இலக்கு அல்லது குறிக்கோள் மனித எண்ணங்களில் இலங்கிய வடிவம் பெற்றதால் இலக்கியம் முகிழ்த்தது. இலக்கியத்திற்கு இதுதான் இலக்கணம் என்று வரையறுத்துக் கூறுதல் எளிதன்று. ஆயினும், இலக்கியத்தின் கூறுகளைச் சுட்டிக் காட்டலாம். இலக்கிய வகைகளைப் பகுத்துக் காட்ட இயலும். எல்லா மொழிகளிலும் இலக்கியம் எவ்வாறு தோன்றி வளர்ச்சியுற்றது என்பதை அறிஞர்கள் ஆராய்ந்தனர். அத்தகைய ஆய்வில்கொண்ட கருத்தும் கண்ட முடிபும் இலக்கியத் தோற்றத்தை உய்த்துணரவும், இலக்கிய வளர்ச்சியைக் கணிக்கவும் பயன்பட்டன. வாய்மொழி இலக்கியம் ஒப்பீட்டாய்வாளர்கள் இலக்கியத்தின் தோற்றத்தை ஆராயத் தலைப்பட்டார்கள். இலக்கியத்தை எழுத்து வடிவத்தில் கண்டு பழகியவர்களுக்கு அது தொடக்க நிலையில் வாய்மொழியாய் விளங்கியது என்னின் வியப்பாக இருக்கும். எழுத்து வடிவத்திற்கும் இலக்கியத்திற்கும் உள்ள தொடர்பு தற்செயலாக நேர்ந்த ஒன்றாகும் என்று அறிஞர் சாடுவிக்கு (Chadwick) கூறுவர். மேலும், தொடக்க நிலையில் தோன்றிய வினைநவில் கவிதைகள் (Poetry of Action) பெரிதும் நாநவில் திறமுடையன (Oral Composition) என்பது ஒப்பிலக்கியம் கண்ட உண்மையாகும். மொழி நூலறிஞர் மொழியின் தோற்றத்தைக் குறித்துப் பலகாலம் ஆராய்ந்தனர். அவர்கள் தம் ஆய்வின் பயனாக, மொழி முதன்முதலாக உரைநடையில் தோன்றவில்லை; காதல் களியிசையில் கால்கோள் கொண்டது என்பதனைக் கண்டார்கள். ஈடும் இசைவும் அமைந்த காதற்களிநடனப் பாக்களில் ஒலிக் குறிப்பால் பொருட் குறிப்பு உணர்த்தப்பட்டிருக்கும். இதனால், ‘பாடுதல் இயற்கை; எழுதுதல் அல்லது உரைத்தல் செயற்கை’ என்பது புலனாகும். எல்லா மொழிகளிலும் இலக்கியம் வாய்மொழி வடிவம் எய்திய நிலை இலக்கியப் படிநிலை வளர்ச்சியில் முதல் நிலை எனலாம். இலக்கிய விளக்கம் இலக்கியக் கருத்துப் பொருளுக்கு விளக்கம் தருதற்குத் திறனாளிகள் பலர் முன்நின்றார்கள். அழகு, கவிதை, கற்பனை, குறிக்கோளியல் முதலியவற்றை எங்கனம் துல்லியமாக விளக்க இயலாதோ அவ்வாறே இலக்கியத்தையும் விளக்க இயலாது என்பர் சி.டி. வின்செசுடர் (C.T. Winchester.). இலக்கியமாவது சிறந்த கருத்துகள் அடங்கிய நூலாகும் என்பர் எமர்சன் (Emerson). தன்கண் அமைந்த நுவல்பொருளும் அதனை விளக்கும் முறையும் பொதுவாக மக்களைக் முறையில் அவரும் அமைந்து, வடிவம் இன்றியமையாததாகி, அதன் வாயிலாக இன்பம் நல்குவது இலக்கியமாகும் என்று அறிஞர் அட்சன் கூறுவர். இவ்வாறு மேனாட்டு அறிஞர் பலர் இலக்கியத்திற்கு விளக்கம் கூறியுள்ளனர். இத்தகைய விளக்கங்கள் முழுமை ஆகா. பழங்காலத்தில், பொதுவாக இலக்கியத்தைச் செய்யுள் என்ற சொல்லால் தமிழில் குறித்தனர். தொல்காப்பியச் செய்யுளில் முதல் நூற்பா மாத்திரை முதலாவதாக இழைபு ஈறாக உள்ள 34 கூறுகளை விளக்கிச் செல்கிறது. இவ்விளக்கம் இலக்கியத்தின் ஒரு வடிவமாகிய செய்யுளுக்கு அமைந்ததாகும். நன்னூல் செய்யுளின் விளக்கத்தினை, பல்வகைத் தாதுக்களினால் அமைந்த உடல் உயிருக்கு இடமாக அமைந்துள்ளது; அதுபோலப் பல்வகைச் சொற்களின் சீரிய பொருளுக்கு இடமாக அமைந்து, உணர்ச்சியோடு இலக்கியப் படைப்பில் வல்லுநர்களாக விளங்குபவர்களால் அணிநலம் அமையப் படைக்கப்படுவது செய்யுளாகும் என்பதனை, ‘பல்வகைத் தாதுவின் உயிர்க்குடல் போற்பல, சொல்லாற் பொருட்கிடனாக உணர்வினில், வல்லோர் அணிபெறச் செய்வன செய்யுள்’ என்னும் நூற்பாவில் தருகிறது. இலக்கியத்தின் கூறுகள்: உணர்ச்சி: பொதுவாக நூல்கள் மனக்கோட்டம் தீர்க்கும் சால்புடையன; அறிவு நல்கும் திறமுடையன. இலக்கியம் அறிவோடு உணர்ச்சியை இழைத்துக் குழைத்துப் பண்படுத்தித் தரும் ஆற்றலுடையது. உணர்ச்சிகள் இடம் பெறாத அறிவியல் கருத்துகள் பொருள் மாறா இயல்புடையன. கவிஞனின் உணர்ச்சியை வெளிப்படுத்துவதும் அதனைப் படிப்பவர் உள்ளங்களில் உணர்ச்சியைப் பெருக்கெடுக்கச் செய்வதுமாகிய அவனது இலக்கியம் மனித வாழ்க்கையின் உண்மையான வரலாறாகும் என்ற வின்செசுடர்க் கூற்று இங்கு நினைவுகூரத் தக்கதாகும். நூலாசிரியரின் நுவல்பொருள் உணர்ச்சியினால் அவர் தம் ஆளுமையைப் புலப்படுத்தும் தன்மை இலக்கியத்திற்குச் சிறப்பாக உண்டு. இலக்கியம் உணர்ச்சியை மையமாகக் கொண்டிலங்கும் பெற்றியுடையது. உணர்ச்சியே இடம்பெறாது நூலிருக்குமாயின் அதனை இலக்கியமாகக் கொள்ள இயலாது. அது அறிவியலாகவோ வேறு நூலாகவோ இருக்கலாம். அறிவியல் உள்ளதை உள்ளவாறு கூறும்; ஆயின், இலக்கியமோ உள்ளதை உணர்ந்தவாறு உரைக்கும். எனவே, அறிவியலுக்கும் இலக்கியத்திற்கும் மிகுந்த வேறுபாடு உண்டு. நுண்கலைகளும் உணர்ச்சியைப் புலப்படுத்துகின்றன. இசை, ஓவியம், சிற்பம் என இன்ன பிற நுண்கலைகள் உணர்ச்சிக் கருவூலங்கள். இசை இலக்கியக் கூறுகளுள் ஒன்றாகும். எந்த இடத்தில் இசை இலக்கிய உணர்ச்சிக் கருத்துக்களிலிருந்து பிரிந்து, ஓசை ஒன்றையே இடனாகக் கொண்டு உணர்ச்சியைப் பிழிந்து தருகிறதோ, அந்த இடத்தில் இசை இலக்கியத்தினின்று வேறுபடுகின்றது; பாடுபவனின் குரல் இனிமையால் உணர்ச்சி ஊட்டும் தன்மை பெறுகிறது. பாடுபவனின் குரல் காற்றில் மறைந்ததும், அதன் கண் தோன்றிய உணர்ச்சியும் மறைந்து போகிறது. இசையோடு சீரிய கூரிய தீஞ்சொல் வவ்விய கருத்து அமையும்போது அவ்விசை இலக்கியமாகச் செழிக்கிறது. கற்பனை வாழ்க்கையின் கண்ணாடியாக விளங்கும் இலக்கியத்தில் உணர்ச்சி முதலிடம் பெறுகிறது என்றால், கற்பனை அவ்வுணர்ச்சிக்கு இணையானதொரு பங்கு பெறுகிறது. அறிவியல் முதல் இலக்கியம் வரை அமையும் மனிதனின் செல்நெறி கற்பனைக்கு ஏற்றவாறு செயற்படும் சீர்மை பெறுவதைக் காணலாம். அறிவியலில் கற்பனைச் சிந்தனைகள் வாயிலாகத்தான் சிற்சில கருதுகோளினை உருவாக்கிப் பல சமயங்களில் அவற்றை மெய்ப்பிக்கவும் நடைமுறைப்படுத்தவும் செய்து புதிய கண்டுபிடிப்புகளை உண்டாக்குகின்றனர். இலக்கியக் கற்பனைகளிலோ படைப்பாசிரியனின் எண்ணங்கள் கற்பனைகளில் மிதந்து பல்வேறு சொல்லோவியங்களைச் சித்திர்க்கின்றன. திறனாளியர் புலவர்தம் கற்பனைகளைக் காட்சிப் பொருள் என்றும் கருத்துப் பொருள் என்றும் இருவகையாகப் பிரிப்பர்; கருத்துப் பொருளில் உள்ளதுபுனைதல், இல்லதுபுனைதல் என இருவகை உண்டு; உள்ளதாயினும் இல்லதாயினும் கற்பனையில் ‘புனைவு’ என்னும் கூறு இலக்கிய இன்பம் பயப்பதற்கு வழி வகுப்பதாகும். நுண்கலைகளும் கற்பனைக்கு ஏற்றவாறு பொலிவடைவதனைக் காணலாம். நுண்கலைகள் வடிவம் பெறும்போது அவற்றின் கற்பனை ஓட்டம் இற்றெனக் காட்டி இதுவெனச் சுட்டி அமைவதைக் காணலாம். பா என்னும் வடிவமோ உரைநடை என்ற பிரிவோ இலக்கியக் கலை வடிவம் பெற்றிலங்கும்போது, அதில் காட்டப்பட்டுள்ள கற்பனைகள் இவைதாம் என்று வரையறுத்துக் காட்டல் இயலாததாகும். இலக்கியங்கள் தொட்டனைத்தூறும் மணற்கேணி போலக் கற்பனை வளம் பெற்று மேலும் மேலும் சுவையூட்டம் பெறுவதைக் காணலாம். இதனாலன்றோ பல படைப்பாளிகளின் எழுத்திற்கு உரைநயம் காணலும் கலைத்திறன் சுட்டலும் வளர்ந்து கொண்டே செல்கிறது. நுண்கலைகள் கற்பனையைப் பெற்றாலும் அவை எந்த ஊடகத்தின் வழி உருவாக்கப் பெற்றுள்ளனவோ அவ்வூடகம் அழியும்போது தாமும் அழிந்துபடுதல் கண்கூடாகும். சான்றாக அழகிய உருவத்தை உருவாக்க முற்படும் சிற்பி சிறந்த கல்லினைத் தேர்ந்தெடுத்து, அக்கல்லில் உருவாக்கும் உருவத்தைத் தன் மனக்கண்ணில் எழுதிப் பின்னர்ச் சிலையாக வடித்தெடுக்கிறான். அங்ஙனம் உருவாக்கப்பட்ட சிற்பம் கவிஞன் கருதிய உணர்ச்சியைச் சிறப்பாகவும் குறிப்பாகவும் காட்டுவதாக அமையலாம். ஆயினும் காலத்தின் கோலத்தினால் அச்சிற்பம் உருவாக்கப்பட்ட கல் தன்னியல்பை இழக்கும்போது சிற்பம் உணர்த்தும் உணர்ச்சி மங்கி மறைந்துவிடும் நிலை அடைவதைக் காணமுடிகிறது. ஆனால், மொழியை ஊடகமாகக் கொண்டிலங்கும் இலக்கியம் பல ஆயிரம் ஆண்டுகளாயினும், உணர்ச்சியும் கற்பனையும் மங்கி மாண்டுபோகாமல் அவற்றில் தங்கி, மனித உள்ளங்களைப் பயன்படுத்திப் பொங்கி எழுவதை என்றும் உணர்தல் கூடும். வடிவம் உலகில் உள்ள பொருள்களுக்கெல்லாம் நீள அகல உயரங்கள் உண்டு. பொருள் பொதிந்த இலக்கியங்களுக்கும் வடிவம் (Literary form) உண்டு. மொழியில் இலக்கியம் கருக்கொள்ளும் பொருட் செறிவிற்கேற்ற வடிவம் அமைகிறது. கற்பனையின் நீட்சியும், உணர்ச்சியின் அகலமும், அறிவுத் திறனின் ஆழமும் இலக்கியத்தைப் பிற கலைகளினின்று வேறுபடுத்துகின்றன. காலத்தை ஆட்சி கொள்ளும் திறன் பிற பொருள்களுக்கு இல்லை எனலாம். உலகத்தில் உள்ள ஒரு பொருளினைக் கொண்டு காலத்தைக் கடந்து எதிர்நோக்கியோ பின்னோக்கியோ செல்லுதல் இயலாது. இலக்கியம் ஒன்றுதான் கடந்த காலத்திற்கும் ஒருவனை அழைத்துச் செல்லும் ஆற்றலுடையது. அரசியல், சமுதாயம் இன்ன பிற வரலாறுகள் மக்களைக் கடந்த காலத்திற்கு அழைத்துச் செல்லும் பெற்றியுடையன என்று எண்ண இடமுண்டு. ஆயின், அத்தகைய எழுத்து வடிவங்கள் நாள்களையும் ஆண்டுகளையும் மட்டுமே உண்மையாகக் காட்டுகின்றன. மனிதம் என்னும் மாண்பினை அவை மெய்ப்பிக்கின்றனவா என்றால் இல்லை என்றே விடைகூற வேண்டியிருக்கும். இலக்கியத்தின் வடிவத்தில், ஒருவன் உணர்வில் செல்லும்போது, பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மனிதன் என்ன எண்ணினான் என்பதை அறிதல் கூடும். உணர்ச்சியும் கற்பனையும் மனித எண்ணங்களின் வடிவங்களாகும். பா இன வடிவங்கள் உணர்ச்சி, கற்பனை என்னும் இவற்றின் வடிகால்கள் ஆகும். இலக்கியம் பயில்வோரை எதிர்காலத்திற்கும் இட்டுச் செல்கிறது. மிகப் பழங்காலத்தில் மனிதன் என்னென்ன உணர்ச்சிகள் பெற்றிருந்தானோ அவ்வுணர்ச்சிகளும் கற்பனைகளும் இன்றும் மக்களிடையே உண்டு; அவை உருவான சூழல்கள் தாம் வேறானவை. இலக்கிய வடிவங்கள் காலங்கடந்து நின்று படைப்பாளிகளின் எண்ணங்களைப் படிப்பவர் மனத்தில் குன்றாமல் குறையாமல் மிகுவிக்கும் நோக்கினையும் உடையவை. அறிவுத்திறன் உணர்ச்சிகளுக்கும் கற்பனைகளுக்கும் இடனாக உள்ள இலக்கிய வடிவத்தில் அறிவுத் கிறன் என்றும் கூறு இன்றியமையாததாகும். அறிவியல் உண்மைகளோடு இலக்கிய அறிவுத் திறனை ஒப்பிடுதல் இயலாததாகும். ஆயினும், அறிவியல் கருத்துகளுக்கு முரணானவற்றை இலக்கியப்படுத்துதல் நன்றன்று. அவ்வாறு படைப்பாளி எழுத முற்படுவானாகில் அவன் இயற்றுவனவற்றை நியாயப்படுத்த வேண்டியிருக்கும். உலகம் உருண்டையானது என்று புலவன் பாடுதல் சாலநன்று. ஆயினும் உலகத்தைத் தட்டை எனக் கூறும்போது, குட்டை மனம் படைத்தோர்க்கு உலகம் தட்டையான தோற்றம் கொண்டது என நியாயப்படுத்த வேண்டியிருக்கும். அறிவியலில் உண்மைகளை நியாயப்படுத்த இயலாது; அறிவியல் உண்மைகள் மெய்ப்பிக்கப்படல் வேண்டும். நடப்பியல் உண்மைகள் (Realism) இலக்கியத்தில் நடைமுறை (Reality) உண்மைகள் அல்ல, உண்மைகளை உணர்ந்தவாறு காட்டுவதே நடப்பியல் உண்மைகளாகும். எல்லாக் காலங்களுக்கும் பொதுவான மானிட உண்மைகள் படைப்பாளிகளின் அறிவுத்திறன் என்னும் கூற்றின் வழியாகப் புலனாக்கப்படுதல் இலக்கியத்தின் தனித்தன்மையும் தலைமைத் தன்மையும் ஆகும். இலக்கிய வகைகள் இலக்கியத்தின் பொதுத் தன்மைகளைக் கூறும்போது அதன் சிறப்புத் தன்மையைக் காட்ட வேண்டும். இலக்கிய வகை (Genre) இலக்கிய வளர்ச்சிக்கு ஏற்ற மாறுதலைப் பெறுகிறது. உலக இலக்கிய வகைகளை இரண்டு பெரும் பிரிவுகளில் அடக்கலாம். ஒன்று, பாடுபொருளினால் ஏற்படும் இலக்கிய வகை. பிறிதொன்று, பாவினத்தால் தோன்றும் இலக்கிய வகை ஆம். பாட்டு அல்லது கவிதை என்னும் இலக்கிய வடிவமே காலத்தால் முற்பட்டது. முருகியல் இன்பக் கூறுபாட்டை மிக எளிய இனிய வடிவத்தில் கவிதை உணர்த்தும் திறன் பெற்றது. கவிதைக்குப் பின்னர்த் தோன்றிய உரைநடை அல்லது கட்டுரை இலக்கியங்களில் சுயசரிதைகளும், வாழ்க்கைக் குறிப்புகளும், நினைவுக் குறிப்புகளும், கடிதங்களும் இலக்கியம் என்னும் உயர்நிலை எய்தின. பல தத்துவ நூல்கள் இலக்கியமாகக் கருதப்படும் அளவிற்குத் திறத்தால் உயர்ந்தன. சொல்வன்மையைப் புலப்படுத்தும் பொழிவுகளும் தரத்தால் இலக்கிய மதிப்பினைப் பெற்றன. அகம், புறம் என்னும் வகையாக்கம் தமிழ் மொழி உலக இலக்கிய வகைக்கு விடுக்கும் செய்தியாகும். இலக்கியம் வாழ்க்கையின் எதிரொளி (Reflection) என்ற கருத்து மாறுதல் பெற்று, இன்று மனிதனின் வாழ்வியல், இலக்கியம் என்னும் ஊடகத்தின் மூலம் ஊடுருவிச் செல்லும்போது பல்வேறு கோணங்களில் (Refraction) பிரிந்து செல்கிறது என்ற கருத்து நிலவுகிறது. இத்தகைய இலக்கியக் கோணங்களை அளந்து உண்மைகளை நிறுவ ஒப்பீட்டறிஞர் ஈடுபட்டுள்ளனர். கதிர்.ம. துணை நூல்கள் Butcher, S.H., Aristotle's Theory of Poetry and Fine Arts, Translated with Critical notes, 1951. Chadwick, H.M. and Chadwick (NK), Growth of Literature Vol. I & II, Cambridge University Press, 1932 & 1936. Hudson, W.H., An Introduction to the Study of Literature, 1957. Rene Wellek & Austin Warrn, Theory of Literature, 1966. Winchester, C.T., Some Principles of Literary Criticism, 1950.