பிற்காலப் புலவர்களுள் ஊர்ப்பெயரால் பெயர் பெற்று விளங்கிய ஒரு பெண்பாற் புலவர். இவர்தம் இயற்பெயர், பெற்றோர் பெயர் முதலிய விவரங்கள் அறியக்கூடவில்லை. இவர் பாடியனவாக 11 பாடல்கள் கிடைத்துள்ளன. அவற்றுள் சில பிழைப்பட்டும் வடிவஞ் சிதைந்தும் உள்ளன. நாட்டுப் பாடல் போல அவை வழங்கப்பட்டன. இப்புலவர் பிறந்த ஊர் உத்தர நல்லூர். இது திருச்சி மாவட்டத்தில் காவிரிக்கு வடபால் விளங்கும் தேவாரப்பாடல் பெற்ற தலங்களுள் ஒன்றான திருப்பாச்சிலாச்சிராமத்தின் அருகில் உள்ளது. திருப்பாச்சிலாச்சிராமம் இக்காலத்தில் திருவாசி என்று வழங்கப்படுகிறது. இப்புலவர் தம் பாடல்களின் இறுதியில் குறிப்பிடப்படும் பாய்ச்சலூர் என்பது திருப்பாச்சிலாச்சிராமத்தினைச் சுட்டுவதாகலாம். இப்புலவர் பற்றிப் பின்வரும் வரலாறு கூறப்பட்டுள்ளது. இவர் நந்தனார் பிறந்த மரபில் தோன்றியவர். இப்பெண்பாற்புலவர் இளம்பருவத்தில் ஆற்றங்கரையருகே மாடு மேய்த்துக் கொண்டிருந்த போது நீராட வந்த ஓர் அந்தணச் சிறுவன் வேத மந்திரங்கள் ஓதிச் சந்தி வழிபாடு செய்வதனை வேடிக்கையாகப் பார்த்துக்கொண்டிருந்தார். நாள்தோறும் கண்ட அக்காட்சியில் ஈடுபட்ட இவர் அந்த மந்திரங்களைக் கூர்ந்து கவனித்துப் பின் அவற்றைக் கற்றுக் கொண்டார். சாதி வேற்றுமை இன்றி இருவர்பாலும் தோன்றிய நட்பு நாள்தோறும் வளர்ந்தது. நட்பு வளர்ந்ததுபோலவே, அவனிடமிருந்து கற்ற வேதக் கலைகளும் நிரம்பப் பெற்றார். மங்கைப் பருவமெய்திய பின்னரும் தொடர்ந்த நட்புக் காதல் வடிவங்கொண்டதைக் கண்ட ஊரார் உள்ளத்தில் சினத்தீ மூண்டது. இருசாராரும் அவர்களைக் கண்டிக்கலாயினர். சாதி வேறுபாட்டால் கொடுமை கொண்ட உள்ளத்தினர் அவர்களைப் பிரிக்க நினைந்து ஒருநாள் இரவு சேரியில் அவர்கள் இருந்த இடம் நோக்கிச் சினந்து சென்றனர். அதனைக் கண்டு இளைஞன் அஞ்சிய போதும் இப்பெண்பாற் புலவர் அஞ்சாது நின்று, தான் பெற்ற வேதக் கல்வியால் அவர்களை எதிர்த்துத் தடுத்து நின்று நல்லறிவு புகட்டினார். வேதக் கலையறிவும் உலகியல் ஞானமும் ஒருங்கு பெற்றிருந்த இவர், தம்மைத் தடுத்துக் கொடுமை புரியவந்த பாய்ச்சலூர் அந்தணர்களைப் பார்த்து வினவுவனவாகப் பதினொரு பாடல்கள் பாடியுள்ளார். அவ்விருத்தப் பாடல்கள் பாய்ச்சலூர்ப்பதிகம் எனப்படும். அப்பாடல்களுள் சில தமிழ் நாவலர் சரிதையில் இடம்பெற்றுள்ளன. சாதியினால் உயர்வு தாழ்வு கற்பித்து வேறுபாடு கொள்வது இயற்கைக்கு முரண்பட்டது என்பதனை அப்பாடல்கள் எளிமையாகவும் தெளிவாகவும் விளக்குகின்றன. மேலும் அவை பண்பால் ஒன்றுபடும் காதலர்களைச் சாதிச் சழக்கால் வேறுபடுத்த முற்படுவது கொடுமையானது என்பதனை நன்கு காட்டுகின்றன. உடல் தீப்பட்டபோது அமையும் நிலையினைச் சுட்டிக் காட்டிச் சாதி வேறுபாடு எங்கே என்று வினவும் நயமான பகுதி வருமாறு: ‘சந்தனம் அகிலும் வேம்பும் தனித்தனிக் கந்தம் நாறும், அந்தணர் தீயில் வீழ்ந்தால் அவர் மணம் வீசக்காணோம், செந்தலைப் புலையன் வீழ்ந்தால் தீ மணம் வேறதாமோ?’ இவ்வினா சாதிக் கொடுமையை விளக்கிச் சாடும் வினாவாகும். சாதிக் கொடுமையின் விளைவினை நேரே அனுபவித்துணர்ந்த இப்புலவர், அதற்குக் காரணமாக விளங்கிய மக்களை நோக்கி, ‘ஊருள பார்ப்பார் கூடி, உயர்ந்ததோர் சாலை கட்டி, நீரிலே மூழ்கி வந்து நெருப்பினில் நெய்யை விட்டுக், கார்வயல் தவளை போலக் கதறிய வேதந்தானும், பாரை விட்டகன்றதோதான் பாய்ச்சலூர்க் கிராமத்தாரே’ என்று வினவுவது, அவ்வேறுபாட்டிற்கான காரணத்தினை நேரே தாக்கும் கணையாக அமைந்துள்ளது. விருத்தப்பாடல்களில் அமைந்துள்ள இப்பாடல்களின் நடையும் கருத்தும் கபிலரகவல் என்னும் பிற்கால நூலின் நடையினையும் கருத்தினையும் ஒத்துக் காணப்படுகின்றன. அதனால் இப்புலவரின் காலம் கபிலரகவல் தோன்றியதாகக் கருதப்படும் கி.பி. 14 ஆம் நூற்றாண்டிற்குப் பிற்பட்டது என்று கருதுகின்றனர். இவர்தம் பாடலுட்சில தமிழ் நாவலர் சரிதையில் இடம் பெற்றுள்ளமையால் இவர் காலம், தமிழ் நாவலர் சரிதை தோன்றிய கி.பி. 17–ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்டதும் ஆகும். தமிழ் இலக்கிய வரலாற்றாசிரியர் திரு. மு. அருணாசலம் இவர் காலம் கி.பி. 15–ஆம் நூற்றாண்டாகலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.