இராவணன்
irāvaṇaṉ
இராமாயணத்தில் காப்பியத் தலைவனாகிய இராமனுக்குச் சிறந்த எதிர்நாயகனாக விளங்குபவன்.
இராமாயணத்தில் காப்பியத் தலைவனாகிய இராமனுக்குச் சிறந்த எதிர்நாயகனாக விளங்குபவன். இராவணன் என்ற வடசொல்லுக்குக் கதறியவன் என்பது பொருளாகும். இனி இராவணன் என்பதைத் தமிழ்ச் சொல்லாகக் கொண்டு ‘கரிய நிறத்தவன்’ என்றுங் கொள்வர்.
இராவணன் பிரமன் வழிவந்த விசிரவசுவிற்குக் கேகசியினிடம் பிறந்தவன்; பத்துத் தலைகளைக் கொண்டிருந்தமையால் தசக்கிரீவன் என்றும் தசமுகன் என்றும் அழைக்கப் பெற்றான். இவன் மனைவி பெயர் மண்டோதரி. இவனுக்கு மேகநாதன் என்று அழைக்கப்படும் இந்திரசித்து, அதிகாயன், அட்சயகுமாரன் ஆகிய பிள்ளைகள் உண்டு. இவனுக்குத் தம்பியராகப் பிறந்தவர்கள் கும்பகருணனும் வீடணனும் ஆவர்; தங்கை சூர்ப்பணகையாவாள்.
இராவணன் வீணைக் கொடியுடையவனாய்க் கடல்சூழ்ந்த இலங்கையைப் பெருமிதத்துடன் ஆண்டவன்; தன் பேராற்றலால் திக்குவிசயம் செய்தவன்; மூன்று உலகங்களையும் அடிபணிய வைத்தவன். வாழ்வின் உறுதிப் பொருள்களாகிய அறம், பொருள், இன்பம், வீடு ஆகியவற்றுள் அறத்தினை இராமனும், பொருள் இன்பங்களை இராவணனும் தங்கள் குறிக்கோள்களாகக் கொண்டு விளங்கியவர்கள் என்பர்.
இராவணன் கடுந்தவம் புரிந்து நெடுங்காலம் வாழும் வரவலிமை பெற்றவன். ‘முக்கோடி வாழ்நாளும் முயன்றுடைய பெருந்தவமும் முதல்வன் முன்னாள், எக்கோடியாராலும் வெல்லப்படா எனக் கொடுத்த வரமும் ஏனைத் திக்கோடு முலகனைத்துஞ் செருக்கடந்த புயவலியும்’ (கம்பராமா–யுத்தகாண்–இராவணன் வதைப்: 196) உடையவன் போற்றப் பெறுபவன். தவத்தால் கிட்டிய வர வலிமையால் இராவணன் தன் நாட்டைப் பொன் கொழிக்கச் செய்தும் தேவர்களையடக்கியும் நின்ற திறத்தினைக் கம்பன், ‘மரம டங்கலும் கற்பகம் மனையெலாங் கனகம், அரமடந்தையர் சிலதியர் அரக்கியர்க் கமரர், உரமடங்கிவந் துழையராய் உழல்குவர் ஒருவர், தரமடங்குவதன்றிது தவஞ்செய்த தவமால்’ (சுந்தரகாண்; ஊர்தேடு. 10) என்ற கவிக் கூற்றால் புலப்படுத்துகிறார். உலகத்தில் பெரு வீரர்க்கு இருக்க வேண்டிய தன்மானவுணர்வு உடையவன்.
இராவணன் சிவபிரானுக்கு அடியவனாகச் சிவ பூசை புரிந்த சிறப்புடையவன்; எனினும், ஒருமுறை தனக்குப் பல மேன்மைகள் தந்தருளிய சிவனது திருக்கயிலை மலையைப் பெயர்த்தெடுக்க முனைகிறான். அப்போது நந்திகேசுவரர் கூறிய அறிவுரையையும் அவன் பொருட்படுத்தவில்லை. அவரது சாபத்திற்கு ஆளாகிய நிலையில் கயிலையைப் பெயர்க்கும்போது உமையம்மையுடன் அம்மலையில் வீற்றிருந்த சிவன் தன் கால்விரல் நுனியால் சிறிதே அழுத்துகிறான். இராவணன் அதனால் அடர்ப்புண்டு தவிர்த்துப் புலம்புகிறான். அப்போது வேளைக்கேற்ற மதியுடன் தன் தலைகளுள் ஒன்றனையெடுத்து வீணைக் குடுக்கையாகவும் தன் நரம்புகளையே வீணை நரம்பாகவும் ஆக்கிக் கொண்டு சிவனுக்கு உவப்பான சாம கானம் வாசித்துக் கருணைக்கு ஏங்குகிறான். அவனது இசைக்கு இரங்கிய சிவன் அவனை அடர்த்தலினின்றும் விடுவிக்கிறான் என்பது புராணக் குறிப்பாகும். இந்தக் குறிப்பின் சிறப்பினையுணர்ந்த சம்பந்தர் சிறப்பாகவும், அப்பரடிகள் ஓரளவும் தம் தேவாரத்துள் ‘இராவணனுக்கு அருளிய சிவன் கருணை’யைத் தக்காங்குப் போற்றிச் செல்கின்றனர்; பிற சைவநூல்களிலும் இந்தக் குறிப்பினை ஏற்புடைய இடங்களில் எடுத்தாண்டுள்ளனர். தவறு செய்து திருந்துபவர்களுக்குப் படிப்பினையாக இது இருக்கத்தக்கது என்ற உணர்வினால், சமயச் சான்றோர்கள் சைவத் திருக்கோயில் பெருந்திருவிழாவில் ‘கயிலாச வாகனம்’ என்பதற்கும் இடந்தந்துள்ளனர் எனலாம்.
தெய்வநலப் பாங்குடைய சாமகானத்தின் பெருமை வடமொழி நூல்களில் பரக்கப் பேசப்படுகிறது. இராகங்களைச் சாமவேதத்தில் பொருத்திப் பாடும் முறைமையை யறிவிக்கும் ‘இராவணீயம்’ எனப் பெயரிய நூலினைக் கதிரைவேற்பிள்ளையின் ‘தமிழ் மொழியகராதி’ குறிப்பிடுகிறது.
இராவணன் காரணமாகக் கந்தருவர்களும் முனிவர்களும் அரமங்கையர்களும் மிகவும் துன்புற்றனர் என்பது வான்மீகியின் கூற்று. அகத்தியர் இராவணனைக் கந்தருவத்தால் பிணித்துத் தென்னாட்டில் புகாதவாறு செய்தார் என்ற தமிழ்க் கதையும் தமிழர்களிடையே வழக்கில் இருந்து வருகிறது. ‘தென்னவற் பெயரிய துன்னருந் துப்பிற்றொன்முது கடவுட் பின்னர் மேய, வரைத்தாழருவிப் பொருப்பிற் பொருந’ (மதுரைக்காஞ்சி – 40-42) என்பதற்கு நச்சினார்க்கினியர், ‘இராவணனைத் தமிழ்நாட்டை யாளாதபடி போக்கின கிட்டுதற்கரிய வலியினையுடைய பழமை முதிர்ந்த அகத்தியன்’ என்று விளக்கங் கூறுவர். தொல்காப்பியப் பாயிரவுரையில் நச்சினார்க்கினியரே ‘பொதியிலின் கண்ணிருந்து இராவணனைக் கந்தருவத்தாற் பிணித்து, இராக்கதரை ஆண்டு இயங்காமை விலக்கி’ என்றும் கூறுவது இயைபுடன் சிந்திக்கத்தகும் என்பர். இதனால், இராவணன் தென்னாட்டினருக்குப் பகைஞனாதல் உணரலாம் என்பது மகாவித்துவான் இரா. இராகவையங்கார் கருத்தாகும். அய்யங்கார், ‘மெய் சொல்லா விராவணனை மேலோடி ஈடழித்துப், பொய்சொல்லா துயிர் போனான் புள்ளிருக்கு வேளூரே’ எனத் தேவாரத்துள் தெய்வத் தமிழ்ப் பெரியார் இவனைப் பழித்தல் காணலாம். இவனுட் பட்டாரை ‘மாயஞ் செய்வாளவுணர்’ (சிலப். வேட்டுவ.) என்ப. இத்தீய குணங்கள் பழந்தமிழர்க் கியையாமை நூல்களிற் கண்டு கொள்க. அகத்தியர் கந்தருவத்தாற் பிணித்தார் என்பது இசையாற் பிணித்தார் என்றவாறாம். தீங்கிழைக்கும் தீயவுள்ளத்தானாகிய இராவணன் அகத்தியர் முற்போந்து ஒரு கற்பாறையில் தங்கியபோது, அகத்தியர் அக்கல்லுருகப் பாடி அதனைக் குழைவித்து, அக்குழைந்த கற்சேற்றிலே அவன் உடற்பொறை அமிழும்படி செய்தவளவில், தம் இசையை நிறுத்தக் கற்பாறை இறுகி அவன் பிணிப்புண்டானாகப், பின் அகத்தியரை இரந்து மீண்டும் கல்லுருகப் பாடப் பெற்று உருகிய நிலையிலே புறம்போந்து வணங்கிப் போயினான் என்பர் என்று தம் ‘தமிழ் வரலாறு’ (அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பதிப்பு – 1952) என்னும் நூலில் குறிப்பிட்டுச் செல்கிறார். அகத்தியரிடம் இராவணன் பெற்ற தோல்விப் படிப்பினை அவன்தன் இசைக்கலைச் செருக்கால் விளைந்த விளைவாகும் எனலாம்.
இராவணன் தொடர்பாக ‘இராவணாசுரம்’ என்ற பெயருள்ள ஒருவகை வீணையும் (பரத. ஒழிபியல். 15), ‘இராவணாத்தம்’ என்ற பெயருள்ள ஒருவகைச் சிறு வீணையும் (தேங்காய் ஓட்டினாலும் நரம்புகளாலும் உருவாக்கப் பெற்றது) தமிழ்நாட்டில் வழக்கிற்கு வந்துள்ளன என்பர். இசைக்கலையில் சிறப்பாக, வீணைவாசிக்குங் கலையில் பெருந்தேர்ச்சி பெற்றிருந்தவன் இராவணன். இவனது கலைத் திறனை வழிவழி நினைவு கூரும் வகையில் இசைப் பயிற்சியில் தேர்ந்தவரை இன்றும் ‘அசுர சாதகம்’ செய்தவராகக் கூறி வருகின்றனர். இவ்வாறாக இசைப்புலமையும் புகழும் வாய்ந்த இராவணனது வீழ்ச்சியைக் ‘கலைஞன் வீழ்ச்சி’யாகவே பலர் கருதுகின்றனர்.
நிரம்பிய கல்வியும், ஆயிரம் மறைப்பொருளுணர்ந்த அறிவு வித்தகமும், இசைத் தேர்ச்சியும் பேராற்றலும் கொண்டிருந்த இராவணன், இராமன் மனைவி சீதையைத் தன் தங்கை சூர்ப்பணகையின் தூண்டுதவால் வஞ்சகமாகக் கவர்ந்து செல்கிறான். இதனை நடுவழியில் அறிந்துகொண்ட முதிய கழுகரசன் சடாயு சீதையைக் காப்பாற்ற இராவணனை இடைமறிக்கிறான். ஆனால், இராவணனோ அவனது சிறகினை வெட்டிக்கொன்று வீழ்த்துகிறான். கவர்ந்து சென்ற இராவணன் சீதையை அசோசுவனத்தில் அரக்கியர் புடைசூழச் சிறை வைக்கிறான். கற்பின் செல்வியாகிய சீதையை விடுவிக்குமாறு வீடணன் முதலியோர் கூறுவதைச் சிறிதும் பொருட்படுத்தவில்லை. ‘உடன்பிறந்தே கொல்லும் வியாதி’ போன்ற சூர்ப்பணகையின் சொல்லால் சீதையின் வனப்பில் மயங்கிய இராவணன் யார் சொல்லையுமே செவிமடுத்துச் சிந்திக்க நினைக்கவில்லை. சீதையைக் கவர்வதற்கு உடந்தையாக மாட்டேன் என்று சொன்ன மாரீசனின் மனத்தை மாற்றி, அவனை மாயமானாகச் சீதைமுன் உலவவிட்ட தந்திரசாலி இராவணன். ‘மூர்க்கனும் முதலையும் கொண்டது விடா’ என்ற நினைப்பில் உழலும் அவனை யாரும் அறிவுரை கூறித் திருத்த இயலவில்லை. திருந்துதற்குரிய நல்லூழும் அவனுக்கும் இல்லை. ஒருத்தியின் விருப்பமில்லாமல் அவளை வலியப் புணர நினைப்பின் இராவணன் தலை சுக்குநூறாக வெடிக்கும் என்பது வேதவதியின் சாபம். அவ்வாறான எச்சரிக்கை இல்லாதிருப்பின் சீதையைத்தன் இச்சைக்குட்படுத்தி மேலும் பல தீங்குகளுக்கு ஆளாகியிருப்பான் என்பதும் ஈண்டு நினைக்கத்தகும்.
பெருவீரனாகவும் கல்வி கேள்வியறிவு கொண்டவனாகவும் விளங்கிய இராவணன், தன் ஆணவத்தால் தன் வலியை மாற்றார் வலிமையுடன் ஒப்பிட்டுப் பார்த்து, நிலைமையைப் புரிந்து கொள்ளத் தவறிவிடுகிறான். கும்பகருணன் தன்குல அழிவினின்றும் காப்பாற்ற எவ்வளவோ அறிவுரை கூறுகிறான். அவனை வீடணனுடன் சார்த்திக் கண்டவாறு ஏசுகிறான். கும்பகருணன் அவனுக்கு அறிவுரை கூறுகையில், காலினிற் கருங்கடல் கடந்த காற்று, போலவன் குரங்குள சீதை போகிலள், வாலியை உரங்கிழித்தேக வல்லன, கோலுள யாமுளேம் குறையுண் டாகுமே?, (யுத்த, கும்பவதைப்: 87) என்று குறிப்பிடுகிறான். தன் வலிமையையும் மாற்றான் வலிமையையும் சீர் தூக்கிப் பாராமையாலும் அறவழியிற் செல்லாமையாலும் இராவணனைச் சுட்டி, ‘கெடுத்தனை நின்பெருங் கிளையும் நின்மையும்’ (யுத்த, கும்பவதைப்: 83) என நொந்து இடித்துரைக்கிறான். எனினும், இராவணன் அவனது அறிவுரையை ஏற்கவில்லை. அதனையுணர்ந்த கும்பகருணன் செய்ந்நன்றிக் கடனைத் தீர்க்க இராம் இலக்குவரை எதிர்த்து வீரப் போரிடத் துணிகிறான். அவ்வேளையில், ‘இற்றைநாள் வரைமுதல் யான்முன் செய்தன, குற்றமும் உளவெனிற் பொறுத்தி கொற்றவ, அற்றதால் முகத்தினில் விழித்தல் ஆரிய, பெற்றனன் விடை ......’ (யுத்த. கும்ப. வதைப்: 97) எனக் கூறித் தன் அண்ணனிடம் பிரியாவிடை பெறுகிறான். அந்நிலையில் இராவணன் தன் தம்பி மீது கொண்ட பாசப்பிணைப்பு வெளிப்படுகிறது. கலங்காத நெஞ்சினனாகிய அவன் கண்ணீர் விட்டுக் கலங்கி நிற்பதை, ‘அவ்வழி இராவணன் அனைத்து நாட்டமும், செவ்வழிக் குருதி நீரொடும் தேக்கினான்’ (யுத்த கும்ப. வதைப்: 99) என விவரிக்கிறார் கம்பர். எதற்கும் இளகாத இலங்கை வேந்தன் பெருங்கலக்கமுற்று நிற்கிற இந்த நிகழ்ச்சி, அவனது அன்பழுத்தந்திற்கு எடுத்துக்காட்டாக அமையும்.
இராமனை எதிர்த்துப் போரிட்டு வெற்றி கொள்ள இயலாது என்பதனைச் சிந்தித்துப் புரிந்து கொள்ள எத்தனையோ வாய்ப்புகள் ஏற்பட்டன. பெரு வீரனாகிய தன்னையே வலிமையில் வென்றவன் குரங்கினத்தரசன் வாலி என்பது இராவணனுக்கு நன்கு நினைவில் இருக்க வேண்டியதாகும். அத்தகைய வாலியையும் கொன்று அழித்தவன் அயோத்தி இராமன் என்பதனைக் கேள்விப்பட்டும், இராவணன் அவன் வலிமையைப் பொருட்படுத்தவில்லை; இகழ்ந்து ஒதுக்குதற்குரிய எளிய மானுடனாகவே கருதுகிறான்.
இராம தூதுவனாகிய அனுமன் இலங்கைக்குச் சென்று எத்தனையோ வகையில் தன் பேராற்றலைப் புலப்படுத்துகிறான். தூதுவனென்றும் பாராமல் அவனது வாலிற்கு வைத்த தீ, தனக்கு முன்னறிவிப்பாக இலங்கைக்கு வைத்த தீயாக மாறிவிடுதலைக் காண்கிறான். இராவணன் கண்டும் தன் மாற்றார் வலிமையைச் சீர்தூக்கிப் பார்க்குமாறு அவனது ஆணவம் இடங்கொடுக்கவில்லை.
மாயப்போர் புரிதலிலே வல்லவனாகிய இந்திரசித்தினைத் தன் மகனாகக் கொண்ட நிலையிலே இராவணனுக்குத் தன் சார்பில் மிகுந்த நம்பிக்கையிருந்தது. ‘வில்லாளரை எண்ணில் விரற்கு முன்னிற்கும் வீரன்’ எனக் கம்பனால் பாராட்டுப் பெறும் மேகநாதனாகிய இந்திரசித்து, மந்திரப் படலத்தில் இராவணன்முன் காட்சியளிக்கிறான். ஆங்கு, வீடணனைத் தவிர, போர்மாட்சியால் அனுபவம் மிக்க சேனைத் தலைவர் முதல் இந்திரசித்து ஈறாக, இராம இலக்குவர்களைக் குறைத்தே மதிப்பிடுகின்றனர். அன்று வரையில் போரிலே வெற்றியைத் தவிரத் தோல்வியைக் கண்டறியாதவர்களாதலின், தங்களைப் பற்றிய ஆணவம் தலைக்கேறித் தம் மன்னனுக்கு நல்வழி காட்டத் தவறிவிடுகின்றனர். இதுவும் இராவணனது வீழ்ச்சியை உந்திச் செலுத்துகிறது.
இராவணனுடைய பகைவர்களே அவனது பெரு வீரத்தைக் கண்டு வியந்து பாராட்டுகின்றனர். இந்திரப் பெரும்பதம் இழக்கும் இராவணனைக் கண்டு, அளகாபுரியில் ஒளிந்து வாழும் குபேரன், எல்லாருடைய உயிரையுங் கவரும் அறக்கடவுளாகிய இயமன், இருளைப் போக்குவதற்குரியவனாகிய அருணன், கடல் தெய்வமாகிய வருணன் முதலியோர் அஞ்சியவர்களாய் நிலை தடுமாறி வாழ்கின்றனர். இந்தச் செய்தியை இராமனிடம் வீடணன் எடுத்துக் கூறி, இராவணனது பேராற்றலைப் புலப்படுத்து- கிறான். அனுமன் வாயிலாகவும் இராவணன் பெருமையும் பேராற்றலும் புலப்படுகின்றன.
போர்க்களத்தில் படைகளற்று நிலங்கவிந்து பார்க்கிற சூழலில், இராவணனை ‘இன்று போய்ப் போர்க்கு நாளைவா’ எனக் கூறுகிறான் இராமன். அப்போது இராவணன் தக்க படிப்பினையைப் பெற்றுத் திருந்தியிருக்கலாம். ஆனால், மானவுணர்வு போர் வெறியையே மேலும் தூண்டி நிற்கிறது. இத்தகைய இலங்கைவேந்தன் போர்க்களத்தில் மாண்டு மண்மேல் கிடக்கிறான். அவனை இராமன் ஊன்றிப் பார்க்கையில் முதுகில் புண்பட்டுக் கிடப்பது தெரிகிறது. உடனே தன் வீரத்தைத் தானே பழித்துக் கொண்டு, “போர்ப்புறங் கொடுத்தோர் போன்ற ஆண்தொழிலோரில் பெற்ற வெற்றியும் அவத்தம்” என்று நொந்து கொள்கிறான். இதனைக் கேட்ட வீடணன் தாங்காது இராவணன் பெருவீர மாட்சியினை எடுத்து இயம்புகிறான். ஐயனே! கார்த்தவீரியனும் வாலியும் இராவணனை வென்று நின்றமை அவர்கள்தம் சொந்த வலிமையாலன்று; தேவர்களிட்ட சாபத்தால் விளைந்த பயனேயாகும். இனி இங்கு அவன் வீழ்ந்து கிடப்பதற்கும் காரணம் பிறன் மனை நயந்த பேதைமையாலாகும். அதற்கேற்பப் பொறையே வடிவமான நீயும் வெகுண்டனை, ஆதலின் அவனது அழிவு நெருங்கியது. யாராலும் வெல்லமுடியாத அவன் ஒரு காலத்தில் திக்கு யானைகளை வென்று அவற்றின் கொம்புகளை மார்பில் ஏற்று ஒடித்துக் கொண்டவன்; மீண்டும் அவற்றைக் களைந்தெறியாமல் மார்பிற்கு வீர அணிகலமாகக் கொண்டிருந்தான். மேலும், இப்போது அனுமன் குத்திய குத்துகளும் நீ எய்த அம்புகளும் அவற்றை மார்பினூடே உருவிச் செலுத்தின. அதுவே அவனது முதுகில் புண் உண்டாதற்குக் காரணமாகும் எனத் தெளிவுறுத்துகிறான்.
இந்திரன் கடுந்தவமும் சீதையின் கற்புத்திறமும் இராவணனது வீழ்ச்சிக்கு வழிகோலிச் செல்கின்றன. சீதையின் எழிலுருவினைச் சூர்ப்பணகை வருணிக்கையில் அதனைக் கேட்டவுடனே தன் இதயமாம் சிறையில் அவளை வைத்துக் கொள்கிறான்; இதனை மயிலுடைச் சாயலாளை வஞ்சியா முன்னம் நீண்ட எயிலுடை இலங்கைநாதன் இதயமாஞ் சிறையில் வைத்தான், (ஆரணிய. மாரீசன் வதைப். 85) எனக் கம்பன் சித்திரிக்கிறார். அவ்வாறு நெஞ்சச் சிறையில் சிக்கிய சீதையை அசோகவனத்திலிருந்து மட்டும் விடுவித்தால் போதாது. எனவே, இராவணனது உடலை இராமனின் அம்புகள் துளைத்து நிற்குஞ்சூழலை உருவாக்கி, ‘வெள்ளெருக்கஞ் சடை முடியான் வெற்பெடுத்த திருமேனி மேலுங் கீழும், எள்ளிருக்கு மிடனின்றி உயிரிருக்கும் இடன்நாடி யிழைத்தவாறோ, கள்ளிருக்கும் மலர்க்கூந்தற் சானகியை மனச்சிறையில் கரந்த காதல், உள்ளிருக்கு மெனக் கருதி யுடல்புகுந்து தடவியதோ ஒருவன் வாளி’ (இராவணன் வதைப். 237) என மண்டோதரி வாக்கால் சீதையை இராவணன் நெஞ்சத்தினின்றும் விடுவிக்கிறார் கம்பன்.
இராவணனது வரலாற்றில் அவன் தங்கை சூர்ப்பணகையும் திருப்புமையத்தை ஏற்படுத்தி விடுகிறாள். தன் தங்கையின் மூக்கினை அரியக் காரணமாக இருந்த இராம இலக்குவர்களைப் பழிவாங்கத் துடிக்கும் மானவுணர்வு இராவணனது நெஞ்சத்தில் படிந்து நிற்கிறது. சூர்ப்பணகையின் பேச்சால் சீதையின் அழகைப் பற்றித் தெரிந்து கொண்டதும் அவன் பழிவாங்கும் உணர்விற்கு அது ஒரு பற்றுக்கோடாக அமைந்துவிடுகிறது.
பிறன் மனை நயந்த பழிகாரணமாக இராவணனுடைய பெருமைகளெல்லாம் வீழ்ச்சியுற்றன எனினும், கம்பன் இராவணனது வீழ்ச்சியிலும் ஒருவகை ஏற்றத்தினையளிக்க முந்துகிறார். போர்க்களத்தில் பரம்பொருளாகிய இராமனுடன் போரிட்டு மீண்ட இராவணன், ‘நாசம் வந்துற்ற காலை நல்லதோர் பகையைப் பெற்றேன்’ என்று கூறுவதால் அவன் பெருவீரத்திற்கும் பிடிவாதத்திற்குமிடையே அப்போதைய அறிவுஒளி-விவேகம்-பளிச்சிடுதலைக் காணலாம்; இதுவே அவனை ஓர் அவலத்தலைவன் (Tragic Hero) நிலைக்கு உயர்த்துகிறதென்பர்.
இராவணனை வான்மீகி கண்டு காட்டும் போக்கு வேறு; கம்பன் காட்டும் போக்கு வேறு. சமணர் முதலியோர் தம் இராமாயணங்களில் இராவணனைக் காட்டும் போக்கு வேறு. சமண இராமாயணங்களுள் சிறப்பினதாகிய பம்பராமாயனம் பொதுவாக வான்மீகி இராமாயணத்தை ஓரளவு ஒத்திருப்பினும் பல வேறுபாடுகள் கொண்டுள்ளது. தசரதன், சனகன், அனுமன் முதலியவர்களுடன் இராவணனும் சமண சமயத்தினனாகச் சித்திரிக்கப்படுகிறான். அனுமன் சுக்கிரீவன் முதலானோர் குரங்குக் கொடியுடையவர்களே தவிரக் குரங்கினத்தைச் சேர்ந்தவர்களல்லர். அவர்களும் இராவணனும் வித்தியாதரர்களாகவும் நெருங்கிய உறவினர்களாகவும் சித்திரிக்கப்படுகின்றனர். இராவணனுக்குப் பத்துத் தலையில்லை; அவன் பத்து நாள் குழந்தையாக இருந்தபோது ஓர் அரக்கன் வியக்கத்தக்க ஓர் அணிகலனைக் கொணர்ந்து அணிவிக்கிறான். அதில் பதித்திருந்த ஒன்பது மாணிக்கங்களிலே குழந்தையின் தலை நிழலிடவே ஒன்பது தலை நிழல்கள் தெரிந்தன. அந்நிலையில் குழந்தையின் தலையோடு அந்நிழல்களையும் சேர்த்துப் பத்துத் தலைகள் தோன்றின; அவனும் தசமுகன் ஆயினான் என்பது அந்தச் சமணக் காப்பியக் கூற்று. பொதுவாகச் சமண இராமாயணங்களில் இராவணனுடைய பண்புகள் மிகப் போற்றத்தக்கனவாகும். கல்வி, கலைமேம்பாடு, வீரம், பெருந்தன்மை, பேரிரக்கம், தூய வொழுக்கம் முதலிய நற்பண்புகளுடன் இராவணன் காணப்படுகிறான்.
மெய்ப்பொருளியல் அடிப்படையில் சிந்திப்பவர்கள் ஞானேந்திரியங்கள் ஐந்தும் கன்மேந்திரியங்கள் ஐந்தும் சேர்ந்த பத்தும் இராவணனுக்குப் பத்துத் தலைகளாயின; அவையே அவனை அடிமையாக்கித் தகாத நெறியில் செலுத்தின என்பர். முக்குண வயத்தால் உயிர்கள் படும் பாட்டினை மக்கள் உணர்வதற்காகவே இராசச குணத்திற்கு இராவணனும், தாமச குணத்திற்குக் கும்பகருணனும், சத்துவகுணத்திற்கு வீடணனுமாகப் படைக்கப்பட்டுள்ளனர் என்பர். எவ்வாறோ வான்மீகி, கம்பன் ஆகியோரால் அறத்தின் ஆழியாகிய இராமனுக்கு எதிர்நாயகனாகச் சித்திரிக்கப்பட்டமையின், இராவணனைத் தீமையின் மொத்த வடிவினன் என்றும், அவன் பெற்ற அவல முடிவு வஞ்சகனாகிய அவனுக்குத் தக்கதே யென்றும் தீமையை நன்மை வெற்றி கொண்டு அழிப்பதே அறத்தின் நியதியென்றும், இங்கு இராவணன் வீழ்ச்சியால் அவலமில்லை யென்றும், இதுவே உலகத்திற்கு நல்ல படிப்பினை யென்றும் சிலர் நினைக்கின்றனர். இதற்கேற்ப வடநாட்டிலே இராவணன், கும்ப கருணன் போன்ற பெரிய உருவங்களைத் தட்டிகளாலும் வண்ணத்தாலும் செய்து கொளுத்தி விழாக் கொண்டாடுகின்றனர்.
இராவணன் தொடர்பாக ‘இராவணாகாரம்’ என்ற சொல் உருவாகி, அது அச்சுறுத்தும் வடிவம் எனப்பொருள் கொள்ளப் பெற்றது; தாயுமானவரும் இதனைக் கையாள்கிறார் (மெளன. 9). இது ஒரு புறமிருக்க, இராவணது மாட்சியையும் வீழ்ச்சியையும் திறனாய்வுக் கண்ணால் கண்டு, கட்டுரைகளாகத் தீட்டி மகிழ்கின்றனர். பட்டிமன்றங்களில் அவனது பேராற்றலை எடுத்து இயம்புகின்றனர். புலவர் குழந்தை எழுதியுள்ள ‘இராவண காவியம்’ இராவணனை மானமுள்ள பெருவீரனாக மிகவுயர்த்திப் புகழ்ந்து செல்கிறது. செ.வை.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 168)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/d8u63h65/
தமிழ்“இராவணன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/d8u63h65/APA
Oliyon Research. (2026). இராவணன். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/d8u63h65/MLA
"இராவணன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/d8u63h65/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment