உச்சப் பணவீக்கம்
uccap paṇavīkkam
பொருளாதாரத்தில் பணத்தின் அளிப்பு மிகுந்து மதிப்புக் குறைந்து, விலைகள் எவ்வகைப் பணவியல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கும் கட்டுப்படாமல் வெகுவேகத்தில் உயர்ந்து கொண்டு செல்லுதலே உச்ச விலையேற்ற நிலையாகும்.
பொருளாதாரத்தில் பணத்தின் அளிப்பு மிகுந்து மதிப்புக் குறைந்து, விலைகள் எவ்வகைப் பணவியல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கும் கட்டுப்படாமல் வெகுவேகத்தில் உயர்ந்து கொண்டு செல்லுதலே உச்ச விலையேற்ற நிலையாகும். இவ் உச்சப் பணவீக்கத்தைத் (Hyper Inflation) தாவி ஓடும் பணவீக்கம் (Galloping Inflation) என்றும் தப்பி ஓடும் பணவீக்கம் (Runaway Inflation) என்றும் குறிப்பிடுகின்றனர். இந்நிலையில் விலைகள் தொடர்ந்து உச்ச வரையறையின்றி உயர்ந்து கொண்டே செல்லும், பணவியல் வல்லுநர் பிலிப் கேகன் (Phillip Cagan) கருத்துப்படி விலைகள் 50 விழுக்காட்டு வீதத்தில் உயரத் தொடங்கும் நிலை உச்சப் பணவீக்க நிலைக்கான தோற்றமாகும். பெரும்பாலும் அரசு மிகுந்த பணத்தை வெளியிடும் போது அதற்கு ஈடாக உற்பத்திப் பெருக்கம் இல்லாத காலங்களில் உச்சப் பணவீக்கம் தோன்றுகின்றது.
உச்சப் பணவீக்க நிலையில் தொடர்ந்து விலையேற்றம் ஏற்படுமாகையால் பொருளாதாரத்தில் அடிப்படை மாற்றங்கள் நிகழும், மிகுதியான பண அளிப்பு (Quantity of Money) குறைந்த அளவு பண்டங்களையும் பணிகளையும் பெற முனைவதால் உற்பத்தி, வேலை, வருமானம் ஆகியவற்றின் தேவை நிறைவு செய்ய இயலாத வீதத்தில் பெருகும். உற்பத்தியாளர், முதலீட்டாளர், விற்பனையாளர் போன்றவர்களுக்குத் தங்களின் முதலீடும் முயற்சியும் ஆதாயத்தை ஈட்டும் என்ற எதிர்பார்ப்- பையும் நம்பிக்கையையும் ஊக்கத்தையும் உச்சப் பணவீக்க நிலை அளிக்காது. முதலீட்டுச் செலவு, நுகர்வுச் செலவு, மூலவளம், ஊதியம் போன்ற உற்பத்திக் காரணிச் செலவு ஆகியன உயருவதால் உற்பத்திப் பெருக்கம் இருக்காது. தொடர்ந்து விலை ஏற ஏற பண்டங்கள் பணிகளுக்கான தேவை அவற்றின் அளிப்பைக் காட்டிலும் மிகுதியாகும். இந்நிலையில் தேவையான உற்பத்திப் பெருக்கமின்றிப் பொருளாதாரச் சீர்குலைவு ஏற்படும். பணமதிப்பு இயல்புக்கு மாறான பேரளவில் கீழிறங்குவதால், சேமிப்பும் பாதிக்கப்பட்டு மூலதன இழப்புகளும் நிகழும், பண நடவடிக்கைகள் செயலிழந்து கடன் கொடுத்தவர்களுக்கு இழப்பும், கடன் பெற்றவர்களுக்கு ஆதாயமும் ஏற்படும். நிதிநிறுவனங்களும் வங்கிகளும் நொடிப்பு நிலையை (Bankruptcy) அடைந்து நிதி நெருக்கடி உண்டாகும்.
