மையற்ற வகையைச் சேர்ந்தது என்றும் ஒரு பொது விதியை வகுத்துக் கொள்ளலாம்.
ஒவ்வொரு சமுதாயத்திலும் ஆட்சித் தலைமையைக் கைப்பற்றுவதற்குச் (1) சுதந்திர அல்லது உரிமைக் கோட்பாடு (Principle of Freedom), (2) உடைமை அல்லது சொத்துக் கோட்பாடு (Principle of Wealth), (3) தகுதி அல்லது பண்புக் கோட்பாடு (Principle of Virture), (4) உயர்குடிப்பிறப்புக் கோட்பாடு (Principle of Good Birth) முதலிய 4 கோட்பாடுகன் போட்டியிடுகின்றன. சுதந்திர, சமத்துவக் கோட்பாட்டினடிப்படையில் அரசாங்க அதிகாரம் கையாளப்படுமாயின் அவ்வரசியலமைப்பு குடியாட்சி வகை ஆகும். அரசாங்க அதிகாரப் பகிர்வு செல்வத்தை ஆதாரமாகப் பெற்றிருந்தால் அது செல்வச் சிறுகுடியாட்சி (Oligarchy) ஆகும். அரசியலதிகாரம் பண்பு அல்லது தகுதி (Virtue or Ability) என்ற கோட்பாட்டினடிப்படையில் கையாளப்படுமாயின் அது உயர்குடிப்பிறந்தோராட்சி (Aristocracy) ஆகும்.
அரிசுட்டாட்டில் சமுதாயச் சூழ்நிலைகளை அளவுகோலாகக் கொண்டு, அவற்றிற்கேற்பப் பல்வேறு அரசியலமைப்பு வகைகளை மிகச் சிறந்த வகை (Excellent Form) என்ற நிலையிலிருந்து படிப்படியாகத் தாழ்ந்த வகைகள் என்ற நிலையில் பாகுபடுத்திக் கூறுகிறார்.
:: கருத்தளவுக்கு ஒத்த முடியாட்சி (Ideal Royalty).
:: கலப்பில்லாத உயர்குடியாட்சி (Pure Aristocracy); இது சுதந்திர, சொத்துக் கோட்பாடுகளோடு அமையாமல் தகுதி என்ற கோட்பாட்டின் மீது மட்டும் அமைந்தது.
:: கலவையான உயர்குடி ஆட்சி (Mixed Aristocracy). இது சொத்து, சுதந்திரம், தகுதி ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்தது.
:: மிதமான குடியாட்சி (Polity).
:: மிதமான போக்குடைய செல்வராட்சி (Moderate Oligarchy).
:: தீவிர குடியாட்சி (Extreme Democracy).
:: தீவிரமான செல்வராட்சி (Extreme Oligarchy).
:: சர்வாதிகார ஆட்சி (Tryanny).
உயர்குடியினராட்சி திறமை அல்லது தகுதி என்ற கொள்கையினடிப்படையில் அமைந்துள்ளது. ஆயினும் திறமைமிக்க குடிமக்கள் ஆளும்போது ஆட்சியில் தாங்கள் பங்கு பெறுவதற்காகச் செல்வம் மட்டுமே மிகுந்த வகுப்பார் அதில் தலையிடுவாராயின், அப்போது உயர்குடியினராட்சி (Aristocracy) செல்வச் சிறுகுடியாட்சியாக (Oligarchy) மாறும். இவ்வாறு அரிசுட்டாட்டில் உயர்குடியாட்சி புரட்சிக்கு உள்ளாகும் காரணத்தைக் கூறுகிறார். இதைத் தடுப்பதற்குரிய பாதுகாப்பு, ஆட்சிச் சலுகைகளைப் பெற்றவர்களிடையே குடியாட்சிச் சமத்துவக் கோட்பாடு உறுதியாகச் செயற்படும்படி செய்தலே ஆகும்.
அரசியல் வகைகளை அரிசுட்டாட்டில் எடுத்துக்காட்டுவதற்குக் கையாண்ட அளவுகோல்கள் அரசாங்கத்தின் நோக்கத்தைச் சுட்டிக் காட்டுகின்றபடியால் அவை பாராட்டப்படுதற்கு உரியவையே ஆகும்.
துணை நூல்கள்
Grube, G.M.A., Plato's Thought, London, 1935.
Allan, D.J., The Philosophy of Aristotle, London, 1952.
Barker Ernest, The Political Thought of Plato and Aristotle, London, 1906.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 958)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ddde59d7/
தமிழ்“உயர் குடியாட்சி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/ddde59d7/APA
Oliyon Research. (2026). உயர் குடியாட்சி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ddde59d7/MLA
"உயர் குடியாட்சி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/ddde59d7/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment