சீரகம்
cīrakam
இதன் தாவரவியல் பெயர் குமினம் சிமினம் (Cuminum cyminum).
இதன் தாவரவியல் பெயர் குமினம் சிமினம் (Cuminum cyminum). சீரகம் எப்பியேசி எனப்படும் இரு வித்திலைக் குடும்பத்தைச் சேர்ந்தது. இது ஓராண்டு வாழும் குறுஞ்செடி வகையினது. இத்தாவரம் இந்தியாவில் பரவலாகப் பயிரிடப்படுகிறது; பஞ்சாப், உத்தரப் பிரதேசம், கேரளா ஆகிய பகுதிகளில் மிகுதியாக. வளர்க்கப்படுகிறது. ஏறக் குறைய, 80—100 செ.மீ. உயரம் வரை வளரும் தன்மையுடையது. இதன் தனி இலைகள் இரண்டு அல்லது மூன்று முறை பிளவு பட்டும், அதற்கு மேற்பட்ட பிளவுகள் இழை போன்றும் இருக்கும். இலைக் காம்பு குட்டையானது. இலையடி உறை போன்றது. இதன் கனியைத் தவிர, பிற பகுதிகள் பளபளப்பான சுரப்பிகளைக் கொண்டுள்ளன. ஆகவே, இத்தாவரத்தின் அனைத்துப் பகுதிகளும் ஒரு வித நறுமணத்துடன் நிகழ்கின்றன. சிறிய ஆணி வேர்த் தொகுதி, பல சல்லி வேர்களைக் கொண்டுள்ளது.
மஞ்சரி, கூட்டுக் குடை மஞ்சரி (compound umbel) வகையைச் சார்ந்தது. மஞ்சரியில் பூக்கள் வட்ட அமைவுடன் நெருக்கமாக அமைந்துள்ளன. மலர்கள் இரு பால் (bisexual) வகையின. புல்லிகள் ஐந்தும் இணைந்து, தொடு இதழ் அமைவில் பசுமை நிறத்துடன் உள்ளன. ஐந்து அல்லிகள் உள்ளன. ஐந்து மகரந்தங்கள்; தனித் தனியானவை; இரண்டு மகரந்தப் பைகள்; மகரந்தங்கள் நீளவாக்கில் வெடிப்பவை. கீழ் மட்டச் சூலகப் பை; இரண்டு சூலக இலைகள் இணைந்திருக்கும். ஒவ்வோர் அறையும் ஒரு தொங்கும் சூலைக் கொண்டுள்ளது.
கனி கிரிமோகார்ப் (cremocarp) வகையைச் சார்ந்தது. ஏறத்தாழ 6 மி.மீ. நீளமுடையது. காண்பதற்குச் சீமைச் சோம்பைப் போலத் தோற்றமளிக்கும். ஆனால், சீமைச் சோம்பைப் போலல்லாமல், நேராக இருக்கும். மெல்லிய, குட்டையான மெல்லிழை போன்ற வளரிகளால், கனியின் பரப்புகள் நெருக்கமாகப் போர்த்தப்பட்டிருக்கும். சீரகத்தில், 2.5—4% அளவு எளிதில் ஆவியாகக் கூடிய எண்ணெய் உள்ளது. இதனால், சீரகம் நறுமணப் பொருளாகப் பயனாகிறது. இது ஒரு சம்பாரப் (condiment) பொருளாகும்.
பயிரிடல். மித தட்ப வெப்பச் சூழ்நிலையில் சீரகம் நன்கு வளரும். தோட்டங்களின் சிறிய பகுதிகளில் இதைப் பயிரிடுவர். வயல்களில் பயிரிடுவதில்லை. இதற்கு முக்கிய காரணம் இதன் பராமரிப்பு மிகவும் கடினமானது. இப்பயிரை இரு பருவத்தில், பயிர் செய்வதுண்டு. தென் மேற்குப் பருவ மழைக்கு முன்போ, வட கிழக்குப் பருவ மழைக்குப் பிறகோ, பயிர் செய்வர். ஓர் ஏக்கர் நிலத்திற்கு 10-15 கி.கி. விதைகள் தேவைப்படும். பூஞ்சைகள் செடியைப் பாதிப்பதுண்டு.
<!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் ஆரம்பத்தில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> —வே, வெங்கடேசலு நூலோதி. T. E. Wallis, Text Book of Pharmacognosy, J and A Churchill Ltd., London, 1967.
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 426)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dcwbjwx6/
தமிழ்“சீரகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/dcwbjwx6/APA
Oliyon Research. (2026). சீரகம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/dcwbjwx6/MLA
"சீரகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/dcwbjwx6/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment