அட்டப்பிரபந்தம் எனப் பெயரிய வைணவ இலக்கியத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள ஒரு சிற்றிலக்கியம். அழகிய மணவாள தாசர் எனப்படும் பிள்ளைப் பெருமாளையங்காரால் இயற்றப்பட்டது. கி.பி. 12–ஆம் நூற்றாண்டில் தோன்றிய இந்நூல், அந்தாதியாக அமைக்கப்பட்ட 100 கட்டளைக் கலித்துறைச் செய்யுள்களாலாகியது. ‘நீராழி வண்ணனை’ எனத் தொடங்கி ‘நீர்மையுமே’ என மண்டலித்து முடிகிறது. திருமாலிருஞ் சோலையில் கோயில் கொண்டுள்ள அழகர் மீது பாடப்பெற்ற இந்நூல் அகத்துறை நலங்கனிந்த பல பாடல்களைக் கொண்டுள்ளது. பாட்டுடைத் தலைவனாகிய திருமாலைச் ‘சமயிகள் ஆய்ந்த வண்ணம் உள இலையாய் உருவாய் அருவாய் ஒரு முதலே’ என்று விளித்துப் போற்றுவது சிறப்பாக உள்ளது.