சிறந்த மலையாளக் கவிஞர். கோட்டயம் தம்புரான் காலத்திற்குப் பின்னர்க் கதகளி இலக்கியம் விரிவடைந்தபோதிலும் அபிநயத்திற்கு ஏற்றனவாகவும், இசைச் சிறப்புடையனவாகவும், இலக்கியத்தரம் உடையனவாகவும் அமைந்தன சிலவேயாகும். இவ்வாறமைந்த சில இலக்கியங்களுள் தலைசிறந்து விளங்கும் நளசரிதத்தை இயற்றியவர் உண்ணாயி வாரியர். இவரது நளசரிதம் கதகளி இலக்கியத்துறையில் மட்டுமல்லாமல், பொதுவான மலையாள இலக்கியத் துறையிலும் முதன்மை பெற்றுத் திகழ்கிறது. இவர் இந்த நூலோடு, ‘கிரிசா கலியாணம்’ ‘சீராம பஞ்சசதி’ என்னும் வேறு நூல்களையும் இயற்றியுள்ளார் என்று கூறப்படுகிறது. எனினும், நளசரிதம் மட்டுமே இவரை மலையாளக் கவிஞர் வரிசையில் முதலிடம் பெறச் செய்யும் சிறப்புற்றுத் திகழ்கிறது. பாரதத்திலுள்ள நளகதை இவருடைய நளசரிதத்திற்கு மூல நூலாக அமைந்தது. இவருடைய காலம் பற்றிக் கருத்து வேறுபாடிருப்பினும், இவர் கி.பி. 1675–ஆம் ஆண்டிற்கும் 1775–ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலப் பகுதியில் வாழ்ந்தவராவார் என்று தெரிகிறது. இவர் இரிஞ்ஞாலக்குடா என்னும் ஊரில் அகத்தூட்டு வாரியத்தில் பிறந்தவர். அவ்வூரிலுள்ள மாணிக்கம் கோயிலில் ‘கழக’ வேலை (மாலைகட்டும் தொழில்) பார்த்து வந்தார். இவருடைய இயற்பெயர் உண்ணிராமன். உண்ணிராமன் வாரியார் என்னும் பெயரே மருவி உண்ணாயி வாரியர் என்று வழங்கப்பட்டது. இவர் மலையாளமும் வடமொழியும் நன்கு சுற்றுச் சிறந்த கவிஞராக விளங்கினார். இவருடைய நளசரிதம் ஒப்பற்ற கற்பனைத் திறன் வாய்ந்தது. ஆங்கிலநாட்டுச் சேக்சுபியரின் கலையுணர்வையும் வாழ்க்கைத் தத்துவங்கள் பற்றிய சிந்தனைகளையும் நினைவுபடுத்தும் பகுதிகள் இதன்கண் நிரம்ப உள்ளன. இந்நூலை இவர் நான்கு காண்டங்களாகப் பகுத்துள்ளார். இவர் அற்புதமாகப் படைத்துள்ள இந்நூலின் சிறப்பால் கதகளி, உயர்ந்த இலக்கியத்தரத்தினை அடைந்துள்ளது. பொதுவாகக் கதகளியில் சோபன முறைப்பாடல்களே இடம் பெறும். இவர் தமது நளசரிதத்தில் சோபன முறையோடு தேசிய முறையையும் பின்பற்றிப் பாடல்களை அமைத்துள்ளார். அதனால், இவருடைய பாடல்கள் கேரள மக்களால் பெரிதும் பாராட்டப்படுகின்றன. இவரைக் கார்த்திகைத் திருநாள் மகாராசா ஆதரித்தார். அம்மன்னரே பல ஆட்டக்கதை நூல்களை இயற்றியுள்ளார். அவர் திருவனந்தபுரம் அரண்மனையில் ‘கொட்டாரம் கதகளி யோகம்’ (அரண்மனைக் கதகளிக் குழு) ஒன்றினை நிறுவினார். உண்ணாயி வாரியர் முதலிய ஆட்டக்கதை ஆசிரியர்களை அரசவையில் இடம்பெறச் செய்தார். இவருக்குத் திருவாங்கூர் மன்னர் நிலம் பரிசாக வழங்கினார்.