பொருளாதார அமைப்புச் சீர்குலைந்து சமுதாயத்திலும் அமைதியற்ற விளைவுகளை உச்சப் பணவீக்க நிலை உருவாக்கும். செல்வர்கள் மேலும் செல்வர்களாகவும் ஏழைகள் மேலும் ஏழைகளாகவும் மாறும் சூழ்நிலை உணரப்படும். செல்வமும் பணமும் பெருகினாலும் அவற்றின் உண்மை மதிப்பு மிகவும் குறைவாயிருக்கும். வருவாயின் உண்மை மதிப்பும் விரைவாகக் கீழிறங்கும் போக்கையுடையதாயிருக்கும். உயர் ஊதியத்திற்கான போராட்டங்களும், வணிகர்களிடையே ஒழுங்கீனமும், ஆதாயத்திற்காக எதையும் செய்ய நாடும் மனப்பான்மையும் நிலவும். மக்களிடையே மன நிறைவின்மையும், அரசின் மீதும் செலவாணியின் மீதும் அவநம்பிக்கையும் ஏற்படும்.
உச்சப் பணவீக்கம் பொதுவாக அடிக்கடி நிகழாத அரிய நிலையாகும். இதனால், இயல்பான சமூகப் பொருளாதார நிலையில் முறிவுண்டாகும். உச்சப் பணவீக்கம் பெரும்பாலும் போர் அல்லது அரசியல் சமூகப் பொருளாதாரப் புரட்சிக் காலத்தில் அல்லது அவை முடிந்த உடன் நிகழும் தன்மையுடையது என்பதற்கு வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. செருமனியில் 1923–ஆம் ஆண்டில் ஒரு திங்களில் மட்டும் விலைகள் 2500 விழுக்காடு உயர்ந்தது. அக்காலத்தில் அந்நாட்டின் செலாவணியான மார்க்கு (Mark) அதன் முந்திய மதிப்போடு ஒப்பிடுகையில் 3 மிலியனில் 1 பங்கு என்ற அளவுக்கு வீழ்ந்துவிட்டது. இவ்வகையான பணவீக்கம் இரண்டாம் உலகப் போர் முடிந்த உடன் கிரேக்கம் (Greece), சீனா, அங்கேரி (Hungary) போன்ற நாடுகளில் ஏற்பட்டன. போருக்கு முந்தைய அங்கேரி நாட்டு ஒரு பென்கோ (Peugo) 1946–இல் 828 ஆக்டிலியனாக (828 Octillion, with 27 Zeros) மதிப்பிடப்பட்டது என்பது உச்சப் பணவீக்கத்தின் தன்மையை விளக்குகிறது.
உச்சப் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த அரசும் மக்களும் திட்டமிட்டு ஒருங்கிணைந்து செயற்படுதல் இன்றியமையாதது. பணவியல் நடவடிக்கைகள், நீதியியல் நடவடிக்கைகள், நேரடி, மறைமுக நடவடிக்கைகள் ஆகியவற்றால் பொருளாதாரத்தில் மறுமலர்ச்சியை உருவாக்கி உற்பத்தியைப் பெருக்க வேண்டும். நீண்ட கால, குறுகிய கால, அவசர காலத் திட்டங்களின் வளர்ச்சிக்கு மூலம் இன்றியமையாத் துறைகளின் முன்னுரிமை அளித்து, பண்டங்கள், பணிகள் ஆகியவற்றின் தேவையைக் குறைப்பதற்கும் அளிப்பைப் பெருக்குவதற்கும் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் நற்பலன் தரும். நீண்டகாலப் பொதுநலன் கருதி அரசு மக்களும் பேரளவில் தங்கள் கடும் உழைப்பை விட்டுக்கொடுக்கும் (Sacrifice) மனப்பான்மையில் மனநிறைவைப் பெறுதலே மேலும் விலைகள் ஏறாமல் நிலைமையை முன்னேற்றத்திற்கு நேராகத் திருப்ப வழிகோலும். காண்க: பணவீக்கம்.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 732)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/cyuzb7rx/
தமிழ்“உச்சப் பணவீக்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/cyuzb7rx/APA
Oliyon Research. (2026). உச்சப் பணவீக்கம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/cyuzb7rx/MLA
"உச்சப் பணவீக்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/cyuzb7rx/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment