இது 15 செ.மீ நீளமுள்ள செம்பழுப்பு நிறப் பறவை. ஊர்க் குருவியளவே இருக்கும் இது அடிக்கடி தன் சிவப்பு வாலை உதறியபடியே இருக்கும். பறக்கும் போது, முன் பகுதியைக் கீழே தாழ்த்தி, வாலை உதறிக் கொண்டேயிருக்கும். ஆண் பறவையின் தலை, முன்னுடல் ஆகியவை கருமை நிறத்திலும், வயிறு, பின்னுடல் வால் ஆகியவை கிச்சிலிச் செம்பழுப்பாகவும் இருக்கும். பெண் பறவையின் தலை, முன்னுடல் பழுப்பு நிறமாகவும், வயிறு, பின்னுடல் கிச்சிலி நிறத்துடனும் இருக்கும். அலகும், கால்களும், கருநிறமும், விழித் திரை கரும் பழுப்பு நிறமும் பெற்றவை. செவ்வாலி, குளிர் பருவத்தில் இமய மலைக்கு வடக்கிலிருந்து, தெற்கே வலசை வரும். 6500 மீ. உயரத்திலும், இவை தென்பட்டுள்ளன. செப்டெம்பர்–ஏப்ரல் மாதங்களில் சமவெளிகளில்–வயல்களிலும், தோட்டங்களிலும் காணலாம். வாலை உதறிக் கொண்டு, “விட்… விட்… விட்” என்று ஒலித்துக் கொண்டே பறக்கும். இவை பெரும்பாலும் பூச்சியுண்ணிகள். சிறு வண்டு, பூச்சிகளின் இளவுயிரி முதலியவற்றை விரும்பியுண்கின்றன. காஷ்மீர், நேப்பாளம், திபெத் ஆகியவற்றிற்கும் அப்பாலுள்ள பாரசீகம் முதல் மங்கோலியா பகுதிகளில் மே–ஆகஸ்ட் வரையில் கூடு கட்டி வாழ்ந்து, முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும். கூடு, பொதுவாகப் புல், பாசி, இலை, மயிர், இறகு ஆகியவற்றைக் கொண்டு கிண்ணம் போல் கட்டப் பட்டிருக்கும். ஒரு முறையில் 4–6 முட்டையிடும். முட்டை வெண்மையாகவோ, நீலப் பச்சையாகவோ இருக்கும். தென்னாட்டுக்கு வலசை வரும் செவ்வாலி ஃபீனீக்கியூரஸ் அக்ரூரஸ் ஆகும். —க. ரத்னம்