அந்தாதி இலக்கியம் என்பது, 95 வகைப் பிரபந்தங்கள் என்று தமிழ் மொழியில் தொகைப்படுத்திக் கூறப்படும் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்றாகும். அந்தாதி என்னும் சொல் அந்தம் - ஆதி என்று பிரியும். அந்தம் – முடிவு என்றும், ஆதி தொடக்கம் என்றும் பொருள்படும். அதனால், ஒன்- றின் முடிவு மற்றொன்றின் தொடக்கமாக அமைவது என்பது இப்பெயர்ப் பொருளாகும். அந்தாதி, அந்தாதித் தொடை என்றும் செய்யுள் அந்தாதி என்றும் பாகுபடும். ஒரு செய்யுளின் இரண்டடிக்கு இடையே அமைந்துள்ள அந்தாதி அமைப்பு அந்தாதித் தொடை என்றும், ஒரு செய்யுளின் இறுதி அடுத்த செய்யுளின் தொடக்கமாக அமைவது செய்யுளந்தாதி என்றும் சொல்லப்படும். செய்யுளந்தாதியில் ஒரு செய்யுளின் முடிவிலுள்ள எழுத்தோ அசையோ, சீரோ, சொல்லோ, அடியோ அடுத்த செய்யுளின் தொடக்கமாக அமையும். இவற்றுள் எது அமைகிறதோ அதன் பெயரால் அந்த அந்தாதி பெயர் பெறும். சான்றாக, ஒரு பாடலின் இறுதிச் சொல் அடுத்த பாடலின் தொடக்கத்தில் அமைகின்ற போது அந்தச் சொல்லமைப்பு, சொல்லந்தாதி எனப்படும். எழுது பொருள், எழுதப்படுபொருள், எழுது கருவிகள் போன்றன பழங்காலத்தில் கிடைப்பது அரிதாக இருந்தது. அதனால் ஏடெழுதி இலக்கியங்களைப் படிப்பதைவிட மனனம் செய்து படிப்பதைப் பெரிதும் விரும்பினர். விரிவாக எழுதப்படும் செய்திகள், திட்பமும் நுட்பமும் பொருந்தச் செய்யுளாக அமைக்கப்பட்டன. இவ்வாறு அமைக்கப்படும் செய்யுளை முழுதுமாக மனத்திற் கொள்வதற்கு அதன் உறுப்புகளாகிய எதுகை, மோனை, முரண் முதலிய தொடைகளும், அவற்றின் வகைகளும் பிறவும் உதவின. இத்தகைய செய்யுட்கள் பலவற்றைத் தொடர்ந்து நினைவிற் கொள்வதற்கு அந்தாதிமுறை பேருதவியாக அமைந்தது. அந்தாதி யாப்பமைப்பில் நூல்கள் பிற்காலத்தில் தான் தோன்றின என்றாலும், சங்க இலக்கியங்களில் அந்தாதி அமைப்பிற்கான கருக்கள் அமைந்து காணப்படுகின்றன. பதிற்றுப்பத்தின் நான்காம் பத்தும், ஐங்குறு நூற்றின் தொண்டிப் பத்தும் அந்தாதி யாப்பு முறையில் அமைந்துள்ளன. மேலும், தொகைநூற் செய்யுள்கள் சிலவற்றின் சில அடிகளில், அந்தாதி அமைப்பினைக் காணமுடிகிறது (புறம். 2; நற். 95; சிறு. 14–28). அவ்வாறே சிலப்பதிகாரத்தின் கானல்வரிப் பாடல்கள் சிலவற்றின் இடையே, அந்தாதி யாப்பு அமைந்து காணப்படுகின்றது (2–4; 11–13; 20–23; 25–27; 34; 36; 43–46–48). பல சிற்றிலக்கிய வகைகளைத் தோற்றுவித்தவர்கள் பக்திக் கவிஞர்கள். அதற்குப் பத்திப் பொருண்மை காரணம். அவ்வகையில் அந்தாதி இலக்கியத்தை முதலில் தோற்றுவித்தவர் காரைக்கால் அம்மையார் ஆவர். அவர் இயற்றியுள்ள அற்புதத் திருவந்தாதி இதுகாறும் தமிழிற் கிடைத்துள்ள அந்தாதி இலக்கியங்களுள் முதலாவதாக அமைந்து விளங்குகிறது. ஆழ்வார்களின் பக்திப் பனுவல்களிலும், நாயன்மார்களின் பதிகங்களிலும் அந்தாதி அமைப்புப் பயின்று வந்துள்ளது. பதினோராம் திருமுறையிலுள்ள பல நூல்கள் அந்தாதி இலக்கிய வகையில் அமைந்துள்ளமையால் அத்திருமுறை ‘அந்தாதி மாலை’ என்றும் சொல்லப்படுகிறது. திருவாசகத்தில் திருச்சதகம், நீத்தல் விண்ணப்பம், கோயில் மூத்த திருப்பதிகம், கோவில் திருப்பதிகம், பிரார்த்தனைப் பத்து, குழைத்தபத்து, யாத்திரைப்பத்து ஆகியன அந்தாதி முறையில் அமைந்துள்ளன. நாலாயிர திவ்வியப் பிரபந்தத்துள் முதலாழ்வார்களின் அருளிச்செயல்கள், திருவாய்மொழி முதலிய பல பிரபந்தங்கள் அந்தாதி யாப்பில் அமைந்துள்ளன. திருமந்திரத்தில் பல பகுதிகளை அந்தாதி அமைப்பில் திருமூலர் படைத்துள்ளார். திருஞானசம்பந்தர், ‘பிரமபுரத்துறை’ என்று தொடங்கும் பதிகத்தை இயமக அந்தாதி என்னும் வகையில் பாடியுள்ளார். அந்தாதித் தொடையின் நடைநலமும் ஓசை நயமும் மக்கள் உள்ளத்தைக் கொள்ளை கொண்டன. எளிதில் உள்ளத்தில் தங்குவனவாகவும் அமைந்தன. எனவே, அந்தாதித்தொடை அமைந்த நூல்களைப் புலவர்கள் படைக்கத் தொடங்கினர். கி.பி. ஆறு, ஏழாம் நூற்றாண்டுகளில் இவ்வகை இலக்கியங்கள் மிகுதியாகத் தோன்றிப் பரவலாயின, அந்தாதி நூல்கள் தொடக்கத்தில் எளிமையும் இனிமையும் மிக்கனவாய்ப் படைக்கப்பட்டன. அவற்றில் நடை நலமும் தொடை நலமும் சிறந்திருந்தன. இலக்கிய வகைகளுக்கு இலக்கணம் கூறும் பாட்டியல் நூல்கள், ஒலியந்தாதி, பதிற்றந்தாதி நூற்றந்தாதி, கலியந்தாதி என்று அந்தாதியை நான்காகப் பகுத்துக் கொண்டு இலக்கணம் தந்துள்ளன. மேலும், இயமக அந்தாதி, திரிபு அந்தாதி, நிரோட்டக யமக அந்தாதி, சிலேடையந்தாதி போன்றனவும் அந்தாதி இலக்கியங்களின் வகைகளாக அமைந்துள்ளன. ஒலியின் அடிப்படையில் பெயர்பெற்றது ஒலியந்தாதி. இதனை ஒலியலந்தாதி எனவும் கூறுவர். இதன் ஒவ்வொரு அடியிலும் பதினாறு கலை வைப்புகள் அமையவேண்டும். நான்கு அடிகளிலும் (16×4=64) அறுபத்து நான்கு கலை வைப்புகள் அமைய அந்தாதி யாப்பில் பாடப்படும். வெண்பா, கலித்துறை, அகவல் போன்றன இவ்வகை அந்தாதிகளில் யாப்பாக அமைகின்றன. இது முப்பது பாடல்களைக் கொண்டு அமைகிறது. பதிற்றந்தாதி என்பது பத்துப் பாடல்களைக் கொண்டது என்று பொருள்படும். வெண்பா அல்லது கலித்துறை இதன் யாப்பாக அமைகிறது. நூறு பாடல்களைக் கொண்ட அந்தாதி நூற்றந்தாதி எனப்படும். நூறு வெண்பாக்கள் அல்லது நூறு கலித்துறைப் பாக்கள் இவ்வகை அந்தாதிகளில் இடம்பெறும். வெண்பா நூறு கொண்டது வெண்பா அந்தாதி என்றும், கலித்துறைப் பாக்கள் நூறு கொண்டது கலித்துறை அந்தாதி என்றும் பெயர் பெறும். ஒவ்வொரு பத்துப் பாடலும் தனித்தனிச் சந்தங்களில் அமைக்கவும் படும். இவ்வாறு அமையும் அந்தாதி பதிற்றுப்பத்து அந்தாதி எனப்பெயர் பெறும். குட்டித் திருவாசகம் என்னும் திருக்கருவைப் பதிற்றுப்பத்து அந்தாதி இவ்வாறமைந்ததாகும். திருவாசகத்திலுள்ள திருச்சதகம் இவ்வாறு அமைந்துள்ள போதிலும் இப்பெயர் பெறாது திருச்சதகம் எனவே பெயர் பெற்றுள்ளது. நமக்குக் கிடைக்கின்ற அந்தாதிகளுள், இவ்வகை அந்தாதிகள் மிகுதியான எண்ணிக்கையில் உள்ளன. இவ்விரண்டிலும் முதலில் தோன்றிய வெண்பா அந்தாதிகள் எண்ணிக்கையில் மிகுந்தும், கலித்துறை அந்தாதிகள் அதனை அடுத்தும் காணப்படுகின்றன. ஒலியந்தாதி போன்று கலியந்தாதியிலும் கலை வைப்பு இடம் பெறுகிறது. ஒலியந்தாதியில் அறுபத்து நான்கு கலை வைப்பு அமைய, கலியந்தாதியில் அக்கலை வைப்பு முப்பத்திரண்டாகக் குறைகிறது. இயமக அந்தாதி என்பது சொல்லணியால் பெயர் பெற்றது. பாட்டின் நான்கு அடிகளிலும் முதற் சீரில் வந்த எழுத்துகளே திரும்ப வரும். ஆனால் அவற்றைப் பிரித்துப் பொருள் காணும் போது நான்கு முதற்சீர்களும் நான்கு வேறு பொருள்களைத் தரும். இத்தகைய மடக்கை வடமொழியாளர் இயமகம் என்றுரைப்பர். இவ்வகைப் பாடல்களில் அமைந்த அந்தாதி இயமக அந்தாதி எனப்பட்டது. இந்த இயமகம், ஐந்தெழுத்திற்கு மேற்பட அமைவது சிறப்பானதாகவும், அதற்குக் குறைவது சிறப்பற்றதாகவும் கருதப்படுகிறது. திரிபந்தாதி என்பது சொல்லணி வகையில் பெயர் பெற்றதாகும். ஒரு செய்யுளின் நான்கடிகளிலுமுள்ள முதல் எழுத்துகள் மட்டும் மாறுபட்டுத் திரிந்து அமையும். ஏனைய எழுத்துக்கள் பலவும் ஒத்து வரப் பொருள் வேறுபட்டு அமையும். இத்திரிபு அந்தாதியும் ஐந்து எழுத்திற்குக் குறைவாகவரின் சிறப்பற்றதாகக் கருதப்படும். இவ்வகை அந்தாதிகளைப் படைப்பது எளிதன்று. இதற்குச் சொற்பயிற்சி, பொருள் கொள்ளும் முறை போன்றவற்றில் மிக்க புலமையும் பழக்கமும் தேவைப்படுகின்றன. இதழ்கள் ஒன்றோடொன்று ஒட்டாத எழுத்துகளை அமைத்து அந்தாதிமுறையில் பாடப்படுவது நிரோட்டக யமக அந்தாதியாகும். ப, ம இரண்டும் இதழொலிகள். எனவே இவ்வகை அந்தாதியில் இவ்விரு எழுத்துகளும் இடம்பெறாத சொற்கள் பயின்றுவரும். இதழ்கள் ஒன்றோடொன்று ஒட்டாமல் அகல்வதால் இதனை இதழகல் அந்தாதி என்றும் கூறுவர். இதற்கு வரையறை நூறு பாடல்கள். சிலேடை வெண்பா (திருக்குற்றாலச் சிலேடை வெண்பா), சிலேடை மாலை (திருவரங்கச் சிலேடை மாலை), சிலேடை உலா (சிலேடை உலா, தத்துவராயர்), சிலேடைப் பதிகம் (சிலேடைப் பதிகம்) போன்ற சிற்றிலக்கிய வகைகள் பலவும் சிலேடை முறையில் அமைக்கப்பட்டுள்ளமை போன்று, சிலேடை வகையில் அமைந்த செய்யுட்களாலாகிய அந்தாதி, சிலேடை அந்தாதி எனப்படும். ஒன்றிற்கு மேற்பட்ட பொருள்தருமாறு அமைந்த பாடல்களைக் கொண்ட அமைப்பில் இயற்றப்படுவது இது. இவ்வகை அந்தாதிகள் எண்ணிக்கையில் குறைந்தே காணப்படுகின்றன. மேற்குறிப்பிட்ட அந்தாதி வகைகளேயன்றி, வேறு சில அந்தாதி வகைகளையும் காணலாம். இவை பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியிலும் பத்தொன்பதாம் நூற்றாண்டிலும் வாழ்ந்த தமிழ்ப் புலவர் பெருமக்களால் உருவாக்கப்பட்டவை. இவற்றுள் குறிப்பிடத்தக்க சிலவற்றின் பெயர்கள் வருமாறு:– உயிரெழுத்து அந்தாதி, ஓரெழுத்து அந்தாதி, ஓரெழுத்து இயமக அந்தாதி, பஞ்சாட்சர அந்தாதி, ஆறெழுத்து அந்தாதி, கொம்பிலா வெண்பா அந்தாதி, ஒலியல் அந்தாதி, முதலொலியல் அந்தாதி, நடுவொலியல் அந்தாதி, சந்தக்கலித்துறை அந்தாதி, கலிவிருத்த அந்தாதி, இயமகக் கலித்துறை அந்தாதி, ஒரு தொடைச்செய்யுள் நிரோட்டக அந்தாதி, நிரோட்டகத் தலைச் செய்யுள் அந்தாதி, தலையணிச் சீரிதழகல் அந்தாதி, இரு சொல் இயமக அந்தாதி, நூற்றெட்டு வெண்பா அந்தாதி, சதகத்து அந்தாதி, பல் சந்த அந்தாதி, திரிபு வெண்பா அந்தாதி. அந்தாதித் துறையில் நூல்கள் பெருகப்பெருக அருஞ்சொற்களும், கடினச் சொற் புணர்ச்சிகளும் பாடல்களில் இடம் பெறலாயின, அந்தாதி நூல் இரட்டுற மொழிதல், மூன்றுற மொழிதல், நான்குற மொழிதல், ஐந்துற மொழிதல், ஆறுற மொழிதல் எனப் பலவகையில் சென்றது. அதற்குப் பலவகையாகச் சொற்களைப் பிரித்துப் பொருள் கொள்ள வேண்டியிருந்தது. அதனால் சுவைப்போர்க்குப் பல இன்னல்களைத் தந்தது. திரிபு, மடக்கு (இயமகம்) போன்றன இப்பாடல்களில் மிகுதியாக அமைந்து இவற்றைப் படைக்கின்ற புலவரைச் சோதனை செய்யும் புலமைக் கருவிகளாய் அமைத்துவிட்டன. இதனால் இயல்பாக நுகரும் கவியின்பம் தடைபட்டது; உணர்வு குன்றியது. ஆற்றொழுக்கு நடையின்றிக் கரடு முரடான சந்திகள் வந்து, படிப்பாரை மேலும் படிக்கத் தூண்டாது தடுக்கும் தடைகளாக இவ்வகை யாப்பு அமையலாயிற்று. அந்தாதி இலக்கியம் தொடக்கக் காலத்தில் வெண்பாவை யாப்பாகக் கொண்டமைந்தது. முதல் அந்தாதியான காரைக்கால் அம்மையாரின் அற்புதத் திருவந்தாதி, வெண்பா யாப்பில் அமைந்துள்ளது. அடுத்து, அந்தாதி அமைப்பில் பாடல்களை அமைத்த முதல் ஆழ்வார்கள் மூவரும் வெண்பாவையே பயன்படுத்தியுள்ளனர். பின்னர் அந்தாதி இலக்கியங்கள் பெருகியபோது, பாலினங்களாகிய விருத்தம், கட்டளைக் கலித்துறை போன்றனவும் அந்தாதிப் படைப்பாளர்களால் பயன்படுத்தப்பட்டுள்ளன.தா.அ. அந்தாதி இலக்கியங்களேயல்லாமல், இரட்டை மணிமாலை, மும்மணிமாலை, நான்மணிமாலை, நவமணிமாலை, அட்டமங்கலம், ஒருபா ஒருபஃது முதலான வேறு பல சிற்றிலக்கிய வகைகளும் அந்தாதி யாப்பில் அமைந்துள்ளன. அவற்றினை அந்தாதி என்ற பெயராற் குறிப்பிடுவதில்லை. இறைவன் பெயர், திருத்தலப் பெயர், அடியார் பெயர், பாவகை, செய்யுள் எண், இயல்பு போன்றவற்றின் அடிப்படையில் அழகரந்தாதி, அருணை அந்தாதி, திருத்தொண்டர் திருவந்தாதி, வெண்பா அந்தாதி, பதிற்றுப்பத்தந்தாதி, சிவபூசை அந்தாதி என்பனவாக அந்தாதி இலக்கியங்கள் பெயர் பெறுகின்றன. அந்தாதி இலக்கியவகை பிற்காலத்தில் தோன்றி வளர்ந்ததாயினும், இன்று கிடைத்துள்ள 850க்கும் மேற்பட்ட அந்தாதிப் பெயர்களால் இவ்விலக்கிய வகை மக்களிடையே பெற்றுள்ள செல்வாக்கினை உணரமுடிகிறது.