கற்பனை ஓவியங்களை இயற்கையான தோற்றத்துடன் படைக்கும் ஆற்றல் கொண்ட பிரெஞ்சு ஓவியக் கலைஞர் ஆவார். இவர் கி.பி. 1841–ஆம் ஆண்டு இலிமோகே (Limoges) என்னும் ஊரில் பிறந்தார். இளம்பருவம் முதல் இரேனார் (Renoir) ஓவியக் கலையில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். இவர் இளம்பருவத்தில் ‘இரெம்பிராண்டு’ என்று கேலியாக அழைக்கப்பட்டார். இவர் 1862–ஆம் ஆண்டு பிரெஞ்சு கலைக் கல்லூரியில் (Ecole de Beaux–Arts) சேர்ந்து பயின்றார். கல்லூரியின் ஆசிரியர்கள் பிரெஞ்சுக் கலைமரபுக் கோட்பாடுகளுக்கும் விதிகளுக்கும் உட்பட்டு, ஓவியங்கள் தீட்டுமாறு இரேனாரிடம் கூறினர். இத்தகைய மரபுவழிச் சட்டதிட்டங்கள் தம் படைப்பாற்றலுக்குத் தடைகளாக இருப்பனவாக இரேனார் எண்ணினார். இவரின் கற்பனை உள்ளம் தம் காலத்தில் விளங்கிய ஓவியக்கலைஞர்களைத் தம் சிந்தனைத் திறனுக்கு ஈடுகொடுக்க முடியாதவர்களாகக் கருதிற்று. இரேனார் தொடக்க காலத்தில் தாம் வரைந்த ஓவியங்களைத் தரம் எண்ணி குறைந்தவை என அழித்துவிட்டார். இவர் தீட்டிய ‘தயானா’ (Diana) என்னும் ஓவியம், பிரெஞ்சு ஓவியக் கலை விதிகளுக்கு உட்பட்டதாகத் தோற்றமளிக்கிறது. இது வாசிங்டன் நகரத்திலுள்ள தேசியக் கலைக் கூடத்தில் (National Gallary of Arts) வைக்கப்பட்டுள்ளது. இரேனார் பிரெஞ்சு ஓவியக்கலை மரபினின்று மாறுபட்டுத் தனிப்பட்ட முறையில் ஓவியங்களைத் தீட்டிய காரணத்தால், பிரெஞ்சு அரசின் உதவி இவருக்குக் கிடைக்கவில்லை. இவர் தம்முடைய தேவைகளுக்காகத் தம் ஓவியங்களை விற்க வேண்டியதாயிற்று. இவர் கி.பி. 1883–ஆம் ஆண்டு வத்திகனுக்குச் சென்று அங்கு இராபேல் தீட்டிய ஓவியங்களைக் கண்டார். இதற்குப் பின்னர் இவர் தீட்டிய ஓவியங்களில் இத்தாலிய ஓவியங்களின் தாக்கம் காணப்பட்டது. வாழ்க்கையில் இறுதி நாள்களில் இரேனார் பக்கவாத நோயால் துன்புற்றார். இந்நிலையிலும் இவர் தம் ஓவியக்கலையில் தொடர்ந்து ஈடுபட்டார். இவருடைய இறுதிக்கால ஓவியங்களுள் ஒன்று பிரெஞ்சு அரசுக் கலைக்கூடத்தில் இடம்பெற்றது. இம்மகிழ்ச்சியுடன் இரேனார் 1919–ஆம் ஆண்டு இறந்தார்.