உயிரெழுத்து
uyireḻuttu
மொழியறிஞர்கள் பேச்சொலிகளை உயிரெழுத்து, மெய்யெழுத்து எனப் பகுக்கின்றனர்.
மொழியறிஞர்கள் பேச்சொலிகளை உயிரெழுத்து, மெய்யெழுத்து எனப் பகுக்கின்றனர். மிடறு, வாய் முதலிய பேச்சுறுப்புகளின் வழியாக வெளியேறும் காற்று எவ்விதத் தடையோ உராய்வோ இன்றிச் செல்வதால் தோன்றுவன உயிரொலிகள். குரலிதழ்கள் (Vocal Chords) அதிரப் பிறக்கின்றமையால் இவை ஒலிப்புடை ஒலிகளாக (Voiced Sounds) உள்ளன.
பேச்சுப் பொறியில் (Speech Apparatus) வாயறையில் உள்ள நாவின் நிலை, இதழ்களின் வடிவம் இரண்டினையும் பொறுத்து உயிரொலிகள் வேறுபடுத்தப்படுகின்றன. நாவினை வாயறையில் தாழ்வாக இருக்குமாறு செய்யலாம்; முன் அண்ணம் (Hard Palate), பின் அண்ணம் (Soft Palate) ஆகியவற்றை நோக்கி வெவ்வேறு அளவுகளில் உயர்த்தலாம். நாவின் தொழில்களுடன் இதழ்களைக் குவித்தல், விரித்தல், இயல்பான நிலையில் வைத்துக் கொள்ளுதல் போன்ற தொழில்களாலும் உயிரொலிகள் வேறுபடுத்தப்படுகின்றன. நாவின் விறைப்பாலும் (Tense), நெகிழ்வாலும் (Lax), வளைவாலும் (Retroflexion), மூக்கறைக் காற்றாலும் உயிரொலிகள் வேறுபடுத்தப்படுகின்றன.
உலக மொழிகளில் சில அ,இ,உ என்னும் மூன்று உயிரெழுத்துக்களை மட்டுமே கொண்டுள்ளன. எசுகிமோ மொழியும் சில அராபியக் கிளைமொழிகளும் இவ்வகையின. பெரும்பாலான மொழிகள் அ,இ,உ,எ,ஒ என்னும் ஐந்து உயிரெழுத்துகளைக் கொண்டுள்ளன. தமிழ், கன்னடம், இலத்தீன், சப்பான் மொழிகள் இவ்வகை மொழிகளுள் சிலவாகும். இத்தாலிய மொழியிலும் இலத்தீன் பேச்சு வழக்கிலும் மேற்கூறிய ஐந்து உயிரெழுத்துகளுடன் [æ,ɔ] என்னும் இரண்டு உயிரெழுத்துகளும் சேர்ந்து ஏழு உயிரெழுத்துகள் உள்ளன.
மொழியியலார் உயிரெழுத்துக்களை வகைப்படுத்தும் முறைகள் வருமாறு: இதழ்கள் குவிந்த நிலையில் உ, ஒ [u,o] என்னும் உயிர்கள் பிறக்கின்றன; இவை குவி உயிர்கள் (Rounded Vowels) எனப்படும். இதழ்கள் குவியாமல் விரிந்திருக்கும் நிலையில் இ, எ [i,e] என்னும் உயிர்கள் பிறக்கின்றன. இவை குவியா உயிர்கள் (Unrounded Vowels) எனப்படும்.
வாயறையில் உள்ள நுனி நாவை (நாவின் முன்பகுதி) முன் அண்ணத்தை நோக்கி வெவ்வேறு அளவுகளில் உயர்த்தும்பொழுது நுனிதாவின் தொழிற்பாட்டால் [i,e,ɛ,a] என்னும் உயிர்கள் பிறக்கின்றன; இவை முன்னுயிர்கள் (Front Vowels) எனப்படும். கடைநாவினைப் (நாவின் பின்பகுதி) பின் அண்ணத்தை நோக்கி வெவ்வேறு அளவுகளில் உயர்த்தும்பொழுது கடைநாவின் தொழிற்பாட்டால் (u,o,ɔ,a) எனவும் உயிர்கள் பிறக்கின்றன; இத்தகைய ஒலிகள் பின்னுயிர்கள் (Back Vowels) எனப்படும்.
நாவின் நடுப்பகுதி மேல்நோக்கிச் செல்லும் பொழுது [ə,a] என்னும் உயிர்கள் பிறக்கின்றன. இவை நடுநா மேலிருந்து கீழ்நோக்கிச் செல்லும் பொழுது பிறப்பதால் நடுவுயிர்கள் (Central Vowels) எனப்படும்.
நா அண்ணத்தை நோக்கி எழுகின்ற உயரத்தை நோக்கியும் உயிரெழுத்துகள் வேறுபடுத்தப்படுகின்றன. [i] என்னும் உயிரொலியை ஒலிக்கும்பொழுது நுனிநா முன் அண்ணத்தை நோக்கி உயர்கிறது. [u] என்னும் உயிரொலியை ஒலிக்கும் பொழுது, கடைநா பின் அண்ணத்தை நோக்கி உயர்கிறது. நா உயர்ந்துள்ள நிலையில் பிறக்கும் இவ்வுயிர்கள் மேலுயிர்கள் (High Vowels) எனப்படும். [e,Ɛ] என்னும் உயிர்களை ஒலிக்கும்பொழுது நுனிநா முன் அண்ணத்திலிருந்து படிப்படியே முன்னிருந்து பின்னோக்கிக் கீழே இறங்கிவருகிறது. [O,Ɔ] என்னும் உயிர்களை ஒலிக்கும் பொழுது கடைநா பின் அண்ணத்திலிருந்து படிப்படியே கீழே இறங்கிவருகிறது. எனவே, [e,o] என்னும் உயிர்கள் இடையுயிர்கள் (Mid vowels) என்றும், (Ɛ,Ɔ] என்னும் உயிர்கள் கீழ் இடையுயிர்கள் (Low Mid vowels) என்றும் குறிக்கப் பெறும். [a,a] என்னும் உயிர்களை ஒலிக்கும்பொழுது வாயில் அடிப்- பகுதியை ஒட்டி நா தாழ்ந்து படிகிறது. எனவே, இவை தாழுயிர்கள் (Low Vowels) எனப்படுகின்றன.
[i,u] என்னும் மேறுயிர்களை ஒலிக்கும்பொழுது அண்ணத்திற்கும் நாவிற்கும் இடையிலுள்ள வெளி மிகக்குறைவாக இருப்பதால், இவ்வுயிர்களை அடைப்புயிர்கள் (Close Vowel) என்பர்.[a,ɑ] என்னும் கீழுயிர்களை ஒலிக்கும்பொழுது அண்ணத்திற்கும் நாவிற்கும் இடையிலுள்ள வெளி பெரியதாக இருப்பதால், இவ்வுயிர்கள் இறப்புயிர்கள் (Open Vowels) என்று குறிக்கப்படும்.
தானியேல் சோன்சு (Daniel Jones) உயிரெழுத்தின் நிகழிடங்களை எட்டு அடிப்படை உயிர்களை ஆதாரமாகக் கொண்டு விளக்குகிறார்.
[i,u] என்னும் மேலுயிர்களை ஒலிக்கும் பொழுது நாவினை எவ்வளவு தூரம் மேலே உயர்த்தி வைத்துக் கொண்டு ஒலிக்க வேண்டுமோ அவ்வளவு தூரம் மேலே உயர்த்தி வைத்து ஒலிக்க வேண்டும் என்பதையும், (a,ɑ) என்னும் உயிர்களை ஒலிக்கும் பொழுது நாவினை எவ்வளவு தாழ்த்த முடியுமோ அவ்வளவு தாழ்த்தி வைத்துக்கொண்டு ஒலிக்க வேண்டும் என்பதையும் இப்படம் விளக்குகிறது. [e,o] என்னும் இடையுயிர்களையும் [Ɛ,Ɔ] என்னும் கீழ் இடையுயிர்களையும் ஒலிக்கும்பொழுது நாவினை அவ்வவ்விடங்களில் வைத்து ஒலிக்க வேண்டும். இவற்றை ஒலிக்கும் பொழுது கீழ்த்தாடை படிப்படியாகக் கீழே இறங்கி வருவதைப் படம் விளக்குகிறது. உயிரெழுத்துகள் அனைத்துக்கும் அ, இ, உ என்னும் மூன்றும் அடிப்படையாக உள்ளன. எனவே, இவற்றை அடிப்படை உயிர்கள் (Cardinal Vowels) என்பர். இவை பிறக்கும் இடங்களை இணைத்து முக்கோணம் வரைந்து விளக்குவர்; இம்முக்கோணம் உயிர் முக்கோணம் (Vowel Triangle) எனப்படும்.
உயிரொலிகள் ஒலிப்புடை (Voiced) ஒலிகள் ஆகும். உலக மொழிகள் பலவற்றில் உயிர்கள் குறிலாகவும் நெடிலாகவும் உள்ளன. நெடில்கள் குறில்களைக் காட்டிலும் விறைப்பாக ஒலிக்கப்படுகின்றன; எனவே, நெடில்கள் விறைப்புயிர்கள் (Tense Vowels) எனப்படுகின்றன. குறில்கள் நா நெகிழ்ந்த நிலையில் ஒலிக்கப்படுவதால் நெகிழ்வுயிர்கள் (Lax Vowels) எனப்படுகின்றன. நா, இதழ் ஆகியவற்றால் எழுப்பப்படும் உயிரொலிகளை மூக்கொலிகளாகவும் (Nasals) ஒலிக்கலாம். தமிழ் மொழியில் ம், ன், ண் போன்ற மெல்லின மெய் ஈறுகளில் முடியும் சொற்களில் உள்ள மெல்லின ஈறுகள் பேச்சுமொழியில் ஒலிக்கப் பெறுவதில்லை; அவற்றின் முன்னருள்ள உயிர்கள் மூக்கின உயிர்களாக ஒலிக்கப்பெறுகின்றன; இவ்வுயிர்களை ஒலிக்கும்பொழுது காற்று மூக்கறை வழியாகச் செல்லுகிறது. எனவே, இவை மூக்குயிர்கள் (Nasals Vowels) எனப்படுகின்றன. முன்னுயிர்களையும் பின்னுயிர்களையும் ஒலிக்கும்பொழுது, நுனிநா அண்ணத்தை அடுத்தோ வளைந்தோ தொழிற்படலாம்; இவ்வாறு நுனிநாவை வளைத்து எழுப்பும் உயிரொலிகளை நாவளையுயிர்கள் (Retroflex Vowels) என்பர்.
ஓர் உயிரேயன்றி இரண்டு அல்லது மூன்று உயிர்கள் இணைந்து ஒலித்தலும் உண்டு. இவ்வாறு வரும் உயிரொலித் தொடர்களில் ஓர் உயிர் மட்டுமே ஏனைய உயிர்களைக் காட்டிலும் ஒலி முழக்கம் உடையதாக அமையும். உலகமொழிகள் பலவற்றில் இரண்டு உயிர்களே இணைந்து வருகின்றன; மிகச் சில மொழிகளில் மட்டும் மூன்று உயிர்கள் இணைந்து வருகின்றன. மூன்றுக்கும் மேற்பட்ட உயிர்கள் தொடர்ந்து வருதல் அரிது. இரண்டு உயிர்கள் இணைந்து வரும் கூட்டுயிர்களை ஈருயிர் (Dipthong) என்பர்.
தொல்காப்பியர் அகரம் முதல் ஔகாரம் முடிய பன்னிரண்டு உயிரெழுத்துகளைக் கூறியுள்ளார். எனினும் அ, இ, உ, எ, ஒ என்னும் ஐந்து உயிர்கள் தாம் தமிழ் மொழியில் அடிப்படை உயிர்கள், தொல்காப்பியர் ஐ, ஔ என்னும் நெடில்களை ஈருயிர்கள் என்று கருதுகிறார்; அகரமும் இகரமும் சேர்ந்து ஐகாரம் ஆகும் என்றும், அகரமும் உகரமும் சேர்ந்து ஔகாரம் ஆகும் என்றும் அவர் கூறுகிறார். பேச்சுத் தமிழில் ஐகாரத்தில் வரும் இகரம் உராய்வு பெற்று மெய்யொலிப் பண்பைப் பெறுகிறது. இவ்- வாறு வரும் இகர ஒலியைத் தொல்காப்பியர் யகர மெய்யாகக் கருதியுள்ளார். அகரமும் உகரமும் சேர்ந்து ஔகாரம் ஆகும் என்று தொல்காப்பியர் கூறியிருப்பினும், இவ்வொலி பேச்சில் அவ் என்றே ஒலிக்கப்படுகிறது. ஔகாரத்தை அகர உகர ஒலிகளின் கூட்டாக ஒலிக்க வேண்டுமாயின் அகரத்தைப் பிறப்பித்த பின்னர் உகரத்தைப் பிறப்பிப்பதற்கு இதழ்களைக் குவிக்க வேண்டும். ஆனால், ஔகாரத்தை ஒலிக்கும்பொழுது அகரத்தைப் பிறப்பித்த பின்னர்க் கீழிதழ்மேல் முன்பற்களை நெருங்கி இருக்கும் நிலையில் முடிக்கப்பெறுகிறது; அகரமும் வகர மெய்யும் கூடிய ஒலியாகவே ஔ ஒலிக்கப்படுகிறது. எனவே, ஐகார ஔகாரங்களை ஈருயிர்கள் என்பது பொருந்தாது.
மொழியியல் வளர்ச்சியின் காரணமாக, ஒவ்வோர் ஒலியும் வெவ்வேறு முனைப்புக் கூறுகளின் (Distinctive Features) தொகுதி என்று ஆராய்ந்து கண்டுள்ளனர். ஓரொலியைப் பிற ஒலிகளிடமிருந்து வேறுபடுத்துகிற பத்து முனைப்புக் கூறுகளை மொழியியலார் விளக்குகின்றனர். அவ்வடிப்படையில், இக்காலப் பேச்சுத் தமிழ் உயிரொலிகள் அட்டவணையில் விளக்கப்படுகின்றன.
அ.பா.
துணை நூல்கள்
Robins, General Linguistics, An Introductory Survey, 1967.
Hockett, C.F., A Course in Modern Linguistics, IBH Publishing Co, New Delhi, 1970.
Meenakshisundaran, T.P., A History of Tamil Language, Deccan College, Poona, 1965.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 990)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/d4zvvjzq/
தமிழ்“உயிரெழுத்து”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/d4zvvjzq/APA
Oliyon Research. (2026). உயிரெழுத்து. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/d4zvvjzq/MLA
"உயிரெழுத்து." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/d4zvvjzq/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment