தீவுகள் வட பசிபிக்குப் பெருங்கடலில் அமைந்துள்ளன. சான் பிரான்சிசுகோவிற்கு ஏறத்தாழ 3000 கிலோ மீட்டர் தென்மேற்கில் உள்ள இத்தீவுக் கூட்டத்தில் 20 தீவுகள் இருக்கின்றன. அவற்றுள் எட்டுத் தீவுகளில் மட்டுமே மக்கள் வாழ்கிறார்கள். அவாய் (Hawaii) தீவுக் கூட்டத்தின் பரப்பளவு 15,706 ச.கி.மீ. மக்கள்தொகை 9,65,000 (1980). அவாய் அவாய், அமெரிக்க ஐக்கிய நாட்டின் ஐம்பதாவது மாநிலமாகும். மக்கள் வாழும் எட்டுத் தீவுகள் வருமாறு:– 1) அவாய் (Hawaii), 2. மவ்வீ (Mavi), 3. ஓவைகூ (Oahu) 4. கவ்வை (Kavai) 5. மாலோகீ (Molokai), 6. இலானீ (Lanai), 7, நீகௌ (Niihau), 8. காகூலாவே (Kahoolawe). ஆனலூலு (Honolulu) என்னும் நகரம் அவாய் தீவுகளின் தலைநகராகும். இவ்வூர் ஓனவகூ (Oahu) தீவில் அமைந்துள்ளது. இதன் மக்கள்தொகை 3,65,114 (1980). அவாய் மாநிலத்தின் சிறப்பான துறைமுகமும் இதுவே. சர்க்கரை உற்பத்தி ஆலைகள், அன்னாசிப் பழங்களைப் பதப்படுத்தும் தொழில் போன்றவை இங்கு நடைபெறும் சீரிய தொழில்கள். அமெரிக்காவிலிருந்து ஆசியாவுக்குச் செல்லும் வானவூர்தி வழியில் அமைந்துள்ள இந்நகரம், பன்னாட்டு விமான நிலையத்தைக் கொண்டுள்ளது. பசிபிக்குப் பெருங்கடலின் நடுவில் உள்ள அழகான விமான நிலையமும் இதுவே. இது ஒரு சுற்றுலாப் பயணிகளின் மையமாகும். கயிலுவா, கனோயே, ஈலோ (Hilo), வைப்பாகு, பெர்ல் நகரம் (Pearl City), வாகைவா, ஏயே, காகூலை, வைலூகூ (Wailuku) போன்றவை இத்தீவுகளின் சிறப்பான நகரங்களாம். மிதமானதும் ஒரே சீரானதுமான தட்பவெப்ப நிலையைக் கொண்டு இலங்கும் இத்தீவுகள் வாழ வசதியானவை; கோடை, கார் ஆகிய பருவங்கள் குறித்த காலத்தில் நிகழும். மண்வளமே இம்மாநிலத்தின் மதிப்புமிக்க மூலதனமாகும். ஏறத்தாழ 9 விழுக்காட்டு நிலமே உணவுப் பொருள்கள் பயிரிடப் பயன்படுகிறது. சிமெண்டு, கல், மணல், சரளைக்கல், மாக்கல் போன்றவை இங்குக் கிடைக்கும் பொருள்கள். அன்னாசியும் கரும்பும் இங்கு ஆண்டு முழுதும் பயிராகின்றன. அவாய் மாநிலத்தை ஒரு பூந்தோட்டம் என்றால் மிகையாகாது. மான், காட்டு ஆடுகள், காட்டுப் பன்றிகள் போன்றவை இங்குக் காணப்படுகின்றன. இங்குப் பாம்புகள் இல்லை, கால்நடை வளர்ப்பு மக்களின் தொழில்களுள் ஒன்று. இங்கு வாழும் மக்கள் பல இனத்தவர். கீழை, மேலை நாடுகளின் பண்பாட்டுச் சந்திப்பினை இங்குக் கண்டுகளிக்கலாம். அவாய் மாநிலத்தின் பேச்சு மொழி ஆங்கிலம். அவாய் தீவுகளைக் கி.பி. 1778 சனவரியில் சேம்சு குக்கு (James Cook) என்னும் ஆங்கில மாலுமி கண்டுபிடித்தார். இத்தீவுகளை அவர் சான்ட்விச் (Sandwich) தீவுகள் என்று அழைத்தார். தொடக்கத்தில் இங்குத் தனித் தனியாக இருந்த அரசுகளை உள்ளூர்த் தலைவர்கள் ஆண்டு வந்தனர். கி.பி. 1810–ஆம் ஆண்டு ஆனலூலு முதலாம் காமேசமகா (Kamchamsha) என்னும் அரசர் எல்லாத் தீவுகளையும் வென்று ஒரு குடைக்கீழ் அரசாண்டார். கி.பி. 1820–ஆம் ஆண்டளவில் கிறித்தவப் பாதிரிகள் நியூ இங்கிலாந்திலிருந்து வந்தார்கள். பின்னர் ஐரோப்பாவிலிருந்தும் அமெரிக்காவிலிருந்தும் கிறித்தவப் பாதிரிகள் வந்தனர். கி.பி. 19–ஆம் நூற்றாண்டின் பெரும்பகுதியில் இத்தீவுகள் சுதந்திரமாகவே இருந்தன. அப்போது இலிலிவோகலானி (Lilivokalani) என்னும் பெயர் கொண்ட அரசியார் ஆட்சி செய்தார். ஆனால், கி.பி. 1893–ஆம் ஆண்டில் அவ்வரசியார் பதவி நீக்கம் பெறவே, அங்கு இடைக்கால அரசொன்று நிறுவப்பட்டது. கி.பி. 1894–இல் மக்களின் விருப்பப்படி அது குடியரசாக்கப்பட்டது. கி.பி. 1898–ஆம் ஆண்டு, ஆகசுட்டு மாதம் 12-ஆம் நாள் அவாய் அமெரிக்க ஐக்கிய நாட்டுடன் இணைந்தது. 1941–ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 7–ஆம் நாள் இரண்டாம் உலகப் போரின்போது, சப்பானியர் இத்தீவுக் கூட்டத்திலுள்ள பேர்ல் துறைமுகத்தைத் (Pearl Harbour) தாக்கினர் அதன் விளைவாகவே அமெரிக்க ஐக்கிய நாடு நேசநாடுகளின் பக்கம் சேர்ந்து போரில் ஈடுபட்டது. அவாய் அமெரிக்க ஐக்கிய நாட்டின் 50–ஆவது மாநிலமாக 1959–ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 18-ஆம் நாள் ஏற்றுக்கொள்ளப்பட்டது.