இறவு சுல்கூல் படைப்போர் என்பது படைப்போர் என்னும் இசுலாமியச் சிற்றிலக்கிய வகை சார்ந்த ஓர் இலக்கியமாகும் (காண்க: இறவு சுல்கூல் படைப்போர்). இதனை மூலநூலாகக் கொண்டு உரைநடையில் எழுதப்பட்ட நூல் இறவு சுல்கூல் படைப்போர் வசன காவியம். இதனைக் காயற்பட்டினம் மருதூம் முகம்மது புலவர் இயற்றினார். இந்த வசன காவியத்தின் ஒன்பதாம் பதிப்பு சென்னை சாகூல் அமீதியா அச்சகத்தில் பதிப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு முந்திய பதிப்புகள் பற்றிய விவரம், நூலின் அரங்கேற்றம் பற்றிய கருத்துகள் ஆகியவற்றைத் தெளிவாக அறிய முடியவில்லை. இந்நூல் 358 பக்கங்கள் கொண்டது. இதற்கு அரபு மொழியில் மூலநூல் ஒன்றுள்ளது. பல பகுதிகளில் மூல நூலின் மொழிபெயர்ப்பைக் காணலாம். இவ்வசன காவியம் 42 சருக்கங்களாகப் பகுக்கப்பட்டுள்ளது. இதில் சல்கா என்னும் அம்மையார் இறவு சுல்கூலுடன் போராடி வெற்றி பெற்ற வரலாறு விளக்கப்பட்டுள்ளது. வரலாற்று அடிப்படையில் அமைந்த இக்காவியத்தில் மூலநூலில் உள்ளது போன்ற முனாசாத்துக் கவிதைகளும் இடம்பெற்றுள்ளன.சி.ந.