இராமச்சந்திரன் செட்டியார், சி.எம்
irāmaccantiraṉ ceṭṭiyār, ci.em
கோயம்புத்தூரில் 3.11.1888-இல் பிறந்தார்.
கோயம்புத்தூரில் 3.11.1888-இல் பிறந்தார். இவர் தந்தை மருதாசலம் செட்டியார்; தாய் கோனம்மாள். இராமச்சந்திரன் தமது ஆறாம் வயதில் நகரசபைத் கொடக்கப் பள்ளியிற் கல்வி பயின்றார். இவர் 1904–இல் பள்ளியிறுகித் தேர்வில் வெற்றி பெற்றார். மாநிலக் கல்லூரியில் சேர்ந்து 1908–இல் பி.ஏ. தேர்ச்சியும், பின்னர் நான்கு ஆண்டுகள் சட்டக்கல்லூரியில் பயின்று 1912–இல் பி.எல். தேர்ச்சியும் பெற்றார்.
இவருக்குக் கோவை நகரில் புகழ்பெற்ற தமிழறிஞா்சுளாக விளங்கிய திருச்சிற்றம்பலம்பிள்ளை, சபாபதிப் பிள்ளை என்பவர்கள் தமிழ் அறிவு ஊட்டினர். சென்னையிலிருந்த காலத்தில் டாக்டர் உ.வே. சாமிநாத ஐயரிடம் தமிழ்க் கல்வி பயின்றார்.
இவர் வடமொழி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் நல்ல பயிற்சி பெற்றார்; இந்து, உருது, மலையாளம் ஆகியனவும் அறிவார்.
சட்டப்படிப்பு முடித்தவுடன் இவர் கோவையில் வழக்குரைஞராகத் தொழில் தொடங்கினார். தொழிலில் நேர்மையுடன் நடந்து பெரும் புகழீட்டினார். இவர் 1940 முதல் ஓய்வுபெறும் வரை இந்து அறநிலையத் துறையில் ஆணையாளராகப் பணியாற்றினார். தொழில் நடத்திய காலங்களில் பல நிறுவனங்களின் நிலையங்களில் கழகங்களில் பங்கு கொண்டு பணியாற்றினார். கோவைத் தமிழ்ச் சங்கத்தை சி.கே. சுப்பிரமணிய முதலியார் தலைவராய் இருக்க இவர் செயலாளராய் இருந்து நடத்தி வந்தார். சென்னைச் சுவடிகள் நூலகம், தஞ்சைச் சரசுவதி மகால் நூலகம் ஆகியவற்றிலும் இவர் உறுப்பினராய் இருந்தார். ஆங்கில அரசாங்கப் பூவியல் சங்கத்தில் இவர் ஓர் உறுப்பினர்.
கல்வி பயிலும் காலத்தில் சென்னனயில் சில இயக்கங்களோடு தொடர்பு கொண்டு மதுவிலக்குப் பிரச்சாரம் முதலியன செய்தார். கோவைப் பகுதியில் கிராம ஊழியர் சங்கத்தில் சேர்ந்து ஊர்ப்புறங்களில் சுகாதாரம் பற்றிச் சொற்பொழிவுகள் ஆற்றியுள்ளார். சிறைக் கைதிகளுக்குக் கல்வியறிவு, ஒழுக்க, சமய போதனைகள் செய்தார்.
கோவில்களில் திருமுறை ஓதுதல், எழுதுதல் முதலியன செய்வித்தார். பல புலவர்களைக் கொண்டு தலவரலாறு முதலியன எழுதுவித்து அவர்களுக்கு ஊதியம் கிடைக்க வகை செய்தார். சமயச் சொற்பொழிவாளர் பலரை நியமித்தார். ஆலயத் திருக்குடமுழுக்கு விழாவில் அபிடேகங்கள் ஆகம முறைப்படி நடக்க வேண்டும் என்பதில் ஆர்வம் உடையவர். தமிழில் அருச்சனை செய்யும் முறையையும் தொடங்கினார். சைவசித்தாந்த சமாசத்தில் பங்கு கொண்டு பல பணிகள் ஆற்றியிருக்கிறார்.
மாவட்டக் கல்விச் சங்கம், மத்திய கல்விச் சங்கம் ஆகியவற்றில் தலைமைப்பகுதி பெற்றதால் தொடக்கக்கல்வி முறையைச் சீர்திருத்தி அமைத்தார். மிகுதியான பள்ளிகள் தொடங்க ஏற்பாடு செய்தார். ஆசிரியர்களுக்கு வீடுகள் அமைத்துக் கொடுக்கப் பாடுபட்டார்.
கோவை மாவட்ட நூலகக் குழுவின் தொடக்க காலத்தில் தலைவராய் இருந்து சிறந்த முறையில் நூலகம் உருவாவதற்கும் பல கிளைகள் தோன்றுவதற்கும் அரும்பாடுபட்டார்.
இவர் கல்லூரியில் இயற்பியல், சட்டம் பயின்றிருப்பினும் தமிழ் இலக்கியத்தில் நல்ல புலமை பெற்றிருந்தார். உரைநடையாகவும் செய்யுளாகவும் பல நூல்களை ஆக்கியுள்ளார். ஆங்கிலக் கட்டுரைகள் பலவற்றை மொழி பெயர்த்துள்ளார். தமிழ்நாட்டின் வரலாறுகளையும் புலவர்களின் வரலாறுகளையும் கல்வெட்டின் துணைக்கொண்டு ஆய்ந்து தெளிவு செய்துள்ளார்.
மயிலம் தமிழ்க் கல்லூரியும், தருமபுரம் கல்லூரியும் தோன்றுவதற்கு இவர் பெரிதும் உதவி செய்தார். பேரூர்த்தமிழ்க் கல்லூரிக் கழகம் என்னும் பெயரில் ஒரு கழகம் நிறுவப்பெற்று, அதில் கோவை கிழார் செயலாளராய் இருந்து பணியாற்றினார். பல்கலைக்கழகத்தாருடன் தொடர்பு கொண்டு அனுமதி பெற்று, 1953–ஆம் ஆண்டில் பேரூர்த் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் திருமடத்தில் தமிழ்க் கல்லூரி தொடங்கப்பெற்றது. தொடக்கத்தில் கல்லூரி முதல்வராகவும், பொருளாளராகவும் இருந்து பணியாற்றினார்.
திருமடத்தின் சார்பில் உயர்நிலைப்பள்ளி தொடங்குவதற்கும் இவர் மிக உதவியாய் இருந்தார். மற்றும் சிரவணபுரம் கௌமார மடாலயத்தில் நடைபெறும் விழாக்கள் பலவற்றிலும் கலந்து சிறப்பித்தார்.
இவர் கோவைத் தமிழ்ச் சங்கத்தில் செயலாளராய் இருந்த காலத்தில் ‘கொங்குமலர்’ என்னும் மாத இதழுக்கு ஆசிரியராக இருந்து 1934 முதல் 1937 வரை நடத்தி வந்தார். அதில் இவர் பல ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதியுள்ளார். அவற்றுள் சில நூல்களாக வெளியிடப்பட்டுள்ளன. சென்னைச் சைவசித்தாந்த சமாசத்தின் இதழான சித்தாந்தத்திற்கு 1947–53 வரை ஆசிரியராக இருந்து நடத்தினார்.
சென்னை அரசாங்கக் கையெழுத்து நூலகத்தில் உறுப்பினராய் இருந்து சோழன் பூர்வ பட்டயம், கொங்குதேச ராசாக்கள், பேரூர் ஆகிய நூல்களையும் தஞ்சை சரசுவதி மகால் நூலகத்தில் உறுப்பினராய் இருந்து இராமப்பய்யன் அம்மானை என்னும் நூலையும், தமிழிசைக் கருவிகள் எனும் நூலையும் பதிப்பித்திருக்கின்றார்.
இவர் எழுதியுள்ள சிறுகட்டுரைகள், ஆராயச்சிகள், வரலாறுகள், பயண நூல்கள், செய்யுள் நூல்கள் கணக்கிலடங்கா. பல அச்சிட்டு வெளியிடப்பட்டன. வெளிவராதன மிகப்பல. இவர் எழுதிய பெரும் ‘கொங்குநாட்டு வரலாறு’ என்னும் நூல் பெரும் பாராட்டுதலைப் பெற்றுள்ளது. இதனை அண்ணாமலைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. இவர் எழுதி வந்துள்ள நாட்குறிப்புகளின் தொகுப்புகள் நாற்பதிற்கு மேல் உள்ளன. சா.இரா.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 102)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/cy42ray3/
தமிழ்“இராமச்சந்திரன் செட்டியார், சி.எம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/cy42ray3/APA
Oliyon Research. (2026). இராமச்சந்திரன் செட்டியார், சி.எம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/cy42ray3/MLA
"இராமச்சந்திரன் செட்டியார், சி.எம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/cy42ray3/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment