‘வேதம்’ என்ற சொல்லிற்கு, ‘வித்’ என்பது அடிச்சொல். அதன் பொருள் ‘அறிய’ (To know) என்பதாகும். ஆகவே வேதம் என்ற சொல்லிற்கு ‘அறிவு’ என்பது பொருள். வேதங்களின் தோற்றத்தையும் அவற்றைத் தொகுத்தது யார் என்பதையும் அறுதியிட்டுக் கூற முடியாத நிலையில், அவை மிகத் தொன்மையானவை, தனி மனிதச் சார்பற்றவை என்றே கருதப்படவேண்டும். வேதங்கள் இருக்கு, எசுர், சாமம், அதர்வணம் என நால் வகைப்படும். ஒவ்வொரு வகையிலும் நான்கு பிரிவுகள் உள்ளன. அவை மந்திரம், பிராம்மணம், ஆரண்யகம், உபநிடதம் எனப்படும். இவற்றுள் மந்திரம், பிராம்மணம், ஆரண்யகம் என்பவை இம்மை மறுமை இன்பத்தை அடைய ஏதுவான வேள்விகளைப் பற்றியும், உபநிடதம் மேலான மெய்ப்பொருள் அறிவைப் பற்றியும் விரிவுபடுத்திக் கூறுகின்றன. இந்த அடிப்படையில்தான் வேதத்தின் முதல் பாகம் கருமகாண்டம் என்றும், இரண்டாம் பாகம் ஞான காண்டம் என்றும் சொல்லப்படுகின்றன. உபநிடதங்கள் ‘ஞான காண்டத்’தைக் குறிக்கின்றன. உபநிடதங்கள், வேதங்களின் இறுதிப் பகுதியில் (அந்தம்) இடம் பெற்றிருப்பதால். அவை ‘வேதாந்தம்’ என்று பெயர் பெற்றன. இந்த இருவகைக் கோட்பாடுகளில், எந்தக் கோட்பாட்டை வேதங்கள் வலியுறுத்துகின்றன என்று இந்திய மெய்ப்பொருள் இயல் ஆராய முற்படுகின்றது. வேதங்களின் உட்பொருளை ஆராய்ந்து விளக்கிப் பொருள் கூறுவதே ‘மீமாம்சை’ என்று சொல்லப்படும். மீமாம்சை என்ற சொல் ஆராய்தல் எனப்படும். ‘கர்மகாண்டம்’ வேதங்களின் முற்பகுதியாக அமைவதால், இம்மையிலும் மறுமையிலும் சுகத்தை அடையக் காரணமான வேள்விகளை விளக்கிக் கூறுவதே வேதங்களின் குறிக்கோள் என்ற கருத்தை வலியுறுத்தும் பகுதி பூர்வ மீமாம்சை (முற்பகுதி) எனப்படும். ‘ஞான–காண்டம்’ வேதங்களின் பிற்பகுதியில் அமைவதால், மெய்ப்பொருள் அறிவை (ஞானம்) வலியுறுத்துவதே வேதங்களின் உட்கருத்து என்ற கருத்தை வலியுறுத்தும் பகுதி உத்தர மீமாம்சை (பிற்பகுதி) எனப்படும். வேதங்களின் கருத்துகளை ‘முற்பகுதி’, ‘பிற்பகுதி’, என்று பிரித்துக் கூறுவது காலவரையறையைக் குறித்ததன்று. உத்தரமீமாம்சை வேதத்தின் இறுதிப் பிரிவான உபநிடதங்களை ஆராய்வதால் வேதாந்தம் எனவும் பெயர்பெறும். உபநிடதம் என்ற சொல் ‘ஆசிரியருக்குப் பக்கத்தில் அமர்ந்து பாடம் கேட்டல்’ எனப் பொருள்படும். ‘எது அறியாமையை அகற்றுகிறதோ’ அதற்குப் பெயர் உபநிடதம் என்று பொருள் கூறுவர் ஆதி சங்கரர். முனிவர்கள் தங்கள் நுண் அறிவினால் (Intuition) தம்மைத் தாமே உணர்ந்து அந்தக் களிப்பினால் ஏற்பட்ட ஆனந்த அனுபவங்களின் வெளிப்பாடே உபநிடதங்கள் ஆகும். மாக்சுமுல்லர் என்ற செருமானியத் தத்துவ அறிஞர் உபநிடதங்களை ‘மெய்ப்பொருள் சார்ந்த களிப்புப் பாடல்கள்’ (Philosophic Rhapsodies) என்று விவரிக்கிறார் எனவே வெவ்வேறு காலத்தில் வாழ்ந்த முனிவர்களின் நுண்ணறிவு சார்ந்த அனுபவங்களும் அவை தொடர்பான கருத்துகளுமே உபநிடதங்கள் எனப்படும். உபநிடதங்களின் இந்தக் கோவையற்ற தன்மையினால்தான் ஒரே பொருளைப் பற்றித் தோற்றத்தில் முரண்பாடான பலவித கருத்துகள் இடம் பெற்றிருக்கின்றன. எடுத்துக்காட்டாக, மெய்ப்பொருளின் தன்மை பற்றி இரண்டு விதமான கருத்துகள் காணப்படுகின்றன – மெய்ப்பொருள் குணமற்றது எனவும் எல்லா நற்குணங்களையும் உடையது எனவும் சொல்லப்படுகிறது. அதுபோலவே பரம்பொருளுடன் உலகத்திற்கும் சீவனுக்கும் உள்ள தொடர்பு என்ன? என்ற வினாவிற்கு, அவை அடிப்படையில் ஒன்றே என்றும், அடிப்படையிலேயே வெவ்வேறு என்றும் விடைகள் காணப்படுகின்றன. மேலும், மனிதனது இறுதிநிலை, ‘வீட்டின்’ தன்மை ஆகியவை பற்றியும் வெவ்வேறு கருத்துக்கள் இடம் பெறுகின்றன. இந்த இருதரப்புக் கருத்துகளையும் தொகுத்து, ஒழுங்குபடுத்திப் பொருந்தச் செய்து, முழுமைப்படுத்தும் பொறுப்பை வியாசர் என்ற மாமுனிவர் ஏற்றுக் கொண்டார். பாதராயணர் என்பதும் வியாசரின் மறுபெயர். மெய்ப்பொருளை மையமாகக் கொண்டு அதன் தன்மையை ஆராய்ந்து, அதன் வாயிலாக அதற்கும் உலகத்திற்கும், அதற்கும் சீவனுக்கும் உள்ள தொடர்பை விளக்க முற்படுவதால், அந்நூல் ‘பிரம்ம சூத்திரம்’ அல்லது ‘வேதாந்த சூத்திரம்’ எனப்பட்டது. அதுவே ‘உத்தரமீமாம்சை’ என்று சொல்லப்படும். ‘சூத்திரம்’ என்பது சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் மறைபொருள் வாசகம் எனப்பொருள்படும். உத்தரமீமாம்சையில் 555 சூத்திரங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த நூல் நான்கு அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. நான்கு அத்தியாயங்களும் அவற்றின் உட்கருத்தும்: :{| ஒவ்வோர் அத்தியாயத்திலும் நான்கு பிரிவுகள் (பாதங்கள்) உள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் பல உட்பிரிவுகள் (அதிகரணங்கள்) இடம் பெற்றிருக்கின்றன. ஒவ்வொரு உட்பிரிவிலும் பல சூத்திரங்கள் காணப்படுகின்றன. ஓர் அத்தியாயத்திற்கும் மற்றோர் அத்தியாயத்திற்கும் உள்ள தொடர்பு, ஒவ்வொரு அத்தியாயத்திலுமுள்ள பாதங்கள் ஒன்றிற்கொன்று உள்ள தொடர்பு, ஒவ்வொரு பாதத்திலுமுள்ள அதிகரணங்கள், ஒன்றிற்கொன்று உள்ள தொடர்பு மற்றும் ஒவ்வொரு சூத்திரத்திற்கும் அடுத்துவரும் சூத்திரத்திற்குமுள்ள தொடர்பு ஆகியவை இந்த நூலின் சிறப்பு அம்சமாகும். இந்நூலில் ஆராயப்படும் கருத்துகள்: மெய்ப்பொருள், உலகம், சீவன், மாயை, மெய்ப்பொருளை அடையும் வழி, மெய்ப்பொருள் அறிவின் தன்மை. ‘பகவத் கீதை’ வியாசரின் வேதாந்த சூத்திரங்களைப்போல, உபநிடதங்களின் சாரம். ஆகவே, உபநிடதங்கள் வேதாந்த சூத்திரம் பதவத் கீதை ஆகிய இம்மூன்றும் ‘இந்து சமயத்தின் மூன்று தூண்கள்’ என்று போற்றப்படுகின்றன. வேதாந்த சூத்திரங்களின் தன்மையினால், அவை பலவிதமான திறனாய்வுகளுக்கு உட்பட்டு இருக்கின்றன. சங்கரர், இராமானுசர், மத்துவர், நிம்பார்க்கர், வல்லபர், பாசுகரர், யாதவப்பிரகாசர், கேசவர் நீலகண்டர், பவதேவர் போன்றோர் வேதாந்த சூத்திரத்திற்குத் தங்கள் கோட்பாட்டிற்கு ஏற்ப விளக்கங்கள் கொடுத்து, அவர்களுடைய மரபுகளை நிறுவியிருக்கிறார்கள். எஸ்.ஓ.ரா